Published : 28 Feb 2017 10:32 AM
Last Updated : 28 Feb 2017 10:32 AM
வீட்டுக்குள் ஏறி வந்த கணவன் முகுந்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஜோசியர் என்ன சொல்லியிருப்பார் என்று கல்யாணிக்குப் புரிந்தது. அவரே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தாள்.
‘‘கல்யாணி! நம்ம காவ்யா ஜாதகமும் பையனோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்காம். ஒரு மாசத்துக்குள்ளே கல்யாணம் நடத்திடலாம்னு ஜோசியர் சொன்னார். ஆனால், எனக்கென்னவோ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு செய்யலாம்னு தோணுது. நம்ம ரோஷினிக்குச் செய்ததைவிட அம்பது சவரன் நகை அதிகம் போட்டு, ரெண்டு லட்சம் ரொக்கம் கொடுத்து, பெரிய கல்யாண மண்டபம் எடுத்து காவ்யாவை நல்லமாதிரி கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு தீர்மானிச்சிருக்கேன். அதுக்கு பணம் ஏற்பாடு பண்ண ரெண்டு மாசம் வேணும்’’ என்று சொல்லிவிட்டு, மனைவி கல்யாணியின் முகத்தைப் பார்த்தார் முகுந்தன்.
கல்யாணியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
‘‘என்ன கல்யாணி, பதிலே காணோம்?’’
‘‘நாமளா எதுக்கு காவ்யாவுக்கு அதிகம் கொடுக்கணும். மாப்பிள்ளை வீட்ல எதுவும் கேட்கலியே. நம்ம ரோஷினிக்கு செஞ்ச மாதிரியே செஞ்சா போதும்.’’
‘‘என்ன இப்படி சொல்றே? உன் அக்காவும் மாமாவும் விபத்துல பலியானதுலர்ந்து, நாமதான் காவ்யாவை வளர்க்குறோம். சொந்த அப்பா அம்மா இல்லையேங்கிற மனக்குறை அவளுக்கு வரக்கூடாது. நாம பெத்தவங்களா நின்னு அவளுக்கு நிறைவா கல்யாணம் செஞ்சு கொடுத்தா அவ மனசு எவ்ளோ சந்தோஷப்படும்! காவ்யா நம்ம சொந்தப் பொண்ணு இல்லேங்கிறதுனாலதானே இப்படி பேசுறே?’’ - சற்று கோபமாய்க் கேட்டார் முகுந்தன்.
‘‘காவ்யாவை என் சொந்தப் பொண்ணா நினைச்சதாலதாங்க அப்படி சொல்றேன். இங்கே பாருங்க. இந்த உலகத்துல ஏதாவது குறை யோட பிறக்கிறவங்க மேல எத்தனை நாளைக்குத்தான் பரிதாபப்பட்டுக் கிட்டே இருப்பீங்க. அப்படி பரிதாபப்பட்டுட்டே இருந்தா அவங்களும் வாழ்க்கையில மேல ஏறி வராம அங்கேயேதான் நிப்பாங்க. இப்போ காவ்யாவுக்கு ரோஷினியைவிட அதிகமா செஞ்சோம்னா, பெத்தவங்க இல்லாத என் மேல பரிதாபப்பட்டுதான் அதிக பணத்தைக் கொடுத்து தள்ளிவிடறாங்கங்கிற நினைப்பு வரும். நம்ம ரோஷினிக்கு செஞ்சதையே காவ்யாவுக்கு செஞ்சாத்தான் அவளை நம்ம சொந்தப் பொண்ணா பார்க்கறோம்ங்கிற நம்பிக்கை அவளுக்கு வரும். நான் அவளை சொந்தப் பொண்ணாப் பார்க்கறேன். நீங்க ஏதோ சுமையை இறக்கி வைக்கணும்ங்கிற மாதிரி பேசறீங்க.’’
கல்யாணி சொல்லி முடிக்க, ‘‘ஓஹோ, இப்படி ஒரு கோணம் இருக்கிறது எனக்குப் புரியலயே! அப்ப, நீ சொன்ன மாதிரி அடுத்த மாசமே காவ்யாவுக்கு கல்யாணத்தை நடத்தி முடிச்சுடலாம்!’’ மனநிறைவாய்ச் சொன்னார் முகுந்தன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT