Published : 15 Jul 2016 05:00 PM
Last Updated : 15 Jul 2016 05:00 PM
கோயில் நகரமான காஞ்சிபுரம், அதன் நெடிதுயர்ந்த கோபுரங்களுக்காகவும், பிரமிடுகளைப் போன்ற வாயில்களைக் கொண்ட வளைவுகளுக்காகவும் அதிகமாக அறியப்படுகிறது. நல்ல விஷயம். அதே நேரத்தில் சூடான கோபுரங்களை ஸ்டீல் டம்ளர்களில் அடைத்திருப்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
புரியவில்லையா, காஞ்சிபுரத்தில் சிறப்பாகத் தயாராகும் டம்ளர் இட்லிகள்தான் அவை. கோபுரத்தின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் கோயில் இட்லிக்கும், நிஜ கோபுரத்தின் வடிவத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.
இந்த இட்லியைத் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 4 - 5 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் அருகில் இருக்கும் தனியார் உணவு விடுதியில் இது அன்றாட மெனுவில் இடம்பெறுகிறது. இந்த கோவில் இட்லி வேறு வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டாலும், இட்லி பொடி மற்றும் புதினா சட்னியோடுதான் அதிகம் பரிமாறப்படுகிறது.
செய்முறை
கெட்டியாக அரைக்கப்பட்ட இட்லி மாவை, ஸ்டீல் பக்கெட்டில் ஊற்றுகின்றனர். புளிப்பதற்காக அதை இரவு முழுக்கவோ அல்லது குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கோ அப்படியே வைக்கின்றனர். வழக்கமாக அரைக்கப் பயன்படுத்தும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றோடு தயிர், சோடா உப்பு, கறிவேப்பிலை, நெய், முந்திரி ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.
கவிழ்த்தி வைக்கப்பட்டுள்ள டம்ளர்களை எடுத்து அவற்றில் நெய் பூசுகின்றனர். பின்னர் தயார் நிலையிலுள்ள மாவை டம்ளர்களில் ஊற்றுகின்றனர். பின்னர் அவற்றை எடுத்து நீராவியில் வேக வைக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மூடியைத் திறந்தால் சூடு பறக்க இட்லிகள் வெந்திருக்கின்றன. சூடான, பஞ்சு போன்ற கோபுரங்கள் தங்களைச் சாப்பிடச் சொல்லிக் காத்திருக்கின்றன. அந்த உணவு விடுதியில் தினந்தோறும் சுமார் 100 ப்ளேட் இட்லிகள் விற்பனையாகின்றன.
செய்வதைப் பார்த்தால் கடினமாகத் தோன்றுகிறதா? இருக்கலாம், ஆனால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைத்தான் சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டவர்களும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். செய்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்ணுக்கும் வயிற்றுக்கும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது இந்த காஞ்சிபுரம் டம்ளர் இட்லி.
கண்ணுக்கு விருந்தாகும் காஞ்சிபுரம் இட்லியைக் காண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT