Published : 19 Jan 2017 08:52 AM
Last Updated : 19 Jan 2017 08:52 AM
1966-ம் வருடத்தில், நீங்கள் 10 படங்களில் நடித்திருந்தீர்கள். அவற் றில் ‘சந்திரோதயம்’, ‘தனிப்பிறவி’ ஆகிய இரண்டில் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தீர் கள். தங்களுடன் ஜோடியாக நடிக்கத் தயாராக இருந்த சிவாஜி கணேசனுக்கு நீங்கள் மகளாக ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நடித்தீர்கள்! அந்த வருடம் மீதி ஏழு படங்களிலும், ரவிச் சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் நடித்திருந்தீர்கள்.
இப்படி நேரும் என்று சிவாஜி கணேசனே எதிர்பார்த்திருக்கமாட்டார். இருப்பினும் அவர் சந்தியாவிடம் ‘‘இப்போதும் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடிக்கத் தயார்’’ என்று சொல்லி இருந்தார். ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் தாங்கள் முக்கிய கதாநாயகியாக இருந்தாலும், தங்களுடன் ‘வெண்ணிற ஆடை’யில் அறிமுகமான நிர்மலா, இந்த படத்தின் இரண்டாவது நாயகி. எம்.ஜி.ஆருடன் பாடல் காட்சி வேறு எடுக்கப்பட்டு, அதை கண்டு தாங்கள் வெறுப்புறுவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ‘என்ன பொருத்தம்’ பாடல் மூலம் தகராறு நடைபெறுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
உங்களுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏதோ பிரச்சினை என்றும், அதனால்தான் இரண்டாவது கதாநாயகி யாக நிர்மலா அறிமுகம் ஆனார் என்றும் அப்போது சில பத்திரிக்கை கள் எழுதின. 1966-ல் ரவிச்சந்திரனுடன் நீங்கள் மூன்று படங்களில் நடித்தி ருக்க, 1967-ம் வருடம் வெளியான ராமண்ணாவின் படமான ‘நான்’ சூப்பர் ஹிட் ஆனது.
நீங்கள் ரவிச்சந்திரனுடன் அதிக படங்கள் நடிக்க ஒப்பந்தம் ஆனதால்தான், ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் உங்களுடைய முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்றெல்லாம்கூட கூறப்பட்டது. அதேசமயம், ‘நான்’ படத்தின் முழு வெற்றிக்கும் தாங்களே காரணம் என்பதை படம் பார்த்த அனைவருமே ஒப்புக்கொண்டிருந்தனர். டி. ஆர். ராமண்ணா அந்த படத்தில் உங்களது திறமைகள் முழுவதும் வெளிப்படும்படி இயக்கி இருந்தார்.
என்னருமை தோழி...!
1961-ல் வெளியான ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கிலப் படம், உங்களை மிகவும் கவர்ந்திருந்தது. குறிப்பாக அதன் டைட்டில் ‘தீம்’ பாட்டை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பீர்கள். தங்களுக்கு தெரியாத வித்தை கிடையாது கே.ஜே சரஸாவிடம் பரதநாட்டியம், வேம்பட்டி சின்னசத்யமிடம் குச்சிப்புடி, கதக், மணிப்புரி, மோஹினியாட்டம் எல்லாமே பயின்று இருந்தீர்கள். கர்னாடக இசை மட்டுமல்லாமல் மேற்கத்திய இசையை பியானோவில் வாசிக்கவும் தெரியும் உங்களுக்கு!
வீட்டில் ‘கம் செப்டம்பர்’ இசையை நீங்கள் பியானோவில் இசைக்க, உங்கள் தோழிகள் நடனமாடுவார்கள். ‘நான்’ பட ஷூட்டிங்கில் ஒருநாள் இயக்குநர் ராமண்ணா, தாங்கள் பாடுவதைக் கேட்டு, ‘அம்மு...நீ பாடற டியூன் நல்லாயிருக்கே...என்ன பாட்டு இது..?’ என்று கேட்க, நீங்களும் சொன்னீர்கள். இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தியிடம் அந்த பாட்டை தமிழுக்கேற்றபடி ‘டியூன்’ போடச் சொன்னார் ராமண்ணா. ‘வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே...நீ மறந்தால்..நான் வரவா..’என்று எல்.ஆர்.ஈஸ்வரியைக் கொண்டு பாடச் சொல்லி, ‘‘நாளை இந்த பாட்டுக்கு நீங்கள் ஆட வேண்டும்...’’ என்று ராமண்ணா சொன்னபோது, உங்கள் முகத்தில்தான் எத்தனை உற்சாகம்!
பாட்டின் ஒவ்வொரு வரியையும் சிலாகித்து ஆடி முடித்தீர்கள். டி.கே.ராமமூர்த்தியிடம், ‘‘ஆங்கிலப் பாட்டை மிக அழகாக ‘இண்டியனைஸ்’ செய்துள்ளீர்கள்” என்று பாராட்டவும் செய்தீர்கள். அந்த பாட்டிற்கு நீங்கள் துள்ளியாடியபோது அரங்கமே அதிர்ந்ததே!
இந்த பாட்டிற்கு மேற்கத்திய நடனம் என்றால், ‘அம்மனோ சாமியோ’ பாட்டில் உக்கிரமாக நீங்கள் ருத்ர தாண்டவம் ஆடியபோது, அரங்கத்தில் பெண் ரசிகர்களும் உங்களுடன் சாமியாடினார்களே! ‘மூன்றெழுத்து’ படத்தில், உங்களையும், ரவிச்சந்திரனையும் மரப்பெட்டி ஒன்றில் அமர வைத்து ஒரு பாடல் காட்சியை எடுத்தார் இதே ராமண்ணா.
அவருக்கு காரில், மரப்பெட்டியில், கிணற்றில், டூயட் காட்சிகளை வித்தியாசமாக எடுத்துப் பழக்கம். ‘பறக்கும் பாவை’ படத்தில் எம்.ஜி.ஆரையும் சரோஜா தேவியையும் குளியல் அறையில் வைத்து ‘உன்னைத் தானே... ஏய்.. உன்னைத்தானே...’ பாடல் காட்சியை படமாக்கியவர் ராமண்ணா. கொட்டும் மழையில், ஹெரால்ட் கார் ஒன்றினுள் உங்களையும் ரவிச்சந்திரனையும் வைத்து, ‘போதுமோ இந்த இடம்...’என்று காட்சி ஆக்கினாரே..!
பின்னாளில், நீங்கள் சட்டப் பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்றபோதெல்லாம், ‘போதுமோ இந்த இடம்’ என்று கேட்டுக் கேட்டு வாக்காளர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டதாக நான் கற்பனை செய்து கொண்டதுண்டு. இந்த என் கற்பனையை ஒருமுறை உங்களிடம் சொன்னபோது, மனம்விட்டு ரசித்து சிரித்தீர்கள்!
மொத்தத்தில்... ‘நான்’ படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த மிகப் பெரிய வெற்றிப்படமானது. 1968 ஜனவரியில் வெளியிடப்பட்ட ’ரகசிய போலீஸ் 115’ படமும் வெற்றிப் படம்தான் என்றாலும், எம்.ஜி.ஆருக்கும் தங்களுக்கும் இடையே ஏதோ பிரச்சினை... அதனால்தான் படத்தில் உங்களிடம் ஒரு ஈடுபாடே தெரிய வில்லை என்று கிளம்பிய வதந்திகளை நீங்கள் எள்ளி நகையாடினீர்கள். ஆனால், நீங்களே சந்தேகம் கொள்ளு மளவுக்கு, ‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் சில நடவடிக்கைகள் இருந்தன...!
- தொடர்வேன்,
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
படம் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT