Published : 11 Oct 2014 11:52 AM
Last Updated : 11 Oct 2014 11:52 AM

ஜெயப்பிரகாஷ் நாராயண் 10

நாட்டுக்காக உழைத்த மக்கள் தலைவர் (லோக் நாயக்)

நாட்டுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தேசபக்தர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# பிஹார் மாநிலத்தில் பிறந்தவர். நாட்டுப் பற்றாளர். தான் படிக்கும் கல்லூரிக்கு ஆங்கில அரசின் நிதி உதவி கிடைக்கிறது என்று தெரிந்தவுடன், கல்லூரிப் படிப்பையே உதறிய லட்சியவாதி.

# தீவிர சுதேசி. கையால் நெய்த ஆடை, கிராமங்களில் தயாரித்த காலணிகளையே அணிந்தார். காலணியை பாலிஷ் செய்யக்கூட கடுகு எண்ணெயைப் பயன்படுத்திய கறார் பேர்வழி.

# ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கைதானவர், சிறையில் இருந்து தப்பி நேபாளம் சென்றார். அங்கு ‘ஆசாத் தாஸ்தா’ விடுதலைப் படையைத் திரட்டும்போது மீண்டும் கைது செய்யப்பட்டார்.

# மார்க்சியக் கொள்கைகளில் அதிக ஈடுபாடும் பற்றும் கொண்டவர். ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மினு மசானி ஆகியோருடன் இணைந்து ஆச்சார்ய நரேந்திரதேவ் தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவினார்.

# நாடு சுதந்திரம் பெற்ற பிறகுகூட, அதிகாரம் தரும் பதவி எதையும் இவர் விரும்பவில்லை. இவர் தொடங்கிய பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, காங்கிரஸின் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது.

# பிஹார், குஜராத் மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ‘சத்ர யுவ பரிஷத்’, ‘சத்ர சங்கர்ஷ சமிதி’ ஆகிய இயக்கங்களை ஆதரித்தார்.

# இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் ‘முழுப் புரட்சி’ இயக்கம் தொடங்க அறைகூவல் விடுத்தார். அரசின் உத்தரவை ராணுவம் ஏற்கக்கூடாது என்று கூறியதற்காக கைது செய்யப்பட்டார்.

# பிரஜா சோஷலிஸ்ட், பாரதிய லோக் தளம், ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, பாரதிய ஜனசங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இவர் உருவாக்கியதுதான் ஜனதா கட்சி.

# மக்களுடைய சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக பி.யு.சி.எல்.டி.ஆர். என்ற மனித உரிமை இயக்கத்தை 1976-ல் தொடங்கினார்.

# மனைவி பிரபாவதி தேவி. இவரும் காந்தியவாதி. எங்கே, குழந்தை பிறந்தால் பொதுத் தொண்டுக்கு இடையூறாக இருக்குமோ என்று எண்ணி குழந்தையே பெற்றுக்கொள்ளவில்லை இத்தம்பதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x