Last Updated : 15 Oct, 2014 08:55 AM

 

Published : 15 Oct 2014 08:55 AM
Last Updated : 15 Oct 2014 08:55 AM

இன்று அன்று | 1990 அக்டோபர் 15: கொர்பச்சேவுக்கு அமைதிக்கான நோபல்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இருந்த பனிப்போர் 1980-களின் இறுதியில் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்ததும் அந்தக் காலகட்டத்தில்தான். சோவியத் ஒன்றியத்தின் தலைவராக மிகையில் கொர்பச்சேவ் மேற்குலக நாடுகளுடனான பதற்றத்தைக் குறைத்தவர் என்று அந்த நாடுகளால் பாராட்டப்படுகிறார்.

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்டு ரீகனுடன் நான்கு உச்சி மாநாடுகளில் கலந்துகொண்டார் கொர்பச்சேவ். 1987-ல் நடந்த சந்திப்பின் போது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்றில் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்படி, ஐரோப்பாவில் வைக்கப்பட்டிருந்த இரு நாடுகளின் ஏவுகணைகள் அகற்றப்

பட்டன. ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சோவியத் துருப்புகள் 1988-ல் திரும்பப் பெறப்பட்டன. அங்கோ லாவில் தனது படைகளை நிறுத்தியிருந்த கியூபாவும், கம்போடியாவில் தனது படை களை நிறுத்தியிருந்த வியட்நாமும் தங்கள் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கொர்பச்சேவ் வலியுறுத்தினார். 1989-ல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்த கொர்பச்சேவ், பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார்.

1980-களின் இறுதியில் இரும்புத் திரை நாடுகள் என்று மேற்கத்திய நாடுகளால் கருதப்பட்ட செக்கோஸ்லோவேகியா, கிழக்கு ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகள் ஜனநாயகப் பாதைக்குச் செல்வதை அவர் தடுக்கவில்லை என்றும் புகழப்படுகிறார். இந்நிலையில், 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு கொர்பச்சேவுக்கு வழங்கப் பட்டது. எனினும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக ரஷ்யாவில் அவருக்குக் கண்டனக் கணைகளும் எழுந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x