Published : 04 Apr 2017 10:31 AM
Last Updated : 04 Apr 2017 10:31 AM
‘‘இதப் பாரு விஜி. என்ன சொல்லுவியோ தெரியாது. உங்க அம்மாவை ஊருக்கு கிளம்பச் சொல்லு’’ - கத்தினான் ரமேஷ்.
‘‘எங்க அம்மான்னா உங்களுக்கு இளக்காரமா போச்சோ?’’ - பதிலுக்கு கேட்டாள் விஜயா.
வெளியே சென்று தண்ணீர்ப் பானையை தூக்கி வந்த விஜயாவின் அம்மா கங்கா, இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனாள்.
விஜயாவுக்கு தலைப் பிரசவம் முடிந்து பச்சை உடம்புக்காரி என்பதால் அவளுக்கு சில நாட்கள் துணையாக இருக்கலாம் என்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தாள். தான் இங்கே இருப்பது மருமகனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டாள்.
மறுநாளே விஜயாவை தனியே அழைத்து, ‘‘இதப் பாருமா.. ஊருல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. நான் கெளம்பணும். உனக்கு மாமியார் வேற இல்லை. ஒத்தாசைக்கு ஒரு வேலைக்காரியை வச்சுக்கோ’’ என்று கூறிவிட்டு, ஊருக்கு கிளம்பிவிட்டாள்.
கங்கா சென்ற மறுநாளே வீட்டு வேலைக்கு ஒரு பெண்மணியை அழைத்து வந்தான் ரமேஷ்.
‘‘இந்தம்மாதான் இனி தண்ணி பிடிச்சு, சமையல் செஞ்சு கொடுப்பாங்க. மாசம் ரெண்டா யிரம் சம்பளம்’’ என்று விஜயாவிடம் கூறினான்.
‘‘ஏங்க, இது உங்களுக்கே நல்லாயிருக்கா? எங்கம்மாவை விரட்டி அடிச்சுட்டு இப்போ வேலைக்காரிக்கு ரெண்டாயிரம் செலவு பண்றீங்களே’’ என்று விஜயா புலம்பினாள்.
‘‘அடி அசடே, உங்கம்மாவைப் பிடிக்காம விரட்டி விடலை. இப்போ சென்னை முழுக்க தண்ணீர்ப் பஞ்சம். பாவம் வயசான காலத்துல உங்கம்மாதான் தினமும் கால் கடுக்க தெருக்கோடிக்கு போயி தண்ணி எடுத்துட்டு வராங்க. இதை நேரடியா சொன்னா உங்கம்மா ஏத்துக்க மாட்டாங்க. அதான் அப்படிச் சொன்னேன்!’’ என்ற கணவனை பாசத்துடன் பார்த்தாள் விஜயா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT