Published : 28 Mar 2017 09:57 AM
Last Updated : 28 Mar 2017 09:57 AM
பெண் கல்வி, சமூக நலனுக்குப் போராடியவர்
இந்தியாவில் பெண் கல்வியின் முன்னோடி என போற்றப்பட்டவரும், சிறந்த கல்வியாளருமான வீணா மஜும்தார் (Vina Mazumdar) பிறந்த தினம் இன்று (மார்ச் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கல்கத்தாவில் நடுத்தரக் குடும்பத்தில் (1927) பிறந்தார். தந்தை பொறியாளர். கல்கத்தா செயின்ட் ஜான்ஸ் டயோசிஸன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
* பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் ஆசுதோஷ் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் பயிலும்போதே பெண்கள் சொத்துரிமை தொடர்பான இந்து மதச் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
* இந்தியப் பிரிவினையின்போது நடந்த கொடூரங்களால் மிகவும் வேதனை அடைந்தார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆக்ஸ்போர்டு செயின்ட் ஹ்யூக்ஸ் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பின்னர், எம்.ஃபில். பயின்றார். பாட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாட விரிவுரையாளராக தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார்.
* பாட்னா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலகத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். சிம்லாவில் உள்ள இந்திய உயர்கல்வி நிறுவனத்தில் ஃபெலோவாக சேர்ந்தார்.
* ‘பல்கலைக்கழகக் கல்வி மற்றும் இந்தியாவில் சமூக மாற்றம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதினார். சமூகப்பணிகளில் கவனம் செலுத்தியபடியே, பெண்கள் குறித்த அறிவுசார் ஆராய்ச்சிகளையும் ஒன்றிணைத்து செயல்பட்டார். இதை ‘பெண்கள் ஆராய்ச்சி இயக்கம்’ என்று குறிப்பிட்டார்.
* இந்தியப் பெண்களின் நிலை குறித்து ‘சமத்துவத்தை நோக்கி’ (டுவர்ட்ஸ் ஈக்வாலிட்டி) என்ற பெயரிலான முதல் அறிக்கையை ஒரு குழு 1974-ல் வெளியிட்டது. அதன் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிக்கை இந்தியாவில் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் பெண்கள் இயக்கத்துக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
* இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் தொடங்கப்பட்ட பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநராகப் பொறுப்பேற்றார். ஓய்வு பெறும்வரை இங்கு பணியாற்றினார். இந்த அமைப்பு பெண் கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தைக் கொண்டுவந்தது.
* டெல்லியில் உள்ள பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் தேசிய ஆராய்ச்சி பேராசிரியராகவும் பணியாற்றினார். 1982-ல் தொடங்கப்பட்ட மகளிர் கல்விக்கான இந்திய சங்கத்தின் நிறுவன உறுப்பினராக செயல்பட்டார். ‘மெமரீஸ் ஆஃப் ரோலிங் ஸ்டோன்’ என்ற நினைவுச் சித்திரத்தை வெளியிட்டார்.
* பெண் கல்வி, சமூக மாற்றம், பெண்கள் மேம்பாடு, பெண்கள் அதிகாரம் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார். ‘மகளிர் ஆய்வுகளுக்கான தெற்காசியப் பாட்டி’ என அன்புடன் குறிப்பிடப்பட்டார். ‘வீணா தீ’ (வீணா அக்கா) என்றும் மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்டார்.
* மிகுந்த மன உறுதி படைத்தவர். தவறு, அநீதி என்று தெரிந்தால் தட்டிக்கேட்கும் போர்க்குணம் கொண்டவர். தொலைநோக்கு சிந்தனையாளர். சிறந்த பேச்சாளர். விவாதங்களில் பங்கேற்று, தன் கருத்தை வலுவாக எடுத்துரைக்கும் திறன் பெற்றவர். மிகவும் எளிமையானவர். பெண் கல்விக்காகவும், சமூக நலனுக்காகவும் இறுதிவரை போராடியவரும், சிறந்த கல்வியாளருமான வீணா மஜும்தார் 86-வது வயதில் (2013) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT