Published : 16 Jun 2017 09:43 AM
Last Updated : 16 Jun 2017 09:43 AM

அக்லாக் முகம்மது கான் 10

ஞானபீட விருது பெற்ற உருது கவிஞர்

ஞானபீட விருது பெற்ற சிறந்த உருது கவிஞரான அக்லாக் முகம்மது கான் (Akhlaq Mohammad Khan) பிறந்த தினம் இன்று (ஜூன் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அயோலி என்ற ஊரில் (1936) பிறந்தார். தந்தை தபால் நிலைய அதிகாரி. தனது மகன் காவல் துறையில் சேர வேண்டும் என்பது அவரது கனவு. இவரோ, விளையாட்டு வீரராகும் ஆர்வத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார்.

* இலக்கியத்திலும் அதிக நாட்டம் இருந்ததால், ஏராளமான புத்தகங்களைப் படித்தார். புலந்த்ஷகர் நகரில் சிறுசிறு வேலைகள் செய்து வந்தார். பிரபல உருது கவிஞர், விமர்சகரான கலீல் உர் ரெஹ்மான் ஆஸ்மியின் ஆதரவும், வழிகாட்டுதலும் இவருக்குக் கிடைத்தன.

* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்று, உருது மொழி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதலில் அஞ்சுமன் தாரக்கி-இ-உருது என்று கல்வி நிலையத்தில் பணியாற்றினார். பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உருது விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றினார். 1996-ல் ஓய்வு பெறும்போது, துறைத் தலைவராக உயர்ந்தார்.

* இலக்கிய ஆர்வம், எழுத்தாற்றல் மட்டுமல்லாமல், பத்திரிகை துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். கவிதைகள், தத்துவக் கருத்துகளுடன் வெளிவந்த இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். கவிதைகளும் எழுதத் தொடங்கினார். ‘இஸமி ஆசம்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது.

* தொடர்ந்து ஏராளமான உருது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். எங்கு கவியரங்குகள் நடந்தாலும் இவருக்கு அழைப்பு வந்துவிடும். ரசிகர்களால் விரும்பப்படும் கவிஞராக மலர்ந்தார். நாடு முழுவதும் பிரபலமடைந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள், சமூக அக்கறை, ஆதரவற்றவர்கள் குறித்த கவலை இவரது கவிதைகளில், வெளிப்பட்டது.

* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது, திரைப்படப் பாடல்கள் எழுதும் வாய்ப்பு தேடிவந்தது. பிரபல இயக்குநர் முஸாஃபர் அலி இவரது மாணவப் பருவ நண்பர். அவர் முதன்முதலில் ‘காமன்’ திரைப்படம் தயாரித்தபோது இவரது கஜல் பாடல்களைத் தன் திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.

* இவரது ‘சீனே மே ஜலன் ஆங்க்கோ மே தூஃபான்’, ‘அஜீப் சனேஹா முஜ்பர் குஜர் கயா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பாரம்பரிய இசையாகப் போற்றப்படுகின்றன. ‘ஃபாஸ்லே’, ‘அஞ்சுமன்’, ‘ஜூனி’, ‘தானம்’, ‘தி நாசேக்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்குப் பாடல்களை இயற்றியுள்ளார்.

* இந்தி திரையுலக வரலாற்றின் அற்புதப் படைப்பாகப் போற்றப்பட்ட ‘உம்ராவ் ஜான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தில் சீஸ் க்யா ஹை’, ‘யே கா ஜகஹ் ஹை’, ‘இன் ஆங்க்கோ கி மஸ்திகே’ உள்ளிட்ட இவரது அத்தனை கஜல் பாடல்களும் காலத்தால் அழியாத கீதங்களாக விளங்குகின்றன.

* 1987-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 2008-ல் ஞானபீட விருது பெற்றார். ஃபிராக் சம்மான், பகதூர்ஷா சஃபர் விருது, உத்தரபிரதேச உருது அகாடமி விருது, டெல்லி உருது விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.

* ‘நவீன உருது கவிதையின் பிரதிநிதி’ எனப் போற்றப்பட்டார். இந்தியாவின் உருது கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரும், இந்தி திரைப்பட பாடலாசிரியருமான அக்லாக் முகம்மது கான் 76-வது வயதில் (2012) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x