Published : 04 Feb 2017 08:08 AM
Last Updated : 04 Feb 2017 08:08 AM
திரைப்பட உலகில் உங்களுக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்ட நீங்கள் 1971-ம் ஆண்டு வரை மிக மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வந்ததாக, நமது சந்திப்பின் போது ஒருமுறை கூறினீர்கள். பள்ளிப் படிப்பு மறுக்கப்பட்டு திரைவாழ்வு வலுக்கட்டாயமாக தங்கள் மீது திணிக்கப்பட்டது. வேண்டாவெறுப் பாக அதனை ஏற்றுக்கொண்ட நீங்கள், கொஞ்சம் கொஞ்சமாக திரை வாழ்வில் ஈடுபாடு கொண்டதை தாமதமாக புரிந்து கொண்டீர்கள்!
2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, வியாழக்கிழமை. உங்கள் வேதா நிலையத் தில் இருந்து எனக்கு திடீர் அழைப்பு. அன் றைய தினம் உங்கள் முகத்தில் சற்றே சோகம். என்னிடம் வெகு நேரம் பேசிக்கொண்டிருந் தீர்கள். மாலை ஐந்தரை மணிக்கு வந்த நான், இரவு ஒன்பது மணிவரை உங்கள் இல்லத்தில் தான் இருந்தேன். உங்கள் பழைய நினைவு களை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.
அன்று நீங்கள் கூறிய சம்பவங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனது நெஞ்சை பிழிய வைத்தது. 1971-ல் தான் உங்கள் வாழ்வில் ‘ஆரண்ய காண்டம்’ ஆரம்பம். அதைப் பார்த்துவிட்டு பிறகு நீங்கள் அரசியல் பிரவேசம் செய்த ‘யுத்த காண்ட’த்துக்கு வருவோம்.
சிவாஜி கணேசனின் ராம்குமார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்னும் படத்தின் போதுதான், ‘ஆரண்ய காண்டம்’ துவங்கியது. ஆரண்யம் என்றால் காடுதானே? பொருத்தமாக, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டின் மாசினகுடி பகுதியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் உங்களுக்கு பிரச்சினைகளும் தொடங்கின.
‘அடிமைப் பெண்’, ‘நம் நாடு’ படங்களில் எம்.ஜி.ஆர். உங்களுக்கு தந்திருந்த முக்கியத்துவத்தை விரும்பாத சிலர், இரு வருக்கும் இடையே பிரச்சினைகளை எழுப்ப முயன்று கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர். என்றவுடன் உடனடியாக ஜெயலலிதா என்ற தங்களது பெயர் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டு வந்த நேரம் அது. உங்கள் கருத்துக்களுக்கு அவர் தந்த மதிப்பை பொறுக்க முடியாத அந்த சிலர், உங்கள் இருவரிடையே கல்திரை ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தனர். தனிப்பட்ட வாழ்விலும் நீங்கள் பல பிரச்சினை களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானதும் அப்போதுதான்.
அதே 1971-ல்தான், இந்திய தேசத்தின் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்தன. ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு…’ என்பதுபோல், துயரங்கள் என்றால் என்ன என்பதே அறி யாமல், குதூகலத்துடன் திரிந்து கொண்டிருந்த உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிக்கும் துன்பத் துக்கும் ஏற்பட்ட போரில் பல கசப்பான அனுபவங்கள்!
தங்கள் தாய் சந்தியா வெயில் மழையி லிருந்து தங்களை ஒரு குடை போன்று காத்து வந்தார். ஆனால் ‘சந்தியா காலம்’ முடிந்து உங்கள் வாழ்வில் தற்காலிகமாக இருள் சூழ்வதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங் கின. மொத்தத்தில் ‘திக்குத் தெரியாத காட்டில்’ தான் அந்த சமயத்தில் நீங்கள் இருந்தீர் கள். படத்தின் இயக்குநர் என்.சி. சக்கரவர்த்தி என்கிற ‘சக்கி’ தங்களுக்கு தூரத்து சொந்தம். எனது தந்தையின் நெருங்கிய நண்பர் அவர். விதி உங்களது எதிர்கால நிகழ்வுகளை தங்கள் திரைப்பட தலைப்புகளின் வாயிலாகவே கூறி வந்ததோ?
‘அடிமைப் பெண்’ணாக பிறரின் விருப்பு வெறுப்புகளுக்காகவே வாழத் துவங்கிவிட்ட உங்களுக்கு, ‘திக்குத் தெரியாத காட்டில்’ படப்பிடிப்பின்போதுதான், கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்டதுபோல் உணர்ந்ததாகக் கூறினீர்கள்.
‘திக்குத் தெரியாத காட்டில்’ படத்தின் கதை காட்டில் தங்கள் குழந்தையை பிரிந்து அதைத் தேடும் தம்பதியைப் பற்றியது. நீங்களும், முத்துராமனும், பேபி சுமதியை தேடுவது போல் காட்சிகள் அமைந்திருந்தன. மாசினகுடி தங்களுக்கு மிகவும் பிடித்த பகுதி. 1971-ல் அங்கே தங்கும் வசதிகள் கிடையாது. மைசூர் ஹோட்டல் ஒன்றில் தங்கி அங்கிருந்து அன்றாடம், மாசினகுடி காட்டுக்கு விடியற்காலையே வந்துவிடுவது படப்பிடிப்பு குழுவினரின் வழக்கம்.
நீங்களும், நடிகை சச்சுவும் காலையிலேயே வந்துவிட, பத்து மணிக்கு பிறகு, தயாரிப்பு நிர்வாகி ஜம்பு மீண்டும் மைசூர் சென்று ஒரு காரில் உங்கள் தாயாரை அழைத்து வருவார். அன்றும் அப்படித்தான், உங்கள் தாயாரை மைசூரில் இருந்து காரில் அழைத்து வந்தனர். காரில் இருந்து உங்கள் தாயாருடன் இறங்கிய இரண்டு பெண்களைக் கண்டதும் நீங்கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தீர்கள். அவர்கள், உங்கள் தந்தை ஜெயராமனுடைய சகோதரிகள்! உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்து, அமர வைத்தீர்கள்..
‘மைசூர் வரை வந்து விட்டு எங்களை காண வராமல் இருப்பதா?’’ என்று உங்களை உரிமையுடன் கடிந்து கொண்டனர் உங்கள் அத்தைகள். வரமுடியாத சூழ்நிலையை விளக்கி, அவர்களை சமாதானப்படுத்திவிட்டு குடும்ப விஷயங்களை பேசிக் கொண்டிருந் தீர்கள்.
திடீரென அத்தைகளிடம் இருந்து அம்பாய் பாய்ந்தது அந்தக் கேள்வி…‘‘அம்மு ! எப்போது எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடப் போறே ?’’ உங்கள் தாய் சந்தியாவும் பதிலை எதிர்பார்த்து ஆவலோடு உங்கள் முகத்தை நோக்கினார். ‘‘அதற்கென்ன அவசரம்! அதற்குமுன் எனது வீட்டின் கிரகப்பிரவேச சாப்பாடு போடறேன். கட்டாயமாக, நீங்கள் எல்லோரும் வரவேண்டும்…’’ என்று நீங்கள் சிரித்தபடியே பதில் அளித்தாலும் அவர்கள் முகங்களில் ஏமாற்ற ரேகைகள்!
ஆமாம்…அப்போதுதான் அகில இந்திய அள வில் புகழ் பெறப்போகும் தலைவர் வசிக்க உள்ள வீடாக மாறப் போகிறது என்பது தெரியாமல், சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள தற்போதைய ‘வேதா நிலைய’த்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிற் காலத்தில் அன்னை தெரசா, ராஜிவ் காந்தி, அத்வானி, நரேந்திர மோடி என்று பெருந்தலை வர்கள், சமூக சேவகர்கள், புகழ் பெற்ற பிரபலங் கள் வந்த இடம். தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அரசியலின் தலைவிதியையும் நிர்ண யித்த இடமான ‘வேதா நிலையம்’ அன்று சந்தியாவின் மேற்பார்வையில் கட்டப்பட்டு வந்தது! ‘வேதா நிலையம்’ என்று அப்போது பெயர் வைக்கப்படவில்லை. உங்கள் தாய் சந்தியா, மைசூரில் நீங்கள் வசித்த வீடான ‘ஜெயா நிவாஸ்’ பெயரைத்தான் இந்த வீட்டுக்கும் சூட்ட முடிவு செய்திருந்தார்.
என்னருமை தோழி…!
அக்டோபர் 16, வியாழக்கிழமை அன்று மாலைதான் நமது சந்திப்பின் இடையே, போயஸ் கார்டன் மனையை வாங்கியது தொடர்பாக நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தை எனக்கு தெரிவித்தீர்கள்!
அதற்கு முன்பாக, வேதா நிலைய இல்லத்தை, தங்கள் பூஜை அறை, டைனிங் ஹால், மாடிப் பகுதி, நூல் நிலையம் போன்ற பகுதிகளை எனக்கு சுற்றி காட்டியிருந்தீர்கள். ‘‘நேர்மறையான எண்ணங்களை தோற்று விக்கும் இடமாக தங்கள் இல்லம் திகழ்கிறது” என்று நான் கூறியபோது….
‘‘உண்மை நரசிம்மன். ஆனால்…’’ என்ற பீடிகையுடன் நீங்கள் கூறியதைக் கேட்ட எனக்கு வியப்பு…!
- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
படம் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT