Last Updated : 26 Jan, 2017 08:55 AM

 

Published : 26 Jan 2017 08:55 AM
Last Updated : 26 Jan 2017 08:55 AM

என்னருமை தோழி..! 19: நாட்டிய தாரகை!

சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து வியந்து அவரை எம்.ஜி.ஆர். மனதார பாராட்டிய அந்தப் படம்... ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கிய ‘தில்லானா மோகனாம்பாள்’. இந்த படம் தயாரிப்பில் இருந்தபோதே, படம் பிரம்மாண்டமாக நட்சத்திரக் கூட்டத்துடன் சிறப்பாக தயாராகி வருவதாக எம்.ஜி.ஆருக்கு தகவல் சென்றது.

அப்போதெல்லாம் திரையுலகில் ஆரோக்கியமான போட்டி நிலவும். ‘தனது படம் நன்றாக வரவேண்டும், மக்கள் ரசிக்க வேண்டும்’ என்று திரைப்படத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் கடுமையாக உழைப்பார்கள். அதனால், படங்களின் தரமும் உயர்ந்தது. மக்களுக்கும் காலத்தால் அழியாத திரைப்படங்கள் கிடைத்தன. ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்!

அந்த வகையில், ‘தில்லானா மோகனாம் பாள்’ படம் சிறப்பாக தயாராகி வருவதாக அறிந்த எம்.ஜி.ஆர்., அந்த நேரத்தில், தான் நடித்துக் கொண்டிருந்த ‘குடியிருந்த கோயில்’ படமும் பிரம்மாண்டமாக ஜனரஞ்சகமாக வரவேண்டும் என்று விரும்பினார்.

ன்னருமை தோழி...!

‘குடியிருந்த கோயில்’ படத்திற்காக நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதும், படத்தின் இயக்குநர் கே.சங்கரிடம் கதையைக் கேட்டீர்கள். அந்த கதை, 1962-ல் வெளியான இந்தி திரைப்படமான, ‘சைனா டவுன்’ கதையின் தழுவல் என்றதும், அந்த படத்தையும் பார்த்து, உங்களது கதாபாத் திரத்தை உணர்ந்து கொண்டீர்கள். அதில் நடித்த ஹீரோ ஷம்மி கபூர், உங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர். ‘குடியிருந்த கோயில்’ படப்பிடிப்பில் ஒன்றுதலுடன் கலந்து கொண்டீர்கள்!

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத் திருந்த பாடல்களை கேட்டதும், எம்.ஜி.ஆருக்கு ஒரே உற்சாகம். ரோஷனாரா பேகம் என்கிற பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப் பொட்டின் மங்கலம்... நெஞ்சம் இரண்டின் சங்கமம்’ என்ற பாட்டைக் கேட்டு உற்சாகம் அடைந்த படக்குழுவினர், படத்திற்கு ‘சங்கமம்’ என்றே பெயரிட்டிருந்தார்கள். பின்னர், அதுவே ‘இரு துருவம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு சென்டிமென்டாகப் புகழ் சேர்க்கவும் தாயின் பெருமையை விளக்கும் வகையிலும் ‘குடியிருந்த கோயில்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!

எம்.ஜி.ஆர். முற்றிலும் வித்தியாசமாக மாறுபட்ட இரு வேடங்களில் நடித்ததை புதுமையாக கடைசியில் ‘புரட்சி நடிகர்’, ‘மக்கள் திலகம்’ என்று டைட்டிலில் இரண்டு கார்டுகள் காட்ட முடிவானது. எல்லா பாட்டுகளுமே சூப்பர் ஹிட் ஆகும் என்பதை தனது இசை ஞானத்தால் உணர்ந்த எம்.ஜி.ஆர்., இயக்குநர் சங்கரிடம் பாடல் காட்சிகளில் விசேஷ கவனம் செலுத்தும்படி கூறியிருந்தார்.

ருநாள்... படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் நீங்களும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டிருந்தபோது, இயக்குநர் சங்கர், “எம்.எஸ்.வி. இசையமைத்திருக்கும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்..சுகம்’ பாட்டிற்கு, நடிகை எல்.விஜய லட்சுமியை ஒப்பந்தம் செய்து விடலாமா..’’ என்று யோசனை கேட்க, எம்.ஜி.ஆரும் ‘‘அது துடிப்பும் வேகத்தையும் கொண்ட மெட்டு. அந்த பாட்டிற்கு அவர்தான் சரி..’’ என்று தனது சம்மதத்தை தெரிவித்துவிட்டார்.

அங்கிருந்த நீங்கள் “அது என்ன பாட்டு?” என்று கேட்க, எம்.ஜி.ஆர். ‘‘பஞ்சாபி பாங்க்ரா நடனம் பாணியில் எம்.எஸ்.வி. ஒரு மெட்டு அமைத்திருக்கிறார். கேட்கும்போதே ஆட வேண்டும் என்கிற எண்ணம் ரசிகர்களிடையே வரும்’’ என்று சொன்னதோடு, சங்கரிடம் சொல்லி தங்களுக்காக அந்த மெட்டினை இசைக்கச் செய்தார்.

அந்த மெட்டைக் கேட்டதுமே, ‘‘பாங்க்ரா நடனம்.. ஆண்கள்தான் ஆடுவார்கள். உத் வேகத்துடன் ஆட வேண்டிய ஆட்டம். தொடையையும் தோளையும் தட்டிக்கொண்டு ஆர்ப்பரித்து ஆடவேண்டிய ஆட்டம். இதில் விஜயலட்சுமியோடு சேர்ந்து நீங்களும் ஆடினால்தான் சோபிக்கும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் நீங்கள் கூறினீர்கள். பல்வேறு வகை நடனங்களை அறிந்திருந்த நாட்டிய தாரகையான நீங்கள் கூறியதை எம்.ஜி.ஆர். புறக்கணிக்கவில்லை. இருந்தாலும், சந்தேகத்துடன் இயக்குநர் சங்கரைப் பார்த்தார்.

‘‘நான் ஆடினால் நன்றாக இருக்குமா..?’’ என்று சங்கரிடம் கேட்க, அவர் ‘‘ஆடித் தான் பாருங்களேன்...’’ என்று சொல்லி விட்டார். குறிப்பிட்ட நாளன்று, நடிகை எல்.விஜயலட்சுமி படப்பிடிப்பு அரங்கிற்கு வந்தார். நடன ஒத்திகை துவங்கியதும், விஜயலட்சுமி அந்த பாட்டிற்கு அனாயச மாகவும், அற்புத பாவங்களோடும் ஆட, எம்.ஜி.ஆர். அவருடன் சேர்ந்து ஆடினார்.

நாடகத்தில் நடிக்கும் காலங்களில் எம்.ஜி.ஆர். நடனப் பயிற்சி பெற்றவர்தான். ‘மதுரை வீரன்’ படத்தில் பத்மினியுடன் ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா...?’, ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே....’ போன்ற பல பாடல் களில் சிறப்பாக ஆடியவர்தான். என்றாலும், நடனத்தில் சிறந்து விளங்கிய நடிகை எல்.விஜயலட்சுமிக்கு ஈடு கொடுத்து ஆட முடியுமா என்று அவருக்கு சந்தேகம்!

ஒத்திகை முடிந்து, சிறிது நேரம் கழித்து சங்கரும் நீங்களும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர்., ‘‘இது ஆகாத காரியம். விஜி (விஜயலட்சுமி) வேகத்திற்கு என்னால் ஆட முடியாது. என்னமா பந்து போல துள்ளித் துள்ளி ஆடறாங்க! என்னால அப்படி எல்லாம் செய்ய முடியும்னு தோணலை..’’ என்று கூறிவிட்டார்!

இயக்குநர் சங்கர் எம்.ஜி.ஆரை சமாதானம் செய்தார். ‘‘நீங்கள் சிரமப்பட வேண்டாம். பேசாமல் விஜயலட்சுமியை ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கூட சேர்ந்து ஆட விட்டுடுவோம்..’’ என்று சங்கர் சொல்ல, அப்போது, அவரது பேச்சை இடைமறித்து ஒலித்தது உங்களின் உறுதியான குரல்...!

- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x