Published : 16 Oct 2014 03:17 PM
Last Updated : 16 Oct 2014 03:17 PM
தன் அம்மா மீது சங்கருக்கு இருக்கும் மரியாதையை பொடிப்பொடியாக்கி காலி பண்ணவேண்டும் என்பது சித்ராவின் லட்சியம். அதற்கான முதல் காயை இன்று நகர்த்த ஆரம்பித்தாள்.
“சித்ரா... நான் தினமும் ராத்திரி பசியோட வருவேன்னு தெரிஞ்சு நான் வரும்போது ரெடியா டிபன் பண்ணி வச்சுருப்பே இல்லே?... இன்னைக்கு என்னாச்சு? பசி என் வயித்தை கிள்ளுது. நீ என்னடான்னா இப்பதான் கிச்சனை உருட்டிக்கிட்டு இருக்கே?” டைனிங் டேபிளில் இருந்து சங்கர் சத்தம் போட ஆரம்பித்தான்.
“இதோ வந்துட்டேங்க. கொஞ்சம் பொறுத்துக்குங்க!” என்று குரல் கொடுத்த சித்ரா, வேண்டுமென்றே தாமதமாக டிபனை ரெடி செய்தாள்.
சங்கரால் பசி தாங்க முடியவில்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்த கூல்டிரிங்ஸை கொஞ்சம் பருகிவிட்டு, டைனிங் டேபிளில் இருந்து, டிவி முன் இடம் பெயர்ந்தான்.
சரியாக அரைமணி நேரம் அவனை காக்க வைத்த சித்ரா, நிதானமாக டிபனை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்து விட்டு, “கோவிச்சுக்காதிங்க. எனக்கு பீரியட் டைம். வயித்து வலி தாங்கலை. எனக்கு முடியாத இந்த நேரத்தில், உங்க அம்மா எனக்கு கூடமாட ஹெல்ப் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க வரலை. அதனாலதான் நான் என் சிரமத்தை பொறுத்துக்கிட்டு உங்களுக்கு டிபன் செய்ய இவ்வளவு லேட்டாயிடுச்சு. இதுக்காக நீங்க உங்க அம்மாவை கோவிச்சுக்க வேணாம். பாவம் அவங்களுக்கு இந்த வயசில என்ன கஷ்டமோ?” என்று அப்பாவியாக கணவனிடம் சொன்னாள்.
தான் சொன்னதைக் கேட்டதும், சங்கர் முகத்தில் தன் தாய்க்கு எதிரான கோபம் தென்படுகிறதா என்று தேடினாள். அவனது இறுக்கமான முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தும், மேலும் அவன் போக்கிலேயே போய் அவனை டென்ஷனாக்கும் முயற்சியை கையாள ஆயத்தமானாள் சித்ரா.“பாவம் உங்க அம்மா. இந்த நேரத்திலகூட அவங்க நமக்கு உபயோகம் இல்லாம இருக்காங்களேன்னு நீங்க அவங்களை தப்பா நினைச்சுடாதீங்க எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், நான் உங்களுக்காகவும், நம்ம குழந்தைகளுக்காகவும் தாங்கிக்கிறேன். அவங்க கடைசி வரை ஓய்விலேயே இருக்கட்டும்!” என்று திரியை பற்ற வைத்துவிட்டு சரவெடி வெடிக்கப் போவதை பார்க்க ஆவலாய் இருந்தாள் சித்ரா.
அவள் எதிர்பார்க்காத விதத்தில் சரவெடி சரசரவென வெடித்து சிதறியது...
“நீ சொல்றது சரிதான் சித்ரா. இந்த வயசிலேயே உனக்கு இவ்வளவு உபாதைகள்னா, இவ்வளவு வயசான என் அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும்னு நினைச்சா கவலையா இருக்கு. அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு இவ்வளவு நாள் நம்ம குடும்பத்துக்காக தன் வலிகளை வெளிக்காட்டிக்காம உழைச்சிருக்காங்க. நீயே உன்னால என்ன முடியுமோ அதை மட்டும் சமைச்சா போதும். என்ன சொல்ற?’’ சித்ராவின் முகத்தில் ஈயாடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT