Published : 29 Oct 2014 09:38 AM
Last Updated : 29 Oct 2014 09:38 AM
சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. இந்தச் சம்பவத்தின் முடிவு மட்டும் மாறுபட்டிருந்தால், உலகத்தின் தலைவிதியே வேறாக அமைந்திருக்கலாம்.
முதல் உலகப் போர் ஐரோப் பாவை அதிர வைத்துக்கொண்டிருந்த சமயம். அப்போது பிரிட்டிஷ் படையினரை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த பவேரி யாவின் ராணுவத்தில் இருந்த வீரர்களில் ஒருவர் அவர். அவரும் 3,000 வீரர்களும் தெற்கு பெல்ஜியத்தின் ஏப்ரஸ் பகுதியில் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். போர்களில் சீருடைக் குழப்பம் நிகழ்வதுண்டு. அன்றும் அப்படித்தான் நடந்தது. பவேரிய வீரர்களின் சீருடையைப் பார்த்த ஜெர்மனிப் படையினர், அவர்கள் பிரிட்டிஷ் வீரர்கள் என்று தவறாக நினைத்துத் தாக்கத் தொடங்கினார்கள்.
பவேரியர்களில் இருவர்தான் கடைசி யில் மிஞ்சினார்கள். சற்று நேரத்தில், இருவரில் ஒருவரும் நட்புப் படையினரின் குண்டுகளுக்குப் பலியானார். இன்னொரு வர் அணிந்திருந்த கோட்டைக் கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்தது ஒரு குண்டு. அதிர்ஷ்டவசமாக அவர் உடலில் அந்தக் குண்டுபடவில்லை. தப்பித்து நின்ற அந்த அதிர்ஷ்டசாலி வீரர்தான், சில ஆண்டுகளுக்குப் பின்னர் உலகையே உலுக்கிய ஹிட்லர். இந்தச் சம்பவம் நடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, பவேரிய வீரர்களுக்கு ‘அயர்ன் க்ராஸஸ்’ விருது வழங்கும் நிகழ்ச்சி ஒரு கூடாரத்துக்குள் நடந்துகொண்டிருந்தது. கூடாரத்துக்குள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹிட்லரும் மூன்று வீரர்களும் வெளியே வந்தனர்.
அவர்கள் வெளியே வந்த ஐந்து நிமிடங்களுக்குள் அந்தக் கூடாரத்தை, எங்கிருந்தோ சீறிவந்த ஒரு வெடிகுண்டு தாக்கியது. அந்தச் சம்பவத்திலும் அதிர்ஷ்டம் ஹிட்லர் பக்கம் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT