Published : 13 Oct 2014 12:41 PM
Last Updated : 13 Oct 2014 12:41 PM

‘வீணை’ சிட்டி பாபு 10

வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர் ஹனுமானுலு. செல்லமாக ‘சிட்டிபாபு’. அதுவே பின்னாளில் நிலைத்துவிட்டது.

• அவர் வீணை வாசிக்கத் தொடங்கியபோது வயது 5. அப்போதே அப்பாவின் கவனக்குறைவான ஸ்ருதிகளைத் திருத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 12 வயதில் முதல் கச்சேரி அரங்கேற்றம். மஹா மஹோபாத்யாய டாக்டர் இமானி சங்கர சாஸ்திரி இவரது குரு.

• 1948-ல் ‘லைலா – மஜ்னு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்தது குடும்பம்.

• சிங்கிதம் சீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’ (1974) படத்துக்கு இசையமைத்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் சிட்டிபாபுவின் வீணை இசை தனி முத்திரையைப் பதித்தது.

• எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவல் சினிமாவாக்கப்பட்டபோது அதற்கு இசை அமைத்தார். பாடல் இல்லாமல் பின்னணி இசையை மட்டும் கொண்ட அந்த படம் விருது பெற்றது.

• வீணையில் அற்புதமான தொனியில் வெவ்வேறு ஒலிகளை எழும்பச் செய்து புதிய பாணியை படைத்தார். இனிமையான குரல் போன்ற ஒலியை வீணை மூலம் வெளிப்படுத்துவது அவரது தனித்த அடையாளம்.

• கிரிக்கெட், டென்னிஸ், செஸ் மீது ஆர்வம் அதிகம். தோற்றாலும் சரி, வென்றாலும் சரி.. இந்திய கிரிக்கெட் அணியை விட்டுக் கொடுக்கவேமாட்டார். விம்பிள்டன் இறுதிப் போட்டிகளை பெரும்பாலும் பார்த்துவிடுவார். ரஷ்ய செஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் அலகெய்னின் தீவிர ரசிகர்.

• ‘‘என்னைப் பொறுத்தவரை ‘MUSIC’ என்பது இன்பமான விஷயம். அதில் ‘M’-யை நீக்கிவிட்டால் ‘U SICK’ (துன்பத்தில் நீங்கள்) என்று அடிக்கடி சொல்வார்.

• தமிழ், ஆங்கிலம், தெலுங்கு புத்தகங்களை அதிகம் படிப்பார். ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் புத்தகங்கள் என்றால் மிகவும் பிரியம். தமிழ் இலக்கியங்கள் குறித்து விவாதிப்பதும் பிடித்தமான விஷயம்.

• தமிழகம், ஆந்திரம், மத்தியப் பிரதேச அரசுகள், திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பல அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஒருமுறை இவரது இசையில் மயங்கிய மைசூர் மகாராஜா உணர்ச்சிவசப்பட்டு, மேடையிலேயே தன் கழுத்தில் இருந்த தங்க மாலையை சிட்டிபாபுவுக்கு அணிவித்தார். உலகம் முழுவதும் சுற்றி பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர் சென்னையில் 1996-ல் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x