Published : 17 Sep 2016 09:50 AM
Last Updated : 17 Sep 2016 09:50 AM

எம்.எஃப்.ஹுசைன்: 10

உலக புகழ்பெற்ற இந்திய ஓவியர்

‘இந்தியாவின் பிகாஸோ’ என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் எம்.எஃப்.ஹுசைன் (M.F.Husain) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் (1915) பிறந்தவர். மக்புல் ஃபிதா ஹுசைன் என்பது இவரது முழுப் பெயர். சிறு வயதிலேயே தாயை இழந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு, குடும்பம் இந்தூரில் குடியேறியது. அங்கு ஆரம்பக் கல்வி பயின்றார்.

*இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நன்கு கவிதையும் எழுதுவார். சிறு வயதுத் தோழருடன் சேர்ந்து புராணங்கள், கீதை, உபநிடதங்கள் கற்றார். ராம் லீலா கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். முதலில் காலிகிராஃபி ஓவியம் பயின்றார். 20-வது வயதில் பம்பாய் சென்று, ஜே.ஜே. கலைப்பள்ளியில் சேர்ந்தார்.

*ஆரம்பத்தில் திரைப்பட விளம்பரத் தட்டிகள் வரைந்தார். பொம்மை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டார். சூரத், பரோடா, அஹமதாபாத் சென்று அங்குள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை ஓவியமாகத் தீட்டினார். 1940-களில் இவரது படைப்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. 1947-ல் பம்பாய் ஆர்ட் சொசைட்டி கண்காட்சியில் வைக்கப்பட்ட ‘சுன்ஹேரா சன்சார்’ ஓவியம் விருது பெற்றது.

*டெல்லி சென்றவர், மதுரா சிற்பங்கள், ஓவியங்களால் வசீகரிக்கப்பட்டார். இது அவரது ஓவிய வளர்ச்சியில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்திய, மேற்கத்திய பாணியை ஒன்றிணைத்து புதிய பாணியை உருவாக்கினார். நாட்டின் பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தினார்.

*ராமாயணத்தை ஆழ்ந்து படித்து, 8 ஆண்டுகளாக உழைத்து, 150 ராமாயண ஓவியங்கள் தீட்டினார். 1952-ல் முதன்முதலாக ஜூரிச்சில் ஓவியக் கண்காட்சி நடத்தினார். இதைத் தொடர்ந்து இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.

*நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் ஓவியங்களை வரைந்துள்ளார். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, ராமாயணம், மகாபாரதம், சிவன், விஸ்வாமித்திரர், 45 நீர்வண்ண ஓவியங்கள் அடங்கிய தொடர் ஓவியம், ‘பாசேஜ் த்ரூ ஹ்யூமன் ஸ்பேஸ்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

*‘எனது ஓவியங்கள் கதை சொல்ல வேண்டும். மக்களுடன் பேச வேண்டும். பாரம்பரியத்தோடு கிராமியத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்பார். மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர், கீட்ஸ் போல காளிதாசன் பற்றியும் கற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

*திரைப்படம், புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மாதுரி தீட்சித், தபு ஆகியோரது தீவிர ரசிகர். அவர்களை வைத்து திரைப்படங்களும் இயக்கியுள்ளார். 1987-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*படைப்பாற்றலுக்காக மட்டுமல்லாது, சர்ச்சைகளாலும் அதிகம் பேசப்பட்டவர். சில ஓவியங்களுக்காக பொதுநல வழக்குகளை சந்திக்க நேர்ந்ததால், 2006-ல் துபாயில் குடியேறினார். பின்னர், லண்டன் சென்றவர் இறுதிவரை அங்கேயே வசித்தார். பிரபல போர்ப்ஸ் இதழ் இவருக்கு ‘இந்தியாவின் பிகாஸோ’ என புகழாரம் சூட்டியது.

*பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2 மில்லியன் டாலருக்கு இவரது ஓவியம் ஒன்று விலைபோனது. ஓவிய உலகில் தனித்துவம் வாய்ந்தவராகப் போற்றப்பட்ட எம்.எஃப்.ஹுசைன் 96-வது வயதில் (2011) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x