Published : 21 Sep 2016 11:13 AM
Last Updated : 21 Sep 2016 11:13 AM

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் 10

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*நெதர்லாந்து, குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார் (1853). தனிப்பட்ட முறையில் கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார்.

*குரோனின்ஜென் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப்போது உட்க்ரெட் பல்கலைக்கழகம் நடத்தியக் கட்டுரைப் போட்டியில் ஆவி அடர்த்தி (vapor density) குறித்து கட்டுரை எழுதி முதல் பரிசு வென்றார். பட்டம் பெற்ற பின் 1871-ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.

*மேலும் ஜெர்மன் இயற்பியலாளர் ராபர்ட் கிர்க்கார்ப் மற்றும் சிலரின் ஆய்வுக்கூடங்களின் உதவியாளராகப் பணிபுரிந்தார். சில காரணங்களால் ஊருக்குத் திரும்பிய இவர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று 1878-ல் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘நியு ப்ரூஃப்ஸ் ஃபார் தி ரொடேஷன் ஆஃப் தி எர்த்’ என்ற ஆய்வுக் கட்டுரை எழுதி 1879-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

*1881-ல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ‘ஜெனரல் தியரி ஆஃப் தி நேச்சர் ஆஃப் ஃப்ளுயிட்ஸ்’ (பாய்பொருட்கள்) ‘ஃபிரம் தி பெர்ஸ்பெக்டிவ் ஆஃப் கைனடிக் தியரி’ என்ற கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். பாய்பொருள்களின் பருமன், அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றின் சரியான அளவீடுகளை அறிய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.

*தாழ்வெப்பநிலையியல் குறித்து ஆராய்ச்சிகள் மற்றும் பொருட்களின் தாழ்ந்த வெப்பநிலைகளை அறிவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டார். 1882-ல் லெய்டன் பல்கலைக்கழகத்தில் சோதனை இயற்பியல் துறையின் பேராசிரியராகவும் அங்குள்ள ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

*திரவங்கள் தவிர, ஆக்சிஜன் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களை தாழ்ந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். மூனிச்சில் இதே ஆய்வில் ஈடுபட்டு வந்த கார்ல் லிண்டே என்ற விஞ்ஞானி ஜூல் தாம்சன் விளைவின் (Joule-Thomson effect) அடிப்படையில் வாயுவைத் திரவமாக்கும் கருவியை உருவாக்கியிருந்தார். இந்த இருவரின் முறைகளை ஒருங்கிணைத்து இவர் புதிய முறை ஒன்றை உருவாக்கினார்.

*இதன்படி வாயுக்களைத் திரவமாக்கக் கூடிய ஆக்சிஜனை திரவமாக்கும் முறையில் இவர் வெற்றிகண்டார். 1911-ல் பாதரசம், வெள்ளீயம், காரீயம் உள்ளிட்ட தூய்மையான உலோகங்களின் மீள்தன்மை, மிகைக்கடத்தல் திறன் (superconductivity) ஆகியன குறித்தும் ஆராய்ந்தார்.

*1908-ல் வெப்பநிலையை ஒரு டிகிரிக்கும் குறைவாக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தார். தாழ்ந்த வெப்பநிலையில் உள்ள பொருட்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழிவகுத்ததற்காகவும் 1913-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். சந்திரனின் உள்ள ஒரு குழிப் பகுதிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

*மத்யூக்கி பதக்கம், ராம்ஃபோர்ட் பதக்கம், பவும்கார்டன் பரிசு, ஃபிராங்க் ளின் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார். பெர்லின் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவரை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

*ஆராய்ச்சிகள், ஆசிரியப் பணி இவற்றோடு சமூகப் பொறுப்பும் கொண்டிருந்தார். இயற்பியல் துறைக்கு மகத்தான பங்களிப்புகளை வழங்கிய ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் 1926-ம் ஆண்டு 72-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x