Published : 04 Apr 2017 10:12 AM
Last Updated : 04 Apr 2017 10:12 AM
தமிழ் அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர்
சிறந்த தமிழ் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான கா.ம.வேங்கடராமையா (Ka.Ma.Venkataramiah) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* சென்னை பூந்தமல்லி அடுத்த காரம்பாக்கத்தில் (1911) பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு. பள்ளிக்கல்வி முடிந்ததும் தமிழ் ஆர்வம் காரணமாக பிஓஎல் தேர்ச்சி பெற்றார். சென்னை லயோலா கல்லூரி யில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார்.
* செங்கல்பட்டில் உள்ள தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1981-ல் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அரிய கையெழுத்து சுவடித் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
* சமஸ்கிருதம், இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக செயல்பட்டார். அப்போது பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் திருவனந்தபுரம் பன்னாட்டு திராவிட மொழியியல் கழகத்தில் பணியாற்றினார். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சைவ சமய சொற்பொழிவாளராகவும் புகழ்பெற்றார். திருமுறைகளில் புலமை பெற்றவர். இவரது பெரும்பாலான ஆய்வுகள் அதையொட்டியே இருந்தன. இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
* திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பிறகும் பல்வேறு மொழி ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் படைத்த சிவனருள் திரட்டு நூலில் 500 பாடல்களுக்கு உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
* கல்வெட்டு வரலாற்றுத் துறைகள், சங்க நூல்கள், பக்தி நூல்கள், இலக்கண நூல்களிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். பொதுவாக இவரது நூல்கள், கட்டுரைகளில் புதிய, அரிய தகவல்கள் காணப்படும். திருக்குறள் உரைக்கொத்து பதிப்பித்தபோது, பிரபலங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.
* ஏராளமான தமிழ் அறிஞர்களை உருவாக்கியுள்ளார். ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழ்க் கையேட்டு நூலையும் வெளியிட்டுள்ளார். இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர்கால அரசியல் தலைவர்கள், ஆய்வுப் பேழை, நீத்தார் வழிபாடு, திருக்குறள் சமணர் உரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்துள்ளார்.
* தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை அக்காலச் சமுதாய வரலாற்றுடன் சேர்த்து ஆராய்ந்து முழுமையாக வெளியிட்டார். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்கு குறிப்புரை எழுதி 1949-ல் பதிப்பித்தார். திருக்குறளுக்கு ஜைனர் எழுதிய உரை, பன்னிரு திருமுறை, கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்தார்.
* தான் பதிப்பித்த நூல்களின் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதாவது செய்திகள், குறிப்புகள் கிடைத்தால் அவற்றையும் சேர்த்து குறிப்பிடுவார். சமரசம் செய்துகொள்ளாத, கண்டிப்பான நிர்வாகத் திறன், நேர்மை, நல்லொழுக்கம், பக்தி, உதவும் பண்பு, நன்றி மறவாமை என அத்தனை நல்ல பண்புகளையும் கொண்டிருந்தார்.
* இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சிவநெறிச் செல்வர், கல்வெட்டு ஆராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார். இறுதிவரை தமிழ்த் தொண்டு ஆற்றிவந்த கா.ம.வேங்கடராமையா 83-வது வயதில் (1994) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment