Published : 30 Jul 2016 11:19 AM
Last Updated : 30 Jul 2016 11:19 AM

ஹென்றி ஃபோர்டு 10

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பாளர்

அமெரிக்கப் போக்குவரத்துத் துறையில் கார் உற்பத்தி மூலம் புரட்சியை ஏற்படுத்திய ஹென்றி போர்டு (Henry Ford) பிறந்த தினம் இன்று (ஜூலை 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் (1863). சிறுவயதில் அப்பா தனக்குத் தந்த பாக்கெட் வாட்சை கழற்றிப் பழுது பார்க்கக் கற்றுக்கொண்டார்.

* 16 வயதில் டெட்ராய்ட் நகரில் ஒரு கனரகத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மிச்சிகன் திரும்பினார். அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களை இயக்குவதிலும், அக்குவேறு ஆணி வேறாக கழற்றி மாட்டி, அவற்றைப் பழுது பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

* 1891-ல் எடிசன் இல்லுமியேடிங் கம்பெனியில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். அடுத்த 2 ஆண்டுகள் பெட்ரோலில் இயங்கக் கூடிய கார் தயாரிக்க அயராது உழைத்தார்.

* 1896-ம் ஆண்டு, பல்வேறு உதிரிப் பாகங்களையும் பல்வேறு உலோகங்களையும் கொண்டு தன் வீட்டில் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் ஒரு வாகனத்தை வடிவமைத்தார். பார்ப்பதற்கு சைக்கிள் போன்று தோற்றமளித்த நான்கு சக்கரங்கள், ஒரு இருக்கையும் கொண்ட அதற்கு ‘க்வாட்ரி சைக்கிள்’ என்று பெயரிட்டார். அதை ஓட்டிப் பார்க்க எண்ணியபோது கூடாரத்தின் கதவு சிறிதாக இருந்ததால் அதை வெளியே கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்தார்.

* ஆனால், தான் தயாரித்த வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து அந்தச் செங்கல் சுவற்றைத் தகர்த்து, வாகனத்தை வெளியே கொண்டு வந்து வீதிகளில் வலம் வந்தார். எடிசன் நிறுவனத்துக்காக 1898-ல் இரண்டாவது மாடலை உருவாக்கினார்.

* 1903-ல் மிச்சிகனில் ஃபோர்ட் மோட்டார் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். எப்படியும் கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்ற தொலைநோக்குடன் கடுமையாக உழைத்து 1908-ம் ஆண்டு, ‘மாடல் டி’ என்ற காரை உருவாக்கினார்.

* சாமான்யர்களும் கார் வாங்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் தயாரிப்பு செலவு அதிகமாகாமல் பார்த்துக்கொண்டார். தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான ‘மாடல் டி’ கார்கள் ஆயிரக் கணக்கில் விற்பனையாகின. 18 ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது இவரது நிறுவனம்.

* உலகின் மிகப் பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலதிபராக இவர் உயர்ந்தார். ஊழியர்களுக்கு அதிக சம்பளம், வாரம் ஐந்து நாள் வேலை, டீலர்களை மதித்து நடத்துதல், வேலை நேரத்தைக் குறைத்தது, புதுமையான விளம்பர உத்தி, கார் கடன் வழங்குதல் என அமெரிக்கத் தொழில்துறைக்கு இவர் பல விஷயங்களை அறிமுகப்படுத்தினார்.

* தான் வாழ்ந்த க்ரீன் ஃபீல்ட் கிராமத்தை அருங்காட்சியகமாக மாற்றினார். செல்வம் பெருகப் பெருக அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் பெருகியது. 1936-ம் ஆண்டு தன் மகன் தலைமையில் ‘ஃபோர்ட் ஃபவுன்டேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கி பல தர்மகாரியங்களுக்கு உதவினார்.

* கார் தயாரிப்பின் பெரும் உற்பத்திக்கான ‘அசெம்ளி லைன்ஸ்’ உத்தியை மேம்படுத்தியதால், ‘அசெம்ளி லைன்ஸ் தந்தை’ எனப் போற்றப்பட்டார். கார் ஜாம்பவான் எனப் புகழ்பெற்ற ஹென்றி ஃபோர்டு 1947-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x