Published : 13 Feb 2017 10:04 AM
Last Updated : 13 Feb 2017 10:04 AM
ஜெர்மனியின் தலைசிறந்த கணிதவியலாளர்
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 19-வது நூற்றாண்டின் தலைசிறந்த கணிதவியலாளர்களுள் ஒருவரான ஜான் பீட்டர் டிரிஃக்லெ (Johann Peter Dirichlet) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியில் ட்யூரென் நகரில் பிறந்தார் (1805). தந்தை, வியாபாரி. போஸ்ட் மாஸ்டராகவும் நகர கவுன்சிலராகவும் பணியாற்றியவர். பெரிதாக வருமானம் இல்லை என்றாலும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கினார். இவர் பெரிய வியாபாரியாக வேண்டும் என்பது பெற்றோர் விருப்பம்.
* ஆனால், இவருக்கோ சிறு வயது முதலே கணிதத்தில்தான் அளவுகடந்த ஆர்வம். இவர் பயின்ற இரு பள்ளிகளில், உலகப் புகழ்பெற்ற அறிவியல் மற்றும் கணித வல்லுநர்கள், ஆசிரியர்களிடம் கற்கும் நல்வாய்ப்புக் கிடைத்தது. எனவே கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் அதிகரித்தது.
* 1821-ல் பள்ளிப் படிப்பை முடித்தார். அந்த சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற கணிதவியல் அறிஞர்கள் பலர் பாரீசில் இருந்ததால், உயர் கல்விக்காக பாரீஸ் சென்றார்.
* காஸ் என்ற உலகப் புகழ்பெற்ற கணித மேதையின் இன்வஸ்டிகேஷன்ஸ் ஆஃப் அரித்மாடிக் என்ற நூலின் மிகப் பழைய, கிழிந்துபோன பிரதி இவருக்குக் கிடைத்தது. அதைப் படித்து புரிந்துகொள்வதே மிகவும் கடினம். எப்போதும் அதைத் தன்னுடனே இவர் வைத்திருந்தார். பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டில் தங்கி, பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலை கிடைத்தது.
* பெற்றோரின் உதவி இல்லாமல் படிப்பையும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். அந்த வீட்டுக்கு வருகை தந்த பல அறிஞர்கள், வல்லுநர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். கணிதம் குறித்த மிகவும் சிக்கலான பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். ஃபெர்மாட்டின் இறுதித் தேற்றம் குறித்து ஆராய்ந்து முதன் முதலாக இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையால் கணித உலகில் உடனடியாகப் பிரபலமடைந்தார்.
* கணித ஆய்வுக் கட்டுரைகள் எழுதி பாரீஸ் கணித அகாடெமிக்கு அனுப்பி வைத்தார். பிரான்சின் அறிவியல் அகாடெமியில் உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டார். மேலும் வெப்பக்கோட்பாடு துறைக்கு வித்திட்ட ஃபொரியர், இவரது மேதைமையைப் புரிந்துகொண்டு அறிவியலில் இவரது ஆர்வத்தைத் தூண்டினார். இவரைக் கணித இயற்பியல் துறைக்கு ஈர்த்து பல ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தார். அவரது வழிகாட்டுதலுடன் இவர் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
* கல்வி உதவித் தொகை பெற்று மேற்படிப்பை முடித்தார். பிரெஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கணித ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். எண் கோட்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாற்படிய ஈட்டு முறை விதி குறித்து ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார்.
* 1826-ல் பெர்லினில் குடியேறினார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பாடங்களை மாணவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நிறையப் பாடுபடுவார். மேலும், தான் ஆராய்ந்து வரும் கணித தலைப்பு களையும் மாணவர்களுக்கு கற்பிப்பார்.
* 1855-ல் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஜெர்மனியில் எண்கணிதத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமை பெற்றவர்.
* பிரெஷ்யன் அகாடெமி ஆஃப் சயின்சஸ், கோடிங்கன் அகாடெமி ஆஃப் சயின்சஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் கவுரவ உறுப்பினராக செயல்பட்டார். கணிதக் களத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஜான் பீட்டர் டிரிஃக்லெ, 1859-ம் ஆண்டு மே மாதம் 54-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT