Published : 26 Feb 2017 09:35 AM
Last Updated : 26 Feb 2017 09:35 AM

கமீல் ஃப்ளமேரியன் 10

பிரெஞ்சு வானியலாளரும், நாவலாசிரியருமான நிகோலஸ் கமீல் ஃப்ளமேரியன் (Nicolas Camille Flammarion) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரான்ஸின் வால்டிமாஸ் பகுதியில் (1842) பிறந்தார். பள்ளியில் சிறந்த மாணவனாகப் போற்றப்பட்டார். சிறு வயதிலேயே வானியலில் நாட்டம் பிறந்தது. பழைய தொலைநோக்கியை வாங்கி வந்து வானத்தை ஆராயத் தொடங்கிவிட்டார்.

* ஆங்கிலம் மற்றும் பாரம்பரிய மொழிகள் கற்றார். கூடவே பாலிடெக்னிக் கல்வியும் பயின்றார். 16 வயதில் பாரீஸின் வானியல் ஆய்வுக்கூடத்தில் மாணவராகச் சேர்ந்தார். அதற்கு முன்பாகவே ‘தி காஸ்மோகானி ஆஃப் தி யுனிவர்ஸ்’ என்ற நூலை எழுதியிருந்தார்.

* வானிலை ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தவர், ‘ஜுவிஸி-சுர்-ஆர்க்’ என்ற இடத்தில் வானிலை ஆய்வுக்கூடம் அமைத்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நெப்டியூன், ஜூபிடர் கோள்களின் நிலாக்களுக்கு ‘டிரைடன்’, ‘அமெல்த்தியா’ என்று முதன்முதலாகப் பெயரிட்டார். இது வெகு காலம் கழித்தே அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.

* ‘காஸ்மோஸ்’ அறிவியல் இதழ் நிறுவனத்தில் சேர்ந்தார். பிறகு, இகோலோ டர்காட் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் வானியல் கழகத்தின் முதல் தலைவராகவும் செயல்பட்டார். இந்த அமைப்பு சார்பாக ‘பிரான்ஸ் வானியல் சங்க இதழ்’ வெளியிடப்பட்டது. கிரகங்கள், நட்சத்திரங்கள், நிலவு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* உளவியலில் நாட்டம் கொண்டிருந்தவர் அதுகுறித்தும் ஆராய்ந்தார். இவரது ‘ஃப்ளமேரியன் என்கிரேவிங்’ என்ற முதல் கட்டுரை ‘எல் அட்மாஸ்பியர்’ இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல கட்டுரைகள், புனைகதைகள் எழுதினார். வானியல் தொடர்பான கண்டுபிடிப்புகள், தகவல்களுக்காக பிரத்யேகமாக ஒரு இதழை வெளியிட்டார்.

* வானியல் ஆராய்ச்சித் துறையை பெரிதும் பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. வானியல், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், உளவியல் தொடர்பான நூல்கள், கட்டுரைகள் என ஏறக்குறைய 50 வெவ்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார். அறிவியல் புனைகதை முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

* இவரது நூல்கள் வர்த்தகரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவை உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். இவரது ‘தி எண்ட் ஆஃப் தி வேர்ல்டு’ நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

* ஆவிகளோடு உரையாடுதல், நினைவு மனம், நினைவிலி மனதின் செயல்பாடுகள், மரணத்துக்குப் பிந்தைய உலக வாழ்க்கை குறித்த நம்பிக்கை போன்றவை குறித்தும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதினார். நுண்ணுணர்வு (டெலிபதி) மூலம் சில அசாதாரணமான விஷயங்களை விளக்க முடியும் என்று கூறியுள்ளார்.

* தனது கண்டுபிடிப்புகள், கருத்துகள் பற்றி உரையாற்றியும், எழுதியும் வந்தார். மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார். ‘உண்மையை நோக்கிய தேடலில் அறிவியல் வழிமுறையில் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். விருப்பு வெறுப்பற்ற பகுப்பாய்வில் சமய நம்பிக்கைகளைப் புகுத்தக்கூடாது’ என்று கூறினார்.

* ஃப்ளமேரியன் நிலாக் குழிப்பள்ளம் மற்றும் பல குறுங்கோள்கள் இவரது பெயரால் குறிப்பிடப்படுகின்றன. ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் எதுபற்றியாவது ஆராய்ச்சி செய்துகொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த நிகோலஸ் கமீல் ஃப்ளமேரியன் 83-வது வயதில் (1925) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x