Last Updated : 28 Jul, 2016 04:35 PM

 

Published : 28 Jul 2016 04:35 PM
Last Updated : 28 Jul 2016 04:35 PM

கர்நாடக சங்கீதம் இளைஞர்களை கவர வேண்டும்

முதலில் தனது மென்மையான குரலிசையால் உலக கர்நாடக இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ள. டி.எம். கிருஷ்ணா மகசேசே விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கர்நாடக சங்கீதம் என்பது கேட்டு ரசித்தல் என பரம்பரையாக கொள்ளப்பட்டுவிட்டதோ என்னவோ ? பாட்டி ரசிப்பாள், அம்மா ரசிப்பாள், நானும் ரசிக்கிறேன் என்ற நிலை உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

முன்பெல்லாம் எம்.எஸ்.சுப்புலஷ்மி கச்சேரியை நேரடியாகக் கேட்டோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைகள் இருந்தன அவர்கள் ரசிகர்களாக இல்லாவிட்டாலும். முப்பது ஆண்டுகளாக கச்சேரிகள் கேட்டு வரும் கர்நாடக சங்கீத ரசிகை நான். சில ஹரிகதைகளை மேடைக் கச்சேரிகளாகச் செய்த அனுபவம் குழந்தை பருவத்தில் இருந்தே உண்டு. இதில் அதிசயத்தக்க அனுபவங்களும் உண்டு. இந்நிகழ்ச்சியை பள்ளியில் சென்று நிகழ்த்தியபோது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பரித்து அனுபவித்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று வழக்கமான வகுப்பறையில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை. இரண்டாவது, கதை மற்றும் பாட்டு கேட்கும் ஆர்வம். பாட்டு கேட்கும் ஆர்வத்தை விளக்கிக் கூற வார்த்தைகள்தான் இல்லை. கர்நாடக இசைப் பாடலின் நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும், கண்களில் ஆச்சரிய சந்தோஷங்களைக் காட்டுகின்றன.

பொதுவாக சபா கச்சேரிகளில் காணப்படும் ரசிகர்கள் எல்லாம் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்தான். கூடவே மூக்கால் பாடி அருகில் இருப்பவர்களை வெறுப்பேத்துபவர்கள் அதிகம். அரங்கத்திற்குள் சென்ற உடன் தலைகளைப் பார்ப்பதுதான் முதல் வேலை. கருத்த தலை காணக்கிடைக்காதா என்று ஏங்கும் பார்வை.

இந்த நிகழ்ச்சிகளில் இளைஞர்களைக் காண முடிவதில்லை என்பது வேதனை. அமெரிக்க பல்கலைக்கழக அரங்கத்திலும், சென்னை ஐஐடி அரங்கத்திலும் நடைபெற்ற கர்னாடக சங்கீத கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. திரும்பிய பக்கமெல்லாம் நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் காண முடிந்தது. இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட்ட நிகழ்ச்சிகள் இவை. ஒரு தும்மல், இருமல் இல்லை. `பின்` விழும் சத்தம் கூட இல்லை. மூச்சுவிடும் சத்தம் கூட வெளியில் கேட்காமல் அமைதியாக உள் வாங்குகிறார்கள் இசையை. பாடல் முடிந்த உடன் பலம் பொருந்திய பலத்த கரகோஷம். இந்த அனுபவம் டி.எம்.கிருஷ்ணா கச்சேரியில் கண்டேன். களித்தேன். மனம் ஏங்கியது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என இறைவனை வேண்டத் தோன்றியது.

இளைஞர்கள் இருக்குமிடங்களான பள்ளி, கல்லூரிகளில் முறையான திட்டமிடலுடன் ஒரு மணி நேரம் கர்னாடக இசைக் கச்சேரிகளை நடத்தினால் புது ரசிகர்கள் உலகத்தை உண்டு பண்ணிவிடலாம். பல புரவலர்கள் கோயில்களில் விடையாற்றி உற்சவத்தின்போது இலவச கச்சேரிகளை பக்தர்களுக்காக ஏற்பாடு செய்வார்கள்.

இதே போல் மாணவர்களுக்காக அவர்கள் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கே சென்று பகல் கச்சேரிகள் நடத்த ஏற்பாடு செய்தால், மழைத் துளி ஒன்றுக்கு ஏங்கும் சாக பட்சியின் தாகம் தீருவது போல், புது ரசிகர்கள் இல்லாத குறை தீரும். புளித்த ஏப்பக்காரர்களுக்கு இன்னொரு லட்டு (கச்சேரி) எதற்கு? வறண்ட நிலத்திற்குத்தான் வான் மழை தேவை.

இந்தியாவில் சுமார் பதிமூன்று லட்சம் பள்ளிகளும், ஐம்பது ஆயிரம் கல்லூரிகளும் இருக்கின்றன என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் தேர்வுகள் மற்றும் விடுமுறை நாட்களை நீக்கினால் ஆண்டொன்றுக்கு நூறு நாட்கள் கிடைக்கும். பத்து லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி கல்லூரிகள் என்றால் கூட ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் கச்சேரிகள். முறைப்படி திட்டமிட்டு, பல்லாயிரம் இசைக் குழுவினருக்கு தகுந்த துல்லிய பயிற்சி அளித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்பினால் சிறு துளி பெரு வெள்ளமாகுமே. தனது கச்சேரிக்கு கட்டணம் வசூலிக்காத புதுமை செய்த கர்னாடக இசைஞர், புரட்சிக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நினைத்தால் ஆகாததும் உண்டோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x