Published : 28 Jul 2016 09:27 AM
Last Updated : 28 Jul 2016 09:27 AM
நீதிமன்றத்தில், தான் திவாலாகிவிட்டதாக தெரிவித்த சைம்ஸின் சுவிஸ் ஃப்ரீபோர்ட் கிடங்கில் 45 கிரேட்டுகள் இருந்தன. அதில் 17 ஆயிரம் கிரேக்க மற்றும் ரோமன் கலை மற்றும் பழமையான கலைப் பொருட்கள், ஒயின் நிரப்பிய 3 மில்லியன் பாட்டில்கள் உள்ளிட்டவை இருந் தன. இந்தக் கிடங்கை 15 ஆண்டு களாக திறக்காமல் பூட்டியே வைத்திருந்தாராம் சைம்ஸ்.
இனி, விருத்தாச்சலம் அர்த்தநாரீஸ்வரர், பிரத்தியங்கரா தேவி கற்சிலைகளை கபூர் ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திய கதையைப் பார்க்கலாம்.
அர்த்தநாரீஸ்வரர் கடத்தப் பட்டதன் பின்னணியில் சுவாரஸ் யமான தகவல்கள் உண்டு. முற்காலச் சோழர் காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் குறித்து ஆய்வு ஒன்றை ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ விஜய்குமார் 2006-ல் மேற்கொண்டார்.
இதற்காக தமிழகத்தின் பல் வேறு கோயில்களில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை ஆய்வுசெய்த அவருக்கு, ஆஸ்தி ரேலியாவில் உள்ள ‘ஆர்ட் கேலரி ஆஃப் நியூ சவுத்வேல்ஸ்’ஸில் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தாகத் தகவல் வருகிறது. ஏதோ பொறிதட்ட, அதன் ஆதி அந்தத்தைத் துருவினார்.
அது விருத்தாச்சலம் கோயில் அர்த்தநாரீஸ்வரர் சிலை என்பது தெரிந்துவிட்டாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தனது நண்பர் ஒருவரை விருத்தாச்சலம் கோயிலுக்கு அனுப்பினார் விஜய்குமார். கோயிலுக்குப் போன அவரது நண்பர், ‘கோயில் கோஷ்ட்டத்தில் அர்த்தநாரீஸ்வர் சிலை இருக்கிறதே’ என்று சொல்ல.. குழம்பிப் போனார் விஜய்குமார். இதில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகித்த அவர், இன்னும் கொஞ்சம் விசாரணையை விசாலப்படுத்த, பல உண்மைகள் வந்து விழுந்தன.
போலி ஆவணங்கள் கொடுத்த கபூர்
அர்த்தநாரீஸ்வரர் சிலையை கபூர்தான் ‘நியூ சவுத் வேல்ஸ் ஆர்ட் கேலரி’க்கு விற்றிருக்கிறார். அந்தச் சிலையை டெல்லி செங்கோட்டை அருகில் உள்ள ‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்’ என்ற கலைப் பொருள் விற்பனைக் கடையில் இருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு 15.4.1970-ல் அப்துல்லா மேஹூப் என்பவர் வாங்கியதாகவும் பிற்பாடு மேஹூப் அதை தனது மகள் செலினா முகம்மதுக்கு (இவர் கபூருக்கு நெருக்கமான பெண் தோழிகளில் ஒருவர்) தந்ததாகவும் அதை செலினா, தனக்கு விற்றதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து ஆர்ட் கேலரிக்குக் கொடுத்திருக்கிறார் கபூர்.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் தனது நண்பரும் ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையின் நிருபருமான நிக்கேல் போலன்ட் மூலம் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப் பெறுகிறார் விஜய்குமார். கபூர் கூட்டத்தினர் கொடுத்திருந்த ஆவணங்கள் சரிதானா என்பதை சோதிக்க, டெல்லி ‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்’ கம்பெனிக்கு நேரிலும் சென்றார். பித்தளை விளக்குகள் தயாரித்து விற்கும் தங்களுக்கும் கலைப் பொருட்கள் வியாபரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொன்னது ‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்.’
‘உத்தம் சிங் அண்ட் சன்ஸ்’ கடையின் முன்னால் விஜய்குமார்.
1994-ம் ஆண்டு வரை அர்த்த நாரீஸ்வரர் சிலை விருத்தாச்சலம் கோயிலில் இருந்ததை போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறது புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம். ஆனால், 1970-ல் அது டெல்லியில் விலைக்கு வாங்கப்பட்டதாக போலி ஆவணத்தை வைத்திருந்தார் கபூர். மிகப் பழமையான அர்த்தநாரீஸ் வரர் கை உடைந்த நிலையில் இருந்தபோதும் அதைக் கடத்திக் கொண்டுபோக ஸ்கெட்ச் போட்டது கபூர் டீம். இதற்கு ஏதுவாக 2002-ல் கோயில் திருப்பணிகள் தொடங்க, ‘பின்னமான சிலையைக் கோயி லில் வைத்திருப்பது ஆகமத்துக்கு ஆகாது’ என சிலர் திட்டமிட்டு கதை கட்டினார்கள்.
விசாரணையில் மந்தம்..
இதையடுத்து, அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு அதற்குப் பதிலாக புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்வது என முடிவெடுத்து, கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திர சிங்கையும் சம்மதிக்க வைக்கிறார்கள். புதிய சிலையை செய்து கொடுப்பதற்கு டோனர் ஒருவரையும் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அவசர கதியில் அனைத்தும் நடந்து, பழைய அர்த்தநாரீஸ்வரரை, கோயிலுக்கு வெளியே தந்திரமாக நகர்த்திவிட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்கிறார்கள். பழையவர் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப் படுகிறார்.
அர்த்தநாரீஸ்வரர் ஆஸ்திரேலி யாவில் இருப்பதை ஆதாரத்துடன் விஜய்குமார் நிரூபித்த பிறகு, 31.07.2013-ல் அதாவது சிலை கடத் தப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து எஃப்.ஐ.ஆர். போடுகிறது போலீஸ். அதற்குப் பிறகும் விசாரணை மந்தமாகவே இருந்தது. அதனால் தான் வழக்குப் பதிவான பிறகும் தாயகம் திரும்ப வழி பிறக்காமல் மேலும் மூன்று ஆண்டுகள் ஆஸ்திரேலியாவிலேயே முடங்கிக் கிடந்தார் அர்த்தநாரீஸ்வரர். இவராவது எப்படியோ நாடு திரும்பிவிட்டார். ஆனால், பிரத்தி யங்கரா தேவி..?
- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project' உதவியுடன்
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் -15: கோடிகளில் விற்பனையாகும் ஐம்பொன் சிலைகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT