Last Updated : 07 Jun, 2016 03:04 PM

 

Published : 07 Jun 2016 03:04 PM
Last Updated : 07 Jun 2016 03:04 PM

தமிழுக்கென்று மகத்தான ஒரு பேரகராதி!

சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தமிழ்ப் பேரகராதியை

நாம் காண முடியும். | இணைப்பு கீழே |

உலக மொழிகளின் அகராதிகளிலேயே ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகம் வெளியிட்ட பேரகராதிக்குத் தனியிடம் உண்டு. 1857-ல் ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு, பெரிய அறிஞர்கள் குழுவின் முக்கால் நூற்றாண்டு உழைப்புக்குப் பிறகு 1928-ல் 10 பெருந்தொகுதிகளாக வெளியானது இந்த அகராதி. 1933-ல் 12 தொகுதிகளாகவும் கூடுதலாக ஒரு பின்னிணைப்புடன் 13 தொகுதிகளாக இந்தப் பேரகராதி வெளியானது. இந்த அகராதியின் முதன்மை ஆசிரியர் ஜேம்ஸ் மர்ரே, அகராதி முழுமையாக வெளியாவதற்கு முன்பே இறந்துபோனாலும் வரலாற்றில் மகத்தான அகராதியியலாளராக அவர் இடம்பெற்றுவிட்டார்.

ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதிபோல, தெற்காசிய மொழிகளில் ஓர் அகராதியைக் குறிப்பிட வேண்டுமென்றால் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 'தமிழ்ப் பேரகராதி'யை (Tamil Lexicon) குறிப்பிட வேண்டும். எஸ்.வையாபுரிப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு 1924-க்கும் 1939-க்கும் இடைப்பட்ட காலங்களில் 7 தொகுதிகளாக (இணைப்புத் தொகுதி உட்பட) இந்தப் பேரகராதி வெளியானது. சற்றேறக்குறைய ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி பணி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் தமிழ்ப் பேரகராதியின் பணிகளும் நடந்தன என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். ஏழு தொகுதிகளும் சேர்த்து 4,351 பக்கங்களும், 1,17,762 சொற்களும் கொண்டிருந்தன. இது தமிழ்-தமிழ்- ஆங்கிலம் அகராதி என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வின்ஸ்லோவின் தமிழ் அகராதியை விரிவாக்கி வெளியிடலாம் என்று 1905-ல் சர் ஃப்ரெடெரிக் நிக்கோல்ஸன் மதறாஸ் மாகாண அரசிடம் பரிந்துரைத்ததிலிருந்து இந்தப் பேரகராதியின் வரலாறு தொடங்குகிறது. இதை ஏற்றுக்கொண்ட அரசு, அகராதிப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ. 10,500 ஒதுக்கியது. அகராதி முடியும் தறுவாயில் அதுவரையிலான மொத்த செலவு ரூ.4,10,000 என்று வையாபுரிப்பிள்ளை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அகராதி குழுவில் மிகச் சிறந்த பன்மொழி அறிஞர்கள் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மு.ராகவையங்காரில் ஆரம்பித்து நீளும் பட்டியலைக் கொண்டது ஆசிரியர் குழுவும் ஆலோசகர்கள் குழுவும். அகராதிக் குழுவினரின் பட்டியல் இந்தப் பேரகராதியில் 10 பக்கங்கள் நீள்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இந்த அகராதிக்காக ஆங்கிலேயர் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். கூடுதலாக, ஜி.யு. போப் திரட்டிவைத்த சொற்களும் தகவல்களும் இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முன்னோடி தலித் சிந்தனையாளர் அயோத்திதாசரின் பங்களிப்பும் இந்தப் பேரகராதியில் இருந்திருக்கிறது.

இந்த அகராதியை உருவாக்குவதற்கு அடித்தளமாக தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் ஆரம்பித்து பக்தி இலக்கியம், இடைக்கால இலக்கியம், சிற்றிலக்கியங்கள், 19-ம் நூற்றாண்டு இலக்கியங்கள் என்று பெரும் இலக்கியப் பரப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் வானியல், சோதிடம், சித்த மருத்துவம், கணிதம் என்று பல துறைகளைச் சேர்ந்த நூல்கள், சுவடிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த இலக்கியங்களின் பிழையற்ற பதிப்புகளைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமம். அதையும் சிரத்தையுடன் செய்திருக்கிறார்கள்.

நூல்களைத் தொகுத்த பிறகு அவற்றிலிருந்து சொற்களைச் சேகரிக்க ஆரம்பித்து, காலந்தோறும் சொற்கள் அடைந்திருக்கும் மாற்றங்களையும் பதிவுசெய்துகொண்டனர். இப்படி விரிவான பணிகளை மேற்கொண்ட இந்த அகராதிக் குழுவின் தனிச்சிறப்பு என்னவென்றால் அது பின்பற்றிய நவீன அகராதியியல் நெறிமுறைகள்தான். மொழியியலையும் அகராதியியலையும் பின்பற்றித் தமிழில் முதலில் கொண்டுவரப்பட்ட அகராதி சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதிதான். இந்த அகராதியின் நவீனப் பார்வைக்காக மரபார்ந்தவர்களிடமிருந்தும், தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தனித்தமிழ் ஆதரவாளர்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பை அகராதி சந்தித்தது. அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் ஒருசில உண்மைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டியும் இந்த அகராதி பெரிய சாதனைதான் என்பதில் சந்தேகமே இல்லை.

முதல் பதிப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து 1982-ல் இரண்டாம் பதிப்பு வெளியானது. அண்மையில் தமிழில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு இந்த அகராதியை விரிவாக்கும் பணிகள் சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்டன. முனைவர் வ.ஜெயதேவனை ஆசிரியராகக் கொண்ட இந்த விரிவாக்கப் பணியின் முதல் தொகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. விரிவாக்கப்பட்ட அகராதி வெளிவர ஆரம்பித்துவிட்டதால் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த முதல் பதிப்பு இப்போது கிடைப்பது போல் தெரியவில்லை. எனினும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தமிழ்ப் பேரகராதியை நாம் காண முடியும் (இணைப்பு: http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/).

சிகாகோ பல்கலைக்கழகத்தின் தளத்தில் கதிரைவேற்பிள்ளை அகராதி, ஃபெப்ரிசியஸ் அகராதி, வின்ஸ்லோ தமிழ் அகராதி போன்றவற்றையும், தெற்காசிய மொழிகளின் பிற அகராதிகளையும் காண முடியும் (இணைப்பு: http://dsal.uchicago.edu/dictionaries/).

இணையத்தில் தமிழ்ப் பேரகராதியை பயன்படுத்துவது எப்படி?

>http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ என்ற வலைதளத்தை நாடுங்கள். அதன் முகப்புப் பக்கத்தில், Look up an entry word என்ற கட்டத்துக்குள் 'செம்புலம்' என்று டைப் செய்து search பட்டனை அழுத்துங்கள். அதன்பின் வரும் பக்கத்தில் Click here for a key-word-in-context display என்ற இணைப்பை அழுத்தினால், உங்கள் தேடலுக்கான முடிவுகள் கிடைக்கும். இதே முறையை ஆங்கிலச் சொற்கள் இட்டும் தேடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x