Last Updated : 15 Sep, 2016 03:33 PM

 

Published : 15 Sep 2016 03:33 PM
Last Updated : 15 Sep 2016 03:33 PM

யூடியூப் பகிர்வு: பேக்வாட்டர்ஸ்- பெரும் திரை அனுபவம் தரும் குறும்படம்!

இன்றுவரும் குறும்படங்களைப் பார்த்து ''இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்'' என்ற அமுதபாரதியின் கவிதை வரிகளாக ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில், 'Backwaters' எனும் குறும்படம் ''இதோ நாங்கள்'' என்கிற நம்பிக்கையை தருவதாக உள்ளது.

எங்கோ சென்றுவிட்டு படகுத்துறைக்கு (மம்முட்டி அறிமுகமானபோதிருந்த முகஜாடையுடன்) ஒரு அந்நிய இளைஞன் வருகிறான். படகோட்டியைப் பார்த்து தான் போகும் இடத்துக்கு கொண்டுபோய்விடச் சொல்லி கேட்கிறான். மலையாளக் கரையோரத்தின் அடர் சோலைவனமிக்க முகத்துவாரத்தின் நீர்த்தடங்களில் படகும் செல்கிறது.

பேச்சுவாக்கில் தான் எழுத்தாளன் என்று அவன் சொல்ல ''அப்போ ஒரு கதை சொல்லுங்கள்'' என படகுக்காரர் கேட்கிறார். ''தோழி பிரிந்தபிறகு இப்போதெல்லாம் எழுதுவதே நின்றுவிட்டது, நீங்கள்தான் படகுப் பயணத்தில் நிறைய பேரை பார்த்திருப்பீர்களே ஒரு கதையை சொல்லுங்களேன்'' என அந்நிய இளைஞன் கேட்கிறான். ஒரு தாழ்வான பழைய பாலம் வருகிறது... படகுக்காரர் குனிகிறார்... மெல்ல அந்த பிரேம்களின் ஒளிகுன்ற... வேறொரு நீரின்பொலிவுமிக்க பழைய நினைவுகளாக காட்சி மாறுகிறது....

இயற்கையின் புத்தெழிலை சுவாசிக்கும் பரவசரத்தோடு, வளரிளம் பெண்ணொருத்தியும் வருகிறாள்... தன் பயணியாக வந்த அவள் வாழ்விலும் ஒரு சம்பவம். படகோட்டி காலத்தின் சாட்சியாக முகத்துவார நீரில் துடுப்பைச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.

ஆட்களும் காலங்களும் மாறக்கூடுமே தவிர, சில விஷயங்கள் எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எப்போதும் சுற்றும் நியதியைப் போன்றது. இளம்பெண்ணைப் பற்றி இப்படம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

இதை குறும்படம் என்று சொல்ல மனம் வரவில்லை. நம்புங்கள் 14 நிமிடக் கதைதான். என்றாலும் ஒரு பெரிய திரைப்படத்தைப் பார்த்ததுபோன்ற பிரமை. கட்ஷாட்களை அள்ளிக்குவிப்பதுதான் ஒளிப்பதிவு என்றும் அதுதான் இயக்கம் என்றும் வேகமான உலகத்தின் இன்னுமொருபோக்கை புறம்தள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒளிப்பதிவை சி.ஜே.ராஜ்குமார் வழங்கியிருக்கும் லாவகம். சார்லஸின் பின்னணி இசையில் தகுந்த நேரத்தில் நம் உணர்வுகளை மீட்டிச் செல்கிறது. குருவிகள் காகங்கள் கீறிச்சிடும், கரையும் சப்தங்கள்.. வானம்பாடி, குயில்களின் ரீங்காரங்கள், கூவல்கள், நீரைக்குத்தி கிழித்துச் செல்லும் துடுப்பின் ஓசை என மெல்லிய பதிவுகளைச் செய்த அகிலேஷ் ஆடியோகிராபிக்கு ஒரு சல்யூட்.