Published : 26 Jan 2017 09:22 AM
Last Updated : 26 Jan 2017 09:22 AM
கன்னட மொழியில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும் கன்னட இலக்கியத்தின் முன்னணி படைப்பாளருமான கே.எஸ்.நரசிம்மஸ்வாமி (K.S.Narasimhaswamy) பிறந்த தினம் இன்று (ஜனவரி 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலத்தின் கிக்கேரே என்ற இடத்தில் பிறந்தவர் (1915). மைசூரில் ஆரம்பக் கல்வி கற்றார். 1934-ல் பெங்களூரில் உள்ள மத்திய கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறுவயது முதலே புகழ் பெற்ற பல கவிஞர்களின் கவிதை களை ஆர்வத்துடன் வாசித்தார்.
* மைசூர் நகராட்சியில் குமாஸ் தாவாகத் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் கவிதைகளை எழுத ஆரம்பித்தார். இவரது கவிதைகள் காதல், நேசம், நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. அன்றைய கன்னட இலக்கிய உலகம் சிக்கலான, கடினமான மொழிநடையில் இருந்தன.
* இவரது புதுமையான, எளிய கவிதை நடை, தனித்துவம் வாய்ந்தவையாக, மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமையாக இருந்தது. இவரது படைப்புகள் இளைஞர் களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
* இவரது கவிதைகளில் பெரும்பாலானவை கிராமப்புறப் பின்னணியைக் கொண்டிருந்தன. அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட புதிய சமுதாயம் பிறக்க வேண்டும் என்ற இவரது ஏக்கமும் கவிதைகளில் பிரதிபலித்தன.
* வாசகர்களாலும், சக இலக்கியவாதிகளாலும் ‘கே.எஸ்.நா’ என்று நேசத்துடன் குறிப்பிடப்பட்டார். 1942-ல் வெளிவந்த இவரது மாஸ்டர்பீஸ் எனப் போற்றப்பட்ட ‘மைசூரு மல்லிகே’ கவிதைத் தொகுப்பு பரபரப்பாக விற்பனையானது.
* கன்னடத் திரைப்பட இயக்குநர் டி.எஸ்.நாகபரானா இவரது கவிதைகளைத் தழுவி திரைப்படம் தயாரித்தார். இதற்காக 1991-ன் மிகச் சிறந்த பாடலுக்கான தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் கிடைத்தன. மேலும், ‘கவுரி’, ‘தும்பிட கோடா’, ‘மானே ஆலியா’, ‘சர்வமங்கள’, ‘ஆதங்கா’, ‘கிரேசி குடும்பா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார். 1978-ல் வெளிவந்த ‘தந்து மல்லிகே’ என்ற இவரது கவிதைத் தொகுப்புக்காக ‘பம்பா’ விருதும், ‘தெரடா பாகிலு’ கவிதைத் தொகுப்புக்காக 1978-ல் சாகித்ய அகாடமி விருதும் பெற்றார்.
* ‘உங்குரா’, ‘மவுனதலி மாதா ஹுண்டுகுதா’, ‘மனேயிண்ட மனேகே’, ‘தீபா ஸாலினா நடுவு’, ‘ஐராவதா’ மற்றும் ‘சஞ்சே ஹாடு’ உள்ளிட்ட எண்ணற்ற கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மேலும் ‘உபாவனா’, ‘தமயந்தி’, ‘ஷிலாலதே’ மற்றும் ‘ஸ்ரீமல்லிகே’ உள்ளிட்ட சில உரைநடை நூல்களையும், பல மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார்.
* ‘மார்க் ட்வைனின் தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்’, ‘மீடியா’, ராபர்ட் பர்ன்னின் கவிதைகளை, ‘ராபர்ட் பர்ன்ஸ்னா பிரேமகீதகளு’ என மொழிபெயர்த்தார். 14-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், சில சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், 11 மொழிபெயர்ப்பு நூல்களைப் படைத்துள்ளார்.
* 30 ஆண்டுகளுக்கும் மேல் கன்னட இலக்கியத்துக்கு இவரது பங்களிப்புகளுக்காக கன்னட சாகித்ய அகாடமி விருது, குமரன் ஆஸான், மாஸ்தி பிரசஸ்தி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். பெங்களூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
* சாகித்ய அகாடமி மற்றும் கன்னட சாகித்ய பரிஷத் ஆகியவற்றின் ஃபெலோஷிப்பும் கிடைத்தன. கன்னட இலக்கியத்தின் நவோதயா இயக்கத்தின் முக்கியப் படைப்பாளியும் கன்னட மொழியின் ‘நவீன காதல் கவிதைகளின் தந்தை’ எனப் போற்றப்பட்டவருமான கே.எஸ்.நரசிம்மஸ்வாமி 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT