Last Updated : 09 May, 2017 10:49 AM

 

Published : 09 May 2017 10:49 AM
Last Updated : 09 May 2017 10:49 AM

ஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை

ஊரே அந்த வீட்டின் முன் கூடி யிருந்தது. பூங்கோதைக் கும்கூட அவள் கணவன் மேல் சந்தேகம் இருக்கவே செய்தது. கோபமாய் அமர்ந்திருந்த சின்னராசுவை நெருங்கிய அவள், “இப்போ ஊரே கூடிவந்து நிக்குது. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்றாள்.

அதற்கு சின்னராசு, “இங்க பாரு…. நான் முன்ன மாதிரி எல்லாம் இல்ல. திருடிப் பொழைக்கிறதை விட்டுட்டேன். கட்டுன பொண்டாட்டி, நீயே என்னை நம்பலை... அவங்களால என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிக்கச் சொல்லு” என்றான் முடிவாக.

அவன் பேசியதைக் கேட்ட ஊராரும் போலீஸில் புகார் கொடுப்பதாய் சொன்னார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறை ஜீப் புழுதியைக் கிளப்பிவிட்டு சின்னராசுவின் வீட்டின் முன் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்ட ரும் கான்ஸ்டபிள்களும் சின்னராசுவின் சட்டையைப் பிடித்து இழுத்து வந்தனர். சின்னராசுவின் கால்களை அவனது 6 வயது மகனும், 4 வயது மகளும் பிடித்துக்கொண்டு, “அப்பா போவா தப்பா...” என்று கதறினர். அவர்களைப் பிடித்து இழுத்த பூங்கோதையின் கண் களிலும் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஆறுமாத தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டான் சின்னராசு. ஒரு மாதம் வரையில் அந்த கிராமம் எதையும் திருட் டுக் கொடுக்காமல் நிம்மதியாய் இருந்தது. ஊராரும், “பார்த்தீங்களா... திருட்டுப் பயலை ஜெயில்ல போட்டதும், திருட்டே நடக்கலை” என்று பேசிக்கொண்டனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி சில நாட் கள்கூட நீடிக்கவில்லை. பழையபடி கோழி, ஆடு, மாடு, சைக்கிள், மோட் டார், நெல் மூட்டை என பலவும் திருடு போயின. இதைக் கேள்விப்பட்ட பூங்கோதை, “ஐயோ... நானும் என் புருஷனை இன்னும் திருந்தலைன்னு நெனைச்சிட்டேனே” என்று பதறினாள்.

ஊராரிடம் சென்று முறையிட்டாள். அவர் களும் சின்னராசு திருந்திவிட்டதையும் வேறு யாரோதான் சின்னராசுவின் பெய ரில் திருடுகிறார்கள் என்பதையும் உணர்ந் தார்கள். அதன் விளைவாய் சின்னராசு வின் மேல் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று, அவனை விடுவிக்கவும் செய் தார்கள்.

இப்போது சிறையிலிருந்து எந்தச் சலனமுமின்றி வெளியே வந்த சின்னராசு, அங்கிருந்த காவல் அதிகாரியிடம், “சார், என்னை உங்க ஜீப்லயே கொண்டுபோய் என் வீட்ல விடுறீங்களா சார்?” என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அவர், “ஏ.. பார்ரா ஐயாவ. உன்னை விட்டதே பெருசு. இதுல வீட்ல வேற விடணுமா?” என்றார் எகத்தாளமாக.

அதற்கு சின்னராசு காவல் அதிகாரியை கும்பிட்டபடியே, “சார், நான் எனக்கா கவோ என் ஊர்க்காரங்க பார்க்கணும்ங் கிறதுக்காகவோ இதைக் கேக்கலை. என் குழந்தைகளுக்காகத்தான் இதைக் கேட்கிறேன். அன்னைக்கு என் சட்டை யைப் பிடிச்சு இழுத்து ஜீப்ல ஏத்தி னதை அவங்க என்னைக்குமே மறக்க மாட்டாங்க.

தங்களோட அப்பா ஒரு திரு டன்னும் அவங்க மனசுல பதிஞ்சி போயிருக்கும். இப்போ நீங்களே உங்க ஜீப்ல என்னை அழைச்சிக்கிட்டுப்போயி என் குழந்தைகள் கிட்டயும் நான் நிரபராதின்னு சொன்னா, அவங்க அதை சந்தோஷமா ஏத்துக்குவாங்க. அதோட என் அடுத்த தலைமுறையும் நல்லாயிருக்கும்” என்றான்.

அவன் கூறிய பதிலில் நெகிழ்ந்துபோன அந்த அதிகாரி சின்னராசுவை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அந்த கிராமத்தை நோக்கி விரைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x