Published : 27 Sep 2016 10:24 AM
Last Updated : 27 Sep 2016 10:24 AM

சி.பா.ஆதித்தனார் 10

தமிழ் இதழியல் முன்னோடி

தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவருமான சி.பா.ஆதித்தனார் (Si.Ba.Adithanar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் பிறந்தார் (1905). தந்தை, வழக்கறிஞர். சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் என்பது இவரது முழுப்பெயர். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பும் பயின்றார்.

*கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

*‘சுதேசமித்ரன்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் லண்டனிலிருந்து வெளிவந்த ‘ஸ்பெக்டேட்டர்’ வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா திரும்பியவுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் சென்று பணியாற்றினார்.

*1942-ல் தமிழகம் திரும்பினார். முதன்முதலில் ‘மதுரை முரசு’ என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் ‘தமிழன்’ என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதனால் இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும்கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்.

*1942, நவம்பர் மாதம், மதுரையில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மாலை மலர்’ என்ற மாலைப் பத்திரிகையையும் ‘ராணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். 1947-ல் ‘தினத்தாள்’, ‘தினத்தூது’ ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.

*எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டார். ‘ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்’ என்ற சீனப் பழமொழிக்கேற்ப தனது நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டார்.

*அனைத்துவிதமான செய்திகளையும் வெளியிட்டு அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவினார். மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தின் கீழ் ‘ராணி முத்து’ என்ற இதழை ஆரம்பித்தார்.

*காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்ச்சி, அதைக் காகிதமாக மாற்ற கடுமையாக உழைத்தார். மாணவர்களுக்கு என ‘வெற்றி நிச்சயம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி கல்வியை வளர்த்தார்.

*தமிழரசுக் கட்சி, நாம் தமிழர் இயக்கங்களைத் தொடங்கி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 1942 முதல் 1953 வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1967-ல் சபாநாயகராகவும், 1969-ல் தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.

*‘இதழாளர் கையேடு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல் இதழாளர்களுக்கு இன்றும் பயன்படும் நூலாக விளங்குகிறது. ‘தமிழ்ப் பேரரசு’ என்ற நூலும் எழுதியுள்ளார். இவரது பெயரில் இரண்டு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சிக்கு வித்திட்ட சி.பா.ஆதித்தனார், 1981-ம் ஆண்டு 76-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x