Published : 30 Jan 2017 09:55 AM
Last Updated : 30 Jan 2017 09:55 AM

பீட்டர் ஆக்ரே 10

நோபல் பெற்ற அமெரிக்க அறிவியலாளர்

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் பீட்டர் ஆக்ரே (Peter Agre) பிறந்தநாள் இன்று (ஜனவரி 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து

* அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் நார்த்ஃபீல்டு நகரில் (1949) பிறந்தவர். தந்தை வேதியியல் பேராசிரியர். சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். பல நாடுகளையும் சுற்றிப் பார்க்க விரும்பி, நிறைய பயணங்கள் மேற்கொண்டார்.

* கல்லூரி நாட்களில் அறிவியல் மிகவும் ஈர்த்தது. தந்தை போலவே வேதியியல் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். அங்கு உயிரி மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குடல்நச்சுத் தன்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, அதனால் ஏற்படும் சிசு மரணங்கள் குறித்து ஆராய்ந்தார்.

* கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் கேஸ் மருத்துவ மையத்தில் பயிற்சிப் பெற்றார். குருதியியல், நோய்க்கட்டிகள் குறித்த ஆராய்ச்சி ஃபெல்லோவாக வடக்கு கரோலினா மருத்துவமனையில் பணியாற்றினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியின் செல் உயிரித்துறை ஆய்வுக்கூடத்தில் இணைந்தார்.

* சிவப்பணு சவ்வுக்களை ஆராய்ந்து, சைட்டோஸ்கெலிடன் புரதக் குறைபாடுதான் சிலவகை பரம்பரை நோய்கள், ஹீமோலிட்டிக் ரத்தசோகை ஆகியவற்றுக்கு காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூபெர்க் பொது மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவத் துறைப் பேராசிரியர், ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

* பல்வேறு நோய்கள், அவற்றின் காரணங்கள் குறித்து ஆராய்ந்தார். செல்களின் சவ்வுக்குள் நீர் எவ்வாறு செல்கிறது என்பது யாருக்கும் புலப்படாமல் இருந்தது. வெகுகாலம் கண்டறியப்படாத இந்தப் புதிரை விடுவித்தார். தன் சகாக்களுடன் இணைந்து ரத்தவகை ஆன்டிஜன் (RhD) குறித்தும் ஆராய்ந்தார். அப்போது தற்செயலாக, ரத்த சிவப்பணு சவ்வு புரோட்டீன்கள் இருப்பைக் கண்டறிந்தனர்.

* செல்சுவரில் நீர் தங்கியிருப்பதில்லை. மிகவும் ஒத்திசைந்த முறையில் இது செல்கள் வழியாக நகர்கிறது என்பதைக் கண்டறிந்தார். உயிரணுக்களின் மென்சவ்வு (Cell Membrane) குறித்த இவரது ஆராய்ச்சிகளுக்காக, ரொடரிக் மேக்கின்னானுடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2003-ல் பெற்றார்.

* மனித உடலின் பல்வேறு திசுக்களில் 12 அக்வாபோரின்கள் உள்ளன என்பதை இவரது குழுவினர் அடையாளம் கண்டனர். பெருமூளைத் தண்டுவட திரவம், கண் திரவம், கண்ணீர், வியர்வை, எச்சில் சுவாசப் பாதைகளின் ஈரப்பதமூட்டல், சிறுநீரக செறிவு ஆகியவற்றுக்கு இது அவசியமானது என்பதையும் எடுத்துக் கூறினர்.

* இதன் குறைபாட்டால் பெருமூளை எடிமா, உலர் கண், உடல் நீர் வறட்சி உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை யும் கண்டறிந்தனர். வடக்கு கரோலினாவில் உள்ள ட்யூக் பல் கலைக்கழக மருத்துவ மையத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அங்கு உயிரி மருத்துவத் துறையை மேம்படுத்தினார்.

* பின்னர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மலேரியா ஆய்வுக்கூட இயக்குநராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அறிவியல் அகாடமி, அமெரிக்க தத்துவவியல் சங்கம், அமெரிக்க நுண்உயிரியல் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினராக செயல்பட்டார். ஈகிள் ஸ்கவுட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.

* அமெரிக்கா, ஜப்பான், நார்வே உள்ளிட்ட பல நாடுகளின் 19 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. தற்போதும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் பீட்டர் ஆக்ரே இன்று 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x