Published : 01 Sep 2016 10:52 AM
Last Updated : 01 Sep 2016 10:52 AM

ஜி.நாகராஜன் 10

தமிழ் இலக்கியப் படைப்பாளி

தலைசிறந்த இலக்கியவாதியும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தில் இடம்பெறச் செய்தவருமான ஜி.நாகராஜன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மதுரையில் பிறந்தவர் (1929). தந்தை வழக்கறிஞர். 4-வது வயதில் தாய் இறந்ததால் மதுரை, திருமங்கலத்தில் தனது தாய்வழிப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கேயே 9-ம் வகுப்பும், பழநியில் 10, 11-ம் வகுப்புகளையும் முடித்தார்

*தந்தையிடமிருந்து இவருக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. பள்ளிப் பருவத்திலேயே தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கணிதம் இவருக்கு மிகவும் பிடித்த பாடம். மதுரைக் கல்லூரியில் இன்டர்மீடியட்டில் முதல் மாணவராகத் தேறினார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கி சர். சி.வி.ராமனிடமிருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.

*அங்கேயே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். கற்பித்தலில் உள்ள ஆர்வத்தால் காரைக்குடியிலும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். தலைசிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா அனுப்ப, கல்வி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அப்போது கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடன் ஏற்பட்ட தொடர்பால் அரசியலில் ஈடுபாடு கொண்டார்.

*வேலையை விட்டுவிட்டு முழுநேர கட்சி ஊழியராக மாறினார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியவாறே கட்சி வேலைகளையும் பார்த்துக் கொண்டார். 1952-ல் திருநெல்வேலி யில் பணியாற்றியபோது ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகிய எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

*அரசியல் கருத்து வேறுபாடுகளால் 1956-ல் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் அரவிந்தர் மீது அலாதியான ஈடுபாடு கொண்டார். பின்னர் காந்தியடிகள் மீது பற்று கொண்டார். 1950 முதலே சிறுகதைகள் எழுதி வந்தார். 1957-ல் ஜனசக்தி மாத இதழில் வெளிவந்த இவரது ‘அணுயுகம்’ சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகழ் பெற்றார்.

*சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றுமொரு நாளே’, ‘கண்டதும் கேட்டதும்’, ‘எங்கள் ஊர்’, ‘தீராக் குறை’, ‘சம்பாத்தியம்’, ‘பூர்வாசிரமம்’, ‘கிழவனின் வருகை’, ‘லட்சியம்’, ‘மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

*ஆங்கிலத்திலும் சில சிறுகதைகள், நாவல்களைப் படைத்துள்ளார். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள் தவிர, ‘புற்றுக்குடிப் புலவர்’ என்ற புனைப்பெயரில் ஞானரதம் இதழில் மூன்று கவிதைகளையும் எழுதியுள்ளார்.

*இவர் எழுதிய ‘ஓடிய கால்கள்’ என்ற கதை இவரது மறைவுக்குப் பின், ‘விழிகள்’ என்ற இதழில் வெளியானது. இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘ஜி.நாகராஜன் படைப்புகள்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

*இவரது கதை உலகம் தனித்துவம் வாய்ந்தது. சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத, விளிம்புநிலை மக்களான பாலியல் தொழிலாளர்கள், அவர்களது தரகர்கள் பற்றி துணிச்சலுடன் எழுதினார். தமிழ்க் கதைகள், நாவல்களில் அதுவரை இடம்பெறாத ஓர் உலகை தன் கதைகளின் வாயிலாக வெளிக்கொண்டு வந்தார்.

*தமிழ் இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, தமிழ் இலக்கிய எல்லைகளைப் புதிய திசையில் விரிவடையச் செய்த படைப்பாளி ஜி.நாகராஜன், 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 52-வது வயதில் மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x