Published : 13 Sep 2013 11:57 AM
Last Updated : 13 Sep 2013 11:57 AM
தமிழகத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அழகான சாலைகள், அம்யூஸ்மெண்ட் பார்க்குகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என்று பல விஷயங்கள் அங்கே இருந்தாலும், சிங்கப்பூர் அவருக்கு பிடிக்கவில்லை. எப்போதடா இந்தியா திரும்புவோம் என்று காத்திருந்தார். அந்த வெறுப்புக்கு காரணம் எச்சில். சிங்கப்பூருக்கு சென்ற நாளில் நம்ம ஊர் வழக்கப்படி எதேச்சையாக இவர் சாலையில் எச்சிலைத் துப்ப, இதைப் பார்த்த போலீஸார் அவருக்கு எக்கச்சக்கமாக அபராதம் விதித்திருந்தனர். அதிலிருந்து மனிதருக்கு சிங்கப்பூர் கசந்தது. “ஒரு மனுஷன் நிம்மதியா துப்பக்கூட கூடாதுன்னா, இந்த ஊரு இருந்தா என்ன? அழிஞ்சாதான் என்ன?” என்று மனசுக்குள் கருவிக்கொண்டு எச்சிலை கட்டுப்படுத்தி நாட்களைத் தள்ளினார். எச்சில் துப்பாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் நகர்ந்தது அவருக்கு. கடைசியில் இந்தியாவுக்கு வரும் நாள் வர, விட்டால் போதும் என்று பறந்துவந்தார். நம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் முதல் வேலையாய் சாலைக்கு ஓடி வந்தவர் தன் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டு கா...றித்துப்பி தன் சுதந்திர வேட்கையைத் தீர்த்துக்கொண்டார்.
நம்மில் பலருக்கும் சுதந்திரத்தின் அர்த்தம் இதுவாகத்தான் உள்ளது. என் இஷ்டப்படி நான் வாழ்ந்துகொள்ள நம் பெரியவர்கள் போராடி வாங்கிக் கொடுத்ததுதான் சுதந்திரம் என்ற எண்ணத்துடன், அதைத் தவறான வழிகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒரு விஷயம்தான் இந்த எச்சில். நடுரோட்டில் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பற்றி கவலையே படாமல் வெற்றிலை அல்லது பான்பராக்கை நன்றாக மென்று, அதன் சுவையை ரசித்து சாலையிலோ அல்லது சுவரிலோ வண்ணக்கோலம் தீட்டாவிட்டால் பலருக்கு தூக்கமே வராது. இதை யாராவது கேட்கப்போனால் அவ்வளவுதான். தங்கள் சுதந்திரத்துக்கு ஊறுவந்துவிட்டதைப் போல் சண்டைக்கு வந்துவிடுவார்கள். “என்னயா, இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா” என்று கேட்டு நாம்தான் குற்றவாளியோ என்ற எண்ணம் வருகிறார்போல் ஒரு வாங்கு வாங்கிவிடுவார்கள்.
எச்சிலுக்கு அடுத்ததாக நம் மக்கள் அதிக சுதந்திரத்தை உணர்வது, குப்பை கொட்டுவதில்தான். தன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மனிதன் கருதுவது இயற்கை. ஆனால், அந்த வீட்டை சுத்தப்படுத்தியபின் குப்பைகளைப் ப்ப்டுவதிதான் வில்லங்கமே வருகிறது. பொதுவாக ஒவ்வொரு தெருவின் முனைகளிலும் குப்பைகளை போடுவதற்கென்று குப்பைத் தொட்டிகள் இருக்கும். ஆனால், அதன் பக்கத்தில் சென்று குப்பையைப் போட பலரையும் அவர்களின் ஈகோ தடுக்கும். அதனாலோ என்னமோ தங்களை கூடைப்பந்து வீரர்களை போல் பாவித்து தூரத்தில் இருந்துகொண்டே குப்பைத்தொட்டியைப் பார்த்து குப்பைகளை எறிவார்கள். குப்பையும் மிகச் சரியாக தொட்டியில் விழாமல், பக்கத்தில் இருக்கும் சுவரில் பட்டுத் தெறிக்கும். இதற்கென்றே காத்திருக்கும் நாய்கள் அதன் மீது பாய, கொஞ்ச நேரத்தில் ஏரியாவே நாறிவிடும். ஒரு சிலர் தங்கள் வீட்டில் அன்று பிரியாணியென்றோ, கறிக்குழம்பு என்றோ சமூகத்துக்கு பெருமையுடன் உணர்த்திக்கொள்வதற்காகவே குப்பைகளை வாரி இறப்பதும் உண்டு.
இந்தக் குப்பை வீச்சை தடுக்கப் போகிறேன் பேர்வழி என்று சிலர் குப்பைகள் சகஜமாக விழும் இடத்துக்கு பக்கத்தில் கடவுளின் படங்களை வரைந்து வைப்பார்கள். ஆனால், இதைப் பார்த்த பிறகாவது குப்பை கொட்டும் சமாசாரம் நிற்குமா என்றால், ஊஹூம்... உடனே கண்ணப்ப நாயனார்களாக மாறி தங்களிடம் உள்ள குப்பைகளால் சாமிக்கு அபிஷேகம் செய்யாமல் நகர மாட்டார்கள். “என்னப்பா இது, சாமி மீது குப்பை கொட்டுகிறாயே?” என்று கேட்டால், “நான் காலம் காலமா குப்பை கொட்டற இடத்துல நீ ஏன் சாமி படத்தை வரைஞ்சே?” என்று நம் மீது வம்புக்கு வருவார்கள்.
எச்சில், குப்பை ஆகியவற்றுக்கு அடுத்ததாக பலரும் சுதந்திரம் எடுத்துக்கொள்ளும் மற்றொரு விஷயம் 'சாலை'. எத்தனை கூட்டமாக இருந்தாலும், என்னதான் டிராபிக் இருந்தாலும் நாம் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் வீடு போய் சேரவேண்டும் என்பது பலரின் விருப்பம். அதற்கு ஊறு வந்துவிட்டால் தாங்கவே மாட்டார்கள். சாலையின் இரு புறமும் வாகனங்கள் நெருக்கி நின்றாலும் தாங்கள் சென்றாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் எங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் நுழைந்துவிடுவார்கள். மகாபாரதத்தில் சக்கிரவியூகத்திற்குள் அபிமன்யு எப்படி நுழைந்தான் என்பதை தெரிந்துகொள்ளாதவர்கள் இவர்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சரசரவென்று சந்துகளில் நுழைந்து முன்னேறும் இவர்கள், மிகச் சரியாக அபிமன்யு சக்கரவியூகத்தில் சிக்கியதைப் போலவே மிக நெருக்கடியான ஓர் இடத்தில் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து மீள முடியாமல் போவோர் வருவோரிடமிருந்தெல்லாம் அர்ச்சனை வாங்கிக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இந்த ஏரியால ஒரு போலீஸ்காரனைக் கூட போடாம டிராபிக் போலீஸ் என்னய்யா பண்ணுது?” என்று தொண்டை கிழியக் கத்துவார்கள். சாலையில் போவதுதான் இப்படியென்றால் வண்டியை பார்க்கிங் செய்வதில் இன்னும் அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்வது சிலரது வழக்கம். “தோ... 5 நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லி வண்டியை நெரிசலான இடத்தில் நிறுத்தி, ஒட்டு மொத்த மக்களையும் டென்ஷனாக்கி தங்கள் சுதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் பலருக்கும் அலாதி சுகம்.
இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவமோ, எந்த மதத்தின் கடவுளும் தங்களை சத்தமாக வழிபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதில்லை. ஆனால், இப்போது இருக்கும் பக்தர்களுக்கோ சத்தமில்லாமல் கும்பிட்டால் கும்பிட்ட மாதிரியும் இல்லை. நாலு தெருவுக்கு மைக் கட்டி, அதில் உபயம் என்று தங்கள் பெயரைப் போட்டுக் கொண்டால், கடவுள் அருள் புரிவார் என்பது அவர்களது நம்பிக்கை. தேர்வு நேரமாச்சே, பசங்க படிக்கணுமே, நோயாளிகள் இருக்கிறார்களே என்று யாராவது கேட்டால் அவ்வளவுதான். “என் ஊருல என் சாமியைக் கும்பிடக்கூட உரிமை கிடையாதா?” என்று கடித்துக் குதறிவிடுவார்கள். அதைக் கேட்டபின் நமக்கே நாம் கடவுளின் எதிரியோ என்ற சந்தேகம் வந்துவிடும். சாமி விஷயமாவது ஏதோ பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால், தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் பிறந்தநாளில் சிலர் செய்யும் சாகசங்களை சகிக்கவே முடியாது. அவர்களைக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் ஊரையே ரெண்டுபடுத்தி விடுவார்கள்.
வசதியில்லாதவர்கள் சொகுசாகச் சென்றுவருவதற்காகத்தான் அரசாங்கம் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது. ஆனால், அதிலும் சிலர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரங்கள் இருக்கிறதே... சொல்லி மாளாது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கப் பாய்வதுபோல் ஸ்டாண்டுக்குள் பஸ் வரும்போதே ஒரு பெரும் கூட்டம் சீட் பிடிக்கச் சூழ்ந்துகொள்ளும். துண்டோ, செருப்போ, பையோ ஏதவது ஒரு பொருளை சீட்டை நோக்கி வீசி தங்கள் இடத்தை ஸ்தாபிதம் செய்துகொள்வார்கள். ஒரு சிலர் இந்த விபரீத விளையாட்டுக்கு தங்கள் குழந்தைகளைக்கூட ஜன்னல் வழியாய் பஸ்ஸுக்குள் நுழைப்பதுண்டு. இந்த வீரப் போரில் நீங்கள் தேறவில்லையென்றால், எத்தனை தூர பயணமாக இருந்தாலும் நின்றுகொண்டே போக வேண்டியதுதான். ஆனால், இத்தனை ஆக்ரோஷமாக சீட் பிடிக்கும் பஸ்களை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பார்களா என்றால் அதுதான் இல்லை. தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ, யாராவது தங்கள் உரிமையில் கைவைத்தாலோ முதலில் உடைப்பதும் பஸ்களைத்தான்.
ஒரு மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்பதும், அதைக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதும் மிகவும் உண்மை. ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது. ஆனால், நம்மில் பலரும் அதிகம் வீணாக்குவது தண்ணீரைத்தான். பல் தேய்க்க பிரஷ்ஷை எடுப்பதற்கு முன்பே பலரும் குழாயை திறந்துவிடுகிறார்கள். தங்கள் தேவை முடிந்து முகத்தை துண்டால் துடைத்த பிறகே அதை மூ வேண்டும் என்ற நினைப்பே பலருக்கும் வருகிறது. மின்சாரத்தின் நிலையும் இதுதான். நாளொன்றுக்கு 18 மணி நேரம் மின்வெட்டால் அவதிப்பட்ட நிலையிலும் இன்னும் மின்சாரத்தை இஷ்டப்படி செலவு செய்யும் சமூகம் நம் ஊரில் இருக்கிறது.
டாஸ்மாக்கில் சரக்கடித்து சவுண்ட் விடுவது, சாவு ஊர்வலத்தில் மொத்த டிராஃபிக்கையும் நிறுத்துவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, புகைப் பிடிப்பது போன்ற விஷயங்களில்தான் சுதந்திரத்தை அனுபவிப்பது என்ற மனநிலை பலருக்கும் இருப்பது வேதனைக்குரியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT