Published : 10 Feb 2017 09:58 AM
Last Updated : 10 Feb 2017 09:58 AM
ஆங்கில எழுத்தாளர், கவிஞர்
ஆங்கில இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான சார்லஸ் லாம்ப் (Charles Lamb) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரிட்டன் தலைநகர் லண்டனில் (1775) பிறந்தவர். தந்தை, வழக்கறிஞரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். தன் அக்கா ஏற்படுத்திய ஆர்வத்தால், புத்தகங்கள் படிப்பதில் சார்லஸுக்கு அதிக நாட்டம் பிறந்தது. எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படித்துவிடுவார்.
* சிறுவயதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தால், தனியாக ஒருவரிடம் கல்வி பயின்றார். சிறிது காலம் பள்ளியிலும் கற்றார். 1782-ல் உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு மிக மோசமான கற்கும் சூழல், முரட்டுத்தனமான ஆசிரியர்கள் இருந்தாலும்கூட, பின்னாளில் புகழ்பெற்ற சாமுவேல் கோல்ட்ரிட்ஜ் உள்ளிட்ட இலக்கியவாதிகளுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.
* லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றார். வறுமை காரணமாக 14 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். 1792-ல் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியில் கணக்காளராக நியமிக்கப்பட்டார். 25 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணியாற்றினார்.
* இளம் வயதிலேயே எழுத்தாற்றல் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி வந்தார். 1796-ல் வெளிவந்த இவரது நண்பர் கோல்ட்ரிட்ஜின் கவிதைத் தொகுப்பில் இவரது சில கவிதைகள் இடம்பெற்றன. இதன்மூலம் கவிஞராக அங்கீகாரம் பெற்றார். நண்பரின் 2-வது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் இவருக்கு ஓரளவு பெயர் வாங்கித் தந்தன.
* மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த அக்கா, நோய்ப் படுக்கையில் கிடந்த அம்மாவைக் கத்தியால் குத்திவிட்டார். தனது செல்வாக்கால் இந்தக் குற்றத்துக்கான தண்டனையில் இருந்து அக்காவைக் காப்பாற்றினார். மனநலக் காப்பகத்தில் அக்காவைச் சேர்த்து, தன் வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்காகச் செலவிட்டார்.
* குணமடைந்த பின்னர், அக்காவும் இவரது வீட்டிலேயே வசித்தார். ஒரு கட்டத்தில் அக்கா, அப்பா, அத்தை என உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு இவரது தோள்களில் விழுந்தது. கொஞ்சம்கூட சலிப்படையாமல் இறுதிவரை அவர்களைப் பராமரித்தார். இதனால் கடைசிவரை இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
* தனது உரைநடை மீது அபார நம்பிக்கை பிறந்ததால், அதில் கவனம் செலுத்தினார். தனது இளமைப் பருவம், பள்ளிக்கூடம், ஆசிரியை, பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என தனது அனுபவங்கள் அனைத்தையும் கட்டுரைகள், கதைகளாகப் படைத்தார். இவரது கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன.
* ‘லண்டன் மேகஸின்’ இதழுக்காக இவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘எஸ்ஸேஸ் ஆஃப் இலியா’ என்ற நூலாக வந்தது. அக்காவுடன் இவர் வாழ்ந்த வீடு, பிரபல நாடகக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக மாறியது.
* ‘இலியா ஆன் தி ஓல்டு பெஞ்சர்ஸ்’, ‘பிளாக்ஸ்மூர் இன் ஹெச்-ஷயர்’, ‘ரோஸ்மன்ட் கிரே’, ‘ட்ரீம் சில்ட்ரன்’, ‘நியூ இயர்ஸ் ஈவ்’, ‘டிராஜிடி’, ‘ஜான் வுட்வில்’, ‘ஃபார்ஸ்’ ஆகிய படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. தன் சகோதரியுடன் இணைந்தும் சில கதைகளை எழுதினார். இவரது ‘டேல்ஸ் ஃபிரம் ஷேக்ஸ்பியர்’ கதை, விற்பனையில் சாதனை படைத்தது.
* வில்லியம் வேட்ஸ்வொர்த் இவருக்கு, ‘ஈடு இணையற்ற கட்டுரை யாளர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கில இலக்கிய உலகின் மகத்தான உரைநடை எழுத்தாளர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற சார்லஸ் லாம்ப் 59-வது வயதில் (1834) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT