Published : 09 Jun 2017 10:30 AM
Last Updated : 09 Jun 2017 10:30 AM
ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது - தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக தமிழக தலைவர் தமிழிசையை சந்திக்க மிஸ்டர் உல்டா போனபோது, ஷூட்டிங் கணக்காய் தயாராகிக்கொண்டிருந்தார். ‘‘தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி.. அப்படீன்னுதான மேடம், இன்னிக்கும் சொல்லப்போறீங்க!’’ என்று உல்டா கேட்க, ‘‘ஆமாம் அதுதான் டெய்லி கூப்பாடு. இது டெல்லி உத்தரவு’’ என்றார்.
‘‘சரி, எந்த நம்பிக்கையில இப்படி சொல்லிட்டிருக்கீங்க மேடம்’’ என்று உல்டா, சந்தேகமாக கேட்க, தெம்பாக உட்கார்கிறார் தமிழிசை. ‘‘இப்போ எல்லோரும் என்ன சொல்றாங்க.. தமிழகத்தை தமிழன்தான் ஆளணும்றாங்க. நானே தமிழ் இசைதான். அப்புறம், அண்ணன் அன்புமணி ராமதாஸ் என்ன சொல்றாரு. ‘தமிழ்நாட்டுக்கு தேவை ஆக்டர் இல்லே டாக்டர்’ அப்படிங்கிறார். நான் டாக்டர்தானே.. என்ன உல்டா.. கூட்டிக் கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா வருதா?’’ என்றார்.
‘‘எல்லாம் சரிதான், ஜனங்க ஓட்டு போடணுமே, அதுக்கு என்ன ஏற்பாடு?’’ என்று உல்டா கேட்டதும், ‘‘அதெல்லாம் எடப்பாடி, பன்னீர் கம்பெனி பார்த்துக்கும்’’ என்றார். உல்டா அடுத்த கேள்விக்குத் தாவினார். ‘‘அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைக்குமா, கிடைக்காதா?’’
‘‘தேர்தல் கமிஷன்ல பன்னீர்செல்வம் அணி பதினைந்து டன் பேப்பரும், எடப்பாடி அணி பன்னிரெண்டு டன் பேப்பரும் ஆதாரம் தந்திருக்காங்க. அதையெல்லாம் படிச்சு பரிசீலனை பண்ணி முடியறதுக்குள்ளே இரண்டு மூணு தேர்தல் நடந்து முடிஞ்சுடும். நாலைந்து தேர்தல் ஆணையர் வந்துபோயிடுவாங்க. அதனால, மத்திய அரசு தாயுள்ளத்துடன் அவங்களை தாமரை சின்னத்தில் போட்டியிட அனுமதி தரும். இது ரொம்ப சீக்ரெட்டான விஷயம். யார்கிட்டயும் உளறிடாத..’’ என்றார் தமிழிசை.
‘ஒருவேளை, தமிழகத்தில் பிஜேபி ஆட்சி உண்மைதானோ!’ என்ற யோசனையுடன் ஒருமாதிரி கிறுக்குப் பிடித்ததுபோல கிளம்பிப் போன உல்டா, கபாலென்று கடைசி கேள்வியால் தமிழிசையை மடக்கினார். ‘‘மாட்டிறைச்சி விஷயம்..’’ என்று இழுத்தார். ‘‘அட, விவரம்புரியாத உல்டா! எல்லாம் அரசியல் விளம்பரம்தான். சரியோ, தப்போ, எல்லாரும் எங்களைப் பத்திதானே பேசுறாங்க. மதவாதம், ராமர் கோயில்னு திருப்பித் திருப்பி அதையே பேசுனா, அலுப்புத் தட்டாது?’’ பதில் கேள்வி கேட்டு மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பினார் தமிழிசை.
பிரதமரிடம் அரசியல் பேசவில்லை - முதல்வர் எடப்பாடி
சியெம் சாரைப் பார்ப்பதற்காக உல்டா அவரது அலுவலகத்துக்குப் போக, அப்போதுதான் சியெம் சாரும் உள்ளே நுழைந்தார். அவரது சட்டைப் பையில் ‘அம்மா’ படத்துக்குப் பதிலாக மோடி போட்டோ. ‘‘என்ன சார், போட்டோ மாறிடுச்சு?’’ என்று ஆரம்பித்தார் உல்டா.
‘‘ஓ! இதுவா, பிரதமர் அலுவலகத்துக்கு அடிக்கடி போறோம்ல.. அங்கு ஒரு போலீஸ் தம்பி நமக்கு ரொம்ப பழக்கமாய்டிச்சி. அந்த தம்பி கொடுத்த போட்டோதான் இது. யாரோ மோடி பாபாவாம்! பெரிய மகான். ரிஷிகேஷ்ல இருக்கார். தண்ணி மேலே எல்லாம் நடப்பாராம். இவர் போட்டோவை சட்டை பையில வச்சா, நாற்காலி ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொன்னாரு. அசப்புல நம்ம பிரதமர் மோடிஜீ மாதிரியே இருக்கார்ல’’ என்றார் சியெம்.
‘‘இந்த ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் இதெல்லாம் உங்களை மதிக்கவே இல்ல போல?’’ என்று உல்டா இழுக்க.. ‘‘அவங்க எதுக்கு மதிக்கணும்? நான் கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண முதல்வர். நீ மத்த டிவி பாரு, பேப்பர் பாரு. என் போட்டோ அதிலே நிறைய வரும்’’ என்றார்.
‘‘சார், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. உண்மையிலயே அதிமுகவை நடத்துவது யார்? டிடிவியா, சசிகலாவா?’’ என்றார் உல்டா அப்பாவியாக. ‘‘அதெல்லாம் கற்பனை. அதிமுகவை நடத்துவது நாஞ்சில் சம்பத், புகழேந்தி, வெற்றிவேல் என்ற மூணு பேர் குழு. உடனே, இந்த மூவர் குழுவை வழிநடத்துவது யார்னு கேட்கக்கூடாது. அது எனக்கும் தெரியாது’’ என்றார்.
‘‘தினகரனுக்கு ஜாமீன் கிடைச்சுடுச்சே’’ என்று உல்டா கொக்கி போட, ‘‘அதனால எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. தர்மயுத்தம் நடத்துறது பன்னீர்தான, எல்லாம் அவரு பாத்துப்பாரு. அதையும் மீறி ஏதாவது பிரச்சினைன்னா டெல்லி பார்த்துக்கும். ‘தினகரன் மீது வழக்கு போட நூறு ஐடியாக்கள்’னு பியெம் டேபிள்ல ஒரு புத்தகமே பார்த்தேன். அதனாலே இதெல்லாம் பிரச்சினையே இல்லே’’ என்றார்.
‘‘கடைசியாக.. ரஜினி அரசியல் பற்றி’’ என்றார் உல்டா. ‘‘நான் விசாரிச்ச வரை, திருமதி தனுஷ், டாடிய வச்சு ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்றாராம். விளம்பரத்துக்கு அதிக அளவுல செலவு பண்ண முடியாது. நீங்கதான் பார்த்து ஏதாவது செய்யணும்னு சொன்னாங்களாம். அதைத்தான் ரஜினி அண்ணன் செய்யுறதா உளவுத்துறை தகவல்’’ அவர் சொன்னது புரிந்ததும் புரியாததுமாக உல்டா கிளம்பினார்.
மத்திய அரசை கண்டித்து போராட்டம் - தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசரைச் சந்திக்கப் போனபோது ‘‘வரேன் தலைவரே’’ என்று சொல்லிவிட்டு, ஆதரவாளர்களுடன் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார் நக்மா. ‘‘ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன்.. திமுக செயல் தலைவர் என்ன போராட்டம் அறிவிச்சாலும் நீங்களும் உடனே போராட்டம் அறிவிக்கிறீங்க.. உங்களுக்கு தலைமை ஜன்பத் ஹவுஸா, கோபாலபுரமா?’’ என்று உல்டா கேட்க, வழக்கம்போல சிரிப்பை உதிர்த்தார் திரு. ‘‘கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கு இல்லே. அதுக்கு நம்ப கட்டுப்பட்டுத்தானே இருக்கணும் உல்டா. என்ன நான் சொல்றது’’ என்றார்.
“ஆனா, கட்சிக்குள்ள கட்டுப்பாடு இருக்கிற மாதிரி தெரியிலையே.. கட்சி ஆபீஸுக்குள்ளயே அடிச்சிக்கிறாங்க, குத்திக்கிறாங்க..’’ என்றார் உல்டா. ‘‘காங்கிரஸ் வரலாறு தெரியாம பேசப்படாது. சத்தியமூர்த்தி பவன்ல இதெல்லாம் வழக்கம்தானே. சமீபகாலமா நடக்காததால, புதுசு மாதிரி தெரியுது அவ்ளோதான்’’ என்று நாசூக்காக சமாளித்தார் அரசர்.
‘‘ஈவிகேஎஸ், ப.சிதம்பரம் இவங்கள்லாம் பவன் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லையே?’’ என்று கேட்டதும், ‘‘ரெய்டில இருந்தே ப.சிதம்பரம் ரொம்ப பிஸி. டிரைவரும் புதுசாம்! அவருக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு வழிதெரியாதாம். ராஜ்பவனுக்குதான் வழி தெரியுதாம். அப்படின்னு சிதம்பரமே சொல்றார்.
நான் என்ன பண்ண முடியும். என்னை பார்த்தாலே சந்திராஷ்டமம் சண்டை வரும்னு நான் இருக்கிற இடத்துக்கே வரமாட்டேன்னு ஈவிகேஎஸ் முரண்டு பிடிக்கிறார். என்ன பண்றது சொல்லு?’’ என்று கேட்டபடியே கிளம்பிப்போனார் அரசர்.
தொடர்புக்கு: jasonja993@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT