Published : 03 Aug 2016 11:23 AM
Last Updated : 03 Aug 2016 11:23 AM
உலகப் புகழ்பெற்ற 'எக்ஸோடஸ்' நாவலை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் லியான் யூரிஸ் (Leon Uris) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் யூதக் குடும்பத்தில் (1924) பிறந்தார். தன் நாய் இறந்த துயரத்தை இவர் தனது 6-வது வயதில் ஓரங்க நாடகமாக எழுதியதாகக் கூறப்படுகிறது. பால்டிமோரிலும், வர்ஜீனியாவின் நார்ஃபோல்க் நகரிலும் பள்ளிக்கல்வி பயின்றார்.
* இவருக்கு 17 வயதானபோது, பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தகர்த்தது. உடனடியாக அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். தெற்கு பசிபிக் பகுதியில் பணியாற்றினார். ஓய்வுபெற்ற பிறகு, ஒரு பத்திரிகையில் பணியாற்றினார்.
* ஓய்வு நேரங்களில் பல இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதினார். 1950 முதல், எழுதுவதில் முழு நேரத்தையும் செலவிட்டார். தனது போர்க்கால அனுபவங்களை கருவாகக் கொண்டு, விற்பனையில் சாதனை படைத்த 'பாட்டில் க்ரை' நாவலை எழுதினார்.
* வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து உதவி திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினார். போரை அடிப்படையாகக் கொண்டு 'தி ஆங்க்ரி ஹில்ஸ்' என்ற நாவலை உருவாக்கினார். இதுவும் மகத்தான வெற்றி பெற்று பரபரப்பாக விற்பனையானது.
* யூதர்கள் பற்றி ஒரு நூல் எழுத முடிவு செய்தார். அதற்கான ஆய்வுகளுக்காக தனது திரைக்கதை உரிமைகளை விற்றும், பத்திரிகைகளில் எழுதியும் பணம் திரட்டினார். உலகப் புகழ்பெற்ற தனது 'எக்ஸோடஸ்' நூலுக்காக 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நீண்ட பயணம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கானோரை நேரில் சந்தித்து, தகவல் திரட்டினார்.
* இந்த நூல் 1958-ல் வெளியானதும், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் அதிகம் விற் பனையாகும் புத்தகங்களின் வரிசையில் தொடர்ந்து 19 வாரங்கள் முதலிடம் வகித்தது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்றன.
* யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அநியாயங்களை இந்நூல் படம்பிடித்துக் காட்டியது. இதில் வரும் கதாபாத்திரங்கள் நம்முடன் வாழ்வது போலவே தோன்றும் அளவுக்கு வசீகரமாக எழுதியுள்ளார் என உலகமே இவரை போற்றிக் கொண்டாடுகிறது. 'மாஸ்டர் ஸ்டோரிடெல்லர்' என்று போற்றப்பட்டார்.
* ஏறக்குறைய 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, வசூலில் சாதனை படைத்தது. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஏறக்குறைய எல்லா மொழிகளிலுமே வெற்றிபெற்றது.
* தொடர்ந்து எழுதியும் திரைப்படங்களில் பணிபுரிந்தும் வந்தார். 1967-ல் இவரது 'டோபாஸ்' நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இவர் எழுதிய 'மிலா 18', 'ஆர்மகடான்: எ நாவல் ஆஃப் பெர்லின்', 'ரிடம்ப்ஷன்', 'மிட்லா பாஸ்' என அனைத்து நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. 'தி ஹஜ்' நாவல், மத்தியக் கிழக்கு நாடுகளின் வரலாற்றை எடுத்துக்கூறியது.
* போர்கள், போரின் விளைவுகள், நாடுகளின் வரலாறு, போர் அனுபவங்கள் பற்றியே இவரது பல படைப்புகள் இருந்தன. தன் படைப்புகள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த லியான் யூரிஸ் 79-வது வயதில் (2003) மறைந்தார். இவரது கட்டுரைகள், நாவல்கள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஹாரி ரான்சம் மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT