Published : 08 Feb 2017 10:13 AM
Last Updated : 08 Feb 2017 10:13 AM

டிமிட்ரி மென்டலீஃப் 10

தனிம அட்டவணை உருவாக்கிய ரஷ்ய அறிஞர்

முதன்முதலாக தனிம அட்டவணையை உருவாக்கிய ரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மென்டலீஃப் (Dimitri Mendeleev) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ரஷ்யாவின் தோபோல்ஸ்க் பகுதியில் (1834) பிறந்தவர். பெரிய குடும்பத்தில் 17-வதாக பிறந்த கடைசிப் பிள்ளை இவர். ஆசிரியரான தந்தைக்கு திடீரென்று பார்வை பறிபோனதால், அம்மா கண்ணாடி தொழிற்சாலை தொடங்கினார்.

* மென்டலீஃப்புக்கு 13 வயதாகும்போது தந்தை இறந்தார். தாய் நடத்திவந்த தொழிற்சாலையும் தீ விபத்தில் நாசமானது. அதன்பிறகு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் குடியேறினர். பள்ளிக்கல்விக்குப் பிறகு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

* வேதியியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 2 ஆண்டு காலம் ஜெர்மனியின் ஹைடல்பர்க் நகரில் வேதியியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல கட்டுரைகளையும் எழுதினார். உடல்நலம் குன்றியபோதும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர், குணமடைந்த பிறகு, தன் ஆய்வுகள் தொடர்பாக ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

* இதையடுத்து, அறிவியல் உலகில் பிரபலமடைந்தார். பணிபுரிந்து கொண்டே பயின்று முதுகலைப் பட்டமும், தொடர்ந்து வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பல சர்வதேச வேதியியல் மாநாடுகளில் கலந்துகொண்டார்.

* ரஷ்ய மொழியில் தரமான வேதியியல் பாடப்புத்தகம் தேவை என்று எண்ணிய இவர், அயராது பாடுபட்டு, 61 நாட்களில் ‘ஆர்கானிக் கெமிஸ்ட்ரி’ என்ற 500 பக்க பாடப்புத்தகத்தை எழுதி முடித்தார். அப்போது, இவருக்கு 27 வயது. இது ரஷ்யாவின் தலைசிறந்த பாடப்புத்தகமாக அங்கீகாரம் பெற்றது.

* ரஷ்யாவின் உயரிய டெமிடோவ் பரிசு பெற்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்ப பேராசிரியராகப் பணிபுரிந்தார். மாணவர்களுக்கு கரிம வேதியியல் பாடம் கற்றுக் கொடுக்கும்போது அவர்களுக்கு தனிமங்களைப் பற்றி எளிமையாகப் புரியவைப்பதற்காக அதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

* வேதியியல் தனிமங்களின் அணு, எலெக்ட்ரான்களின் அமைப்பு, வேதியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தனிம அட்டவணையை (Periodic Table of the Elements) 1869-ல் உருவாக்கினார். இது அறிவியல் வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, புதிய வேதியியல் தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்தார். அவற்றின் இயல்புகளையும் வரையறுத்தார்.

* அணுத் திணிவு (Atomic Mass) குறித்த பல விவரங்களைச் சேகரித்து அதுபற்றி ஆராய்ந்தார். ரஷ்ய வேதியியல் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர், இந்தக் கழக இதழில் தனது பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். தலைசிறந்த சிந்தனையாளர், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்.

* நீர் இயக்கவியல், வானிலை, தொழில்கள், பொருளாதாரம், தத்துவம் உட்பட ஏராளமான துறைகளில் 400-க்கும் மேற்பட்ட நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆவர்த்தன விதி’யை (Periodic Rule) உருவாக்கினார். ‘தி பிரின்சிபல்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற நூலை எழுதினார். இது ரஷ்யாவில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பாடப் புத்தகமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

* பிரிட்டீஷ் ராயல் சொசைட்டி இவருக்கு காப்ளே பதக்கம் வழங்கியது. ஸ்வீடன் ராயல் அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிம அட்டவணையின் தந்தை எனப் போற்றப்படும் டிமிட்ரி மென்டலீஃப் 73-வது வயதில் (1907) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x