Published : 30 May 2017 09:37 AM
Last Updated : 30 May 2017 09:37 AM
நோபல் பெற்ற உயிரி வேதியியலாளர்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியலாளர் ஜூலியஸ் ஆக்செல்ராட் (Julius Axelrod) பிறந்த தினம் இன்று (மே 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான யூதக் குடும்பத்தில் (1912) பிறந்தார். சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் கொண்டி ருந்தார். பள்ளிக்கல்வி முடிந்த பிறகு, நியூயார்க் கல்லூரியில் பட்டம் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்ற ஆசை, இவரது யூதப் பின்னணி காரணமாக நிராசையானது.
* நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுநராக சிறிது காலம் பணி யாற்றினார். பின்னர், நியூயார்க் நகர சுகாதார, மனநலத் துறை யில் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிக்கொண்டே, இரவு நேரத்தில் பயின்று அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
* கோல்டுவாட்டர் நினைவு மருத்துவமனையின் பல்கலைக்கழக ஆய்வு அசோசியேட்டாக நியமிக்கப்பட்டார். அங்கு பிரபல உயிரி வேதியலாளர்களுடன் இணைந்து, வலி நிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். ஆஸ்பிரின் அல்லாத வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவோருக்கு ஒருவித ரத்த நோய் ஏற்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
* தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், ரசாயன அசிட மினோஃபென், வலி நிவாரணப் பண்புகளைக் கொண்டிருப்பது புலப்பட்டது. இது பாராசிட்டமால், டைலெனால், பானடால் உள்ளிட்ட மருந்துகளாக மார்க்கெட் செய்யப்பட்டு, நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அசிடமினோஃபென் உலக அளவில் மிகவும் பிரபலமான வலி நிவாரணியாகப் புகழ்பெற்றது.
* பெதாஸ்தாவில் உள்ள தேசிய இதய நிறுவனத்தின் வேதியியல் பிரிவின் அசோசியேட்டாக 1949-ல் நியமிக்கப்பட்டார். 1953-ல் சீனியர் கெமிஸ்டாக பதவி உயர்வு பெற்றார். முழுமையான நரம்பு மண்டலம், அதன் முக்கிய நரம்பியல் கடத்திகள், எபினஃபிரைன், நார்பைன்ஃபிரைன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* தேசிய மனநல மருத்துவ நிலைய ஆய்வுக்கூடத்தில் மருந்தியல் பிரிவுத் தலைவராக 1955-ல் நியமிக்கப்பட்டார். 1984-ல் ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார். இதற்கிடையில், மூளையில் உள்ள கேட்டகோலமைன் தொடர்பான ஆராய்ச்சியில் 1950-ல் ஈடுபட்டார்.
* கேட்டகோலமைன் நியூட்ரோ டிரான்மிட்டர்ஸ் வெளியீடு மற்றும் மறுபயன்பாடு குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஜெர்மன் விஞ்ஞானி சர் பெர்னார்ட் காட்ஸ், ஸ்வீடன் விஞ்ஞானி உல்ஃப் வான் யூலர் ஆகியோருடன் இணைந்து 1970-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமியின் ஃபெல்லோவாக 1971-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* கேட்டகால்-ஓ-மெதில் டிரான்ஸ்ஃபெரேஸ் என்சைம்களைக் கண்டறிந்து பிரித்தெடுத்தார். இந்தக் கண்டுபிடிப்பு, ஒட்டுமொத்த நரம்பியல் அமைப்பு குறித்த புரிதலுக்கும், பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் துணைநின்றது. பினியல் சுரப்பியின் செயல்பாடுகளை விளக்கியதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். இவை மத்திய நரம்பு மண்டலம் முழுவதும் தாக்கங்கள் ஏற்படுத்துவதை நிரூபித்துக் காட்டினார்.
* அறிவியல் இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். பல இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். கெயர்டன் அறக்கட்டளையின் சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார்.
* அமெரிக்க தேசிய மனநல மருத்துவ நிலைய ஆய்வுக்கூடத்தில் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, உயிரி வேதியியல் களத்திலும் உயிரி மருத்துவத் துறையிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜூலியஸ் ஆக்செல்ராட் 92-வது வயதில் (2004) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT