Published : 05 Mar 2017 11:24 AM
Last Updated : 05 Mar 2017 11:24 AM
அமெரிக்க உயிரி அறிவியலாளரும் உயிரணுக்கள், அவற்றின் வளர்ச்சி குறித்த கோட்பாடுகளை வகுத்தவருமான லின் மர்குலிஸ் (Lynn Margulis) பிறந்த தினம் இன்று (மார்ச் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் சிகாகோ நகரில் (1938) பிறந்தார். தந்தை வழக்கறிஞர், வர்த்தகர். இலினாய்ஸ் மாநில அரசின் துணை வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். ஹைடே பார்க் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் மர்குலிஸ். படுசுட்டியான இவர் 14 வயதுக்குள் பள்ளிக் கல்வியை முடித்தார்.
* சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே அறிவியலில், குறிப்பாக உயிரியலில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல விஞ்ஞானிகளின் நூல்களைப் படித்தார். பாரம்பரியம், மரபணுக் கூறுகள், தலைமுறைகளுக்கு இடையிலான பொதுவான தொடர்புகள் குறித்து இவருக்குள் பல கேள்விகள் எழுந்தன.
* இதற்கு விடை தேடி ஏராளமான நூல்களைப் படித்தார். பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் விலங்கியல், மரபியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பெர்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மரபணுக்கள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார்.
* பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறை ஆசிரியராகவும், இறுதியாக பேராசிரியராகவும் பணியாற்றினார். இங்கு 22 ஆண்டு கள் பணியாற்றினார். பின்னர் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டார்வினின் ‘தக்கது பிழைக்கும்’ என்ற கோட்பாட்டை தீவிரமாக ஆதரித்தார்.
* நுண்உயிரிகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். எண்டோசிம்பயாடிக் கோட்பாட்டை உருவாக்கினார். உயிரணுக்களில் இருக்கும் சில நுண்அமைப்புகள் பரிணாமத்தில் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* செல் மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டு காலம் ஈடுபட்டார். செல்களின் உட்பகுதி கட்டமைப்புகள் குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். தன் கருத்துகளை 1970-ல்
* ‘ஆரிஜின் ஆஃப் யூகார்யோடிக் செல்ஸ்’ என்ற நூலில் எழுதியுள்ளார். முதலில் மறுக்கப்பட்ட இவரது கோட்பாடு பின்னர் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* சிம்போசிஸ் இன் செல் எவால்யூயேஷன் என்ற 2-வது நூல் வெளிவந்தது. கையா (Gaia) என்ற கருதுகோளை பிரிட்டன் விஞ்ஞானி ஜேம்ஸ் லவ்லாக்குடன் இணைந்து உருவாக்கினார். இது மிக முக்கிய சூழலியல் கண்ணோட்டமாக விளங்குகிறது. நிலவியல், புவி உருவாக்கம், அதன் செயல்பாடு, நுண்உயிரிகளின் பங்கு குறித்தும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
* பூமியில் வாழும் உயிரினங்களை விலங்கு, தாவரம், பாக்டீரியா, பூஞ்சை, அதிநுண்உயிரி என்ற ஐந்தாகப் பிரிக்கும் வழிமுறை குறித்த ‘ஃபைவ் கிங்டம்ஸ்’ என்ற இவரது நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ‘லுமினியஸ் ஃபிஷ்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டார். இவரது அறிவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன.
* சுமார் 20 ஆண்டுகாலம் ஏராளமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல முக்கிய பங்களிப்புகளை வழங்கினார். ஏராளமான அறிவியல் நூல்களை எழுதினார். கவுரவம் வாய்ந்த ‘டார்வின்-வேல்ஸ் பதக்கம்’ 2008-ல் இவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* நவீன உயிரியலில் சிறந்த சிந்தனையாளர் எனப் பெயர் பெற்றவரும், தத்துவார்த்த உயிரியல் விஞ்ஞானியும், நவீன யுகத்தின் ஆக்கபூர்வமான அறிவியல் கோட்பாட்டாளர்களில் ஒருவருமான லின் மர்குலிஸ் 73-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT