Last Updated : 11 Mar, 2014 04:01 PM

 

Published : 11 Mar 2014 04:01 PM
Last Updated : 11 Mar 2014 04:01 PM

300: ரைஸ் ஆஃப் தி எம்பையர்ஸ்- திரை அனுபவம்

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்களை எதிர்க்கொண்ட முந்நூறு வீரர்களின் வீழ்ச்சியை பதிவு செய்திருந்த படம் '300'. பிரான்க் மில்லரின் கைவண்ணத்தில் 1998 ஆம் ஆண்டில் இதே தலைப்புடன் வெளிவந்த காமிக்ஸினை அடிப்படையாகக் கொண்டு ஜாக் ஷின்டரால் இயக்கப்பட்டது முதல் பாகம்.

காமிக்ஸில் அமையப்பட்ட நிழற்படங்கள் போன்றே திரையில் தோன்றச் செய்த நிழற்படங்கள், விஷுவல் ஜாலங்கள், கதையின் கட்டமைப்பு இவை அனைத்தும் இணைந்து '300' படத்தினை மற்ற போர்ப் படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டின.

முதல் பாகம் பார்த்தவர்களுக்கு தெரியும், '300' படத்தில் செர்க்ஸ் எனும் மன்னன்தான் வில்லன். பெர்சியாவின் அரசக் கடவுளாக பார்க்கப்பட்ட இவருக்கு க்ரீஸினை ஆட்கொள்வது லட்சியமாக இருந்தது. க்ரீஸ்ஸில் ஸ்பார்டன்ஸ் எனும் வீர குலத்தினர் வாழும் இடத்தை இவன் அடையப் பார்க்கிறான். அவர்கள் அவ்விடத்தை ஒப்படைக்க வேண்டும், மண்டியிட்டு காலில் விழுந்தால் உயிர் பிச்சை அளிக்கப்படும் என்று செய்தி சொல்லி, தூதனை அனுப்புகிறான்.

தூதன் ஸ்பார்டன்ஸ்களின் மன்னராகிய லியோன்டஸ்ஸிடம் இச்செய்தியை கூறுகிறார். அவ்வளவு தான் லியோன்டஸ் கோபம் உஷ்ண நிலையை எட்டுகிறது. வீரத்தையும், மானத்தையும் உயிரினும் பெரிதாகக் கருதும் ஸ்பார்டன்ஸ் குலத்தினர் இச்செய்தியை இழிவுடையதாக கருதுகின்றனர். செய்தி கொண்டு வந்த தூதன் மன்னன் லியோன்டஸ்ஸினால் கொல்லப்படுகிறான். இச்செய்தி செர்க்ஸ் காதிற்கு செல்கிறது கோபம் போரினால் அரங்கேற்றம் காண்கிறது.

இப்படித்தான் முதல் பாகத்தில் போர் தொடங்கியது இந்த முந்நூறு வீரர்கள் பெர்சியன் படைகளுக்கு எப்படிப்பட்ட சவாலாய் அமைந்தனர், முந்நூறு வீரர்கள் ஒரு படையை சிதைத்த விதம், அவ்வீரர்கள் பெர்சியன் படைகளுக்கு இரையாகி வீழ்ந்த விதம் முதல் பாகத்தில் கூறப்பட்டது.

அப்படியென்றால், 300 வீழ்ச்சியடைந்த மனிதர்களை பற்றிய கதைதானா? அப்போ இதில் எதிர் அணி தான் வெற்றி பெறுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு நாம் எதிர்பார்க்கும் சாதகமான விடையை அளிக்கிறது இவ்விரண்டாம் பாகம்.

லியோன்டஸ் என்ற ஒரு குறுநில மன்னனின் குழு வீழ்ந்ததிலே இக்கதை முற்றடையவில்லை. மாறாக அவரின் வீழ்ச்சி க்ரீஸ் நகரின் சுதந்திரத்திற்கு வித்திட்டது, பெர்சியன்களை எதிர்த்து போராடும் ஒரு மாபெரும் படையை எப்படி உருவாக்கியது என்பதைத் தான் இவ்விரண்டாம் பாகம் விவரிக்கிறது.

அமைதியான கடலில் பயணிக்கும் ஒரு கப்பல், கடல் காற்றில் கலந்துள்ள ஓர் இனிய பெண் குரலில் கதை கூறப்படுகிறது. அப்படியே அந்தக் குரலில் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். நாயகன் யார், வில்லன் யார், வில்லன் உருவான விதம் எப்படி, சிறிய தீப்பொறி தீப்பந்தமாய் மாறியது எப்படி. வில்லனை ஆண் மகனாக்கிய அந்த யக்ஷி, இப்படி இந்தக் கதையில் பல கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

கதை என்னவோ நமக்கு தெரிந்த கதை தான். ஒரு பழி வாங்கும் கதை, அதுவும் அப்பா உயிரைப் பறித்தவரை மகன் பழிவாங்கும் கதை. கதையில் நடைபெறும் நிகழ்வுகள் புதிதல்ல; கோபங்கள், உணர்ச்சிகள் புதிதல்ல; ஆனால் கதைக்களம் புதிது, அதை வெளிப்படுத்தும் தன்மை, திரை ஆளுமை புதிது. அப்பெண் குரலில் சொல்லப்படும் கதையில் வழக்கத்தைப் போல் 'கத்தி உண்டு, ரத்தம் உண்டு - கருவி உண்டு, காரணம் உண்டு - பகை உண்டு, பழி உண்டு - படை உண்டு, சேனைகள் உண்டு - யுத்தம் உண்டு, சத்தம் உண்டு - வெற்றியுண்டு, வீழ்ச்சியும் உண்டு'.

ஏதென்ஸ்களிடமிருந்து தங்கள் நாட்டை க்ரீஸ் படையினர் எப்படிக் காப்பாற்றினர்கள், எதிரி நாட்டின் பெருமையை எப்படி சிதைத்தார்கள், முக்கியமாக வேறுபாடுகளைக் கடந்து எப்படி அனைத்து குலத்தவரும் ஒன்றாய் இணைந்து க்ரீஸ் படையினை அமைத்தனர் என்பதே இரண்டாம் பாகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மண்டியிட்டு வாழ்வதை விட, மார் நிமிர்த்தி வீழ்வதே மேல் என்று நாயகன் தம் போர் வீரர்களிடம் பேசும் வசனம் அப்படியே நம் ஊர் அரங்கில் கூட ஏகபோக விசில் பறக்கச் செய்கிறது.

கதையும், சம்பவங்களும் நம் கண்டத்திலே பழகிப்போன ஒன்று தான் என்றாலும்! 'கடலில் நடக்கின்ற போர் காட்சிகள், போரினை எதிர்க்கொள்ளும் மக்கட் படையின் நூதன முறை சாமர்த்தியங்கள், வியக்க வைக்கின்ற பிரம்மாண்டம், காட்சிப்படுத்தியமையில் நம்மை மூழ்கடிக்கிற ஜாலம், 'தாறுமாறான' பின்னணி, க்ரிஸ்ப் எடிட்டிங் இவ்வனைத்தும் இணைந்து '300: தி ரைஸ் ஆப் எம்பையர்ஸ்' படத்திற்கு பலத்த கரகோஷங்களை எழுப்புகின்றன.

300 படத்தில் வாழ்ந்த ஜெரால்ட் பட்லர் போன்ற திரை ஆளும் நாயகனை இப்படத்தில் நாம் மிஸ் செய்வது உண்மை தான். அர்தமீசியா கதாபாத்திரத்தில் வரும் ஈவா கிரீனின் 'அருந்ததி' அனுஷ்காவைப் போன்ற கதாபாத்திரம் அந்த ஆறாத காயத்திற்கு ஆயின்மென்ட் போடுகிறது.

கடல் கடந்து நம் தேசத்திற்கு மீண்டும் வந்துள்ள இந்த 'பருத்திவீரர்கள்' இம்முறையும் நம்மை ஏமாற்றவில்லை.

விரைவில் முந்நூறு பருத்திவீரர்கள் பாகம் -3 வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கலாம். கிளைமாக்ஸ்ல சொல்லி இருக்குபா!

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x