Published : 24 Feb 2015 05:24 PM
Last Updated : 24 Feb 2015 05:24 PM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் தருணத்தில், விடுப்பு எடுத்து சென்றிருக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து ட்விட்டர் கருத்தாளர்கள் தங்கள் விமர்சனங்களைக் குவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சிப் பணிகளில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைமையும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர் விடுப்பு எடுத்துள்ள காலக்கட்டம்தான் தற்போது பல கேள்விகளை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.
இது குறித்து சந்தேகப் பேச்சும் விமர்சனங்களையும் மற்றக் கட்சிகளைத் தாண்டி, காங்கிரஸ் முக்கியத் தலைவர்களே எழுப்புகின்றனர் என்பது கவனத்துக்குரியது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், ஒரு சில வாரங்கள் விடுப்பில் செல்ல உள்ளதாகவும், அதற்கு தான் அனுமதி வழங்கி உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா கூறி உள்ளார். "ராகுல் காந்திக்கு சில வார காலங்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் புதிய உதவேகத்துடன் கட்சிப் பணிகளுக்கு திரும்புவார்" என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
'ராகுலுக்கு ஓய்வு தேவை'
இது குறித்து அந்தக் கட்சியின் மூத்தத் தலைவரான திக் விஜய் சிங் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "ராகுல் நடந்த தவறை திருத்த நினைக்கிறார். இதில் என்ன தவறைக் கண்டீர்கள்? எதற்காக அவரை விமர்சிக்க வேண்டும். சிலவற்றை புரிந்துகொள்ள நாம் அனைவருக்கும் சில ஓய்வு காலம் தேவைதான். ஆனால் ராகுல் விடுப்பு பெற்றிருக்கும் தருணம்தான் சற்று தவறானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் முக்கியக் கூட்டமான பட்ஜெட் கூட்டத் தொடர் கூடிய முதல் நாளே, ராகுல் காந்தி விடுப்பு அறிவித்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் பிரமுகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில் வெறும் 44-ஐ மட்டும் கொண்ட காங்கிரஸ், மேலும் ஓர் உறுப்பினரை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், ராகுலின் விடுப்பு செய்தி கேலிப் பொருளாகி உள்ளது.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையில், கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும் என்று கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்களின் ஒரு பகுதியினர் கோஷமிட்டனர்.
இதற்கு காரணம், டெல்லி தேர்தல் வாக்குவேட்டைக்கு பாஜக இறங்கிய மூன்று நாட்களுக்கு பிறஜே, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வக்குறுதிகளை வெளியிட்டது. ஆம் ஆத்மியோ பல மாதங்களாக களத்தில் இறங்கி வேலை பார்த்தது.
பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் குறித்து சோனியாவிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சோனியா, ராகுல் விஷயம் குறித்து நான் வாயை திறக்கமாட்டேன். எந்தக் கருத்தையும் கூற மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டுச் சென்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், முக்கியமான பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் இருப்பது அந்தக் கட்சியின் அக்கறையற்றத் தன்மையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிட்டதாக பாஜக தனது தரப்பிலிருந்து தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மக்களவை பதிவேட்டில் சொற்ப நாட்களில் ராகுல் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
முக்கியமான நாடாளுமன்றத் தொடரை அவர் புறக்கணித்துள்ளதால், அரசியலிலிருந்து விலகலாம் என்ற கருத்துக்கள் எழுந்ததால் தொடர் தோல்வியை சந்தித்து பாதாளத்தில் கிடக்கும் காங்கிரஸ் கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்லும் தலைவராக யார் இருக்கப் போகிறார்? என்றக் கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக கருத்து மோதல்கள் நிலவும் ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் இதனால் #RahulOnLeave என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ராகுல் எங்கே?
சிவகுமார் (@Sivakumar): மக்களவையில் வெறும் 42% நாட்கள் மட்டுமே கையெழுத்திட்டு சென்றார். இப்போது அதுவும் இல்லையோ!
கார்த்திக் குமார் (@evamkarthik): பாஸ் மார்க்: 45, நான் எடுத்ததோ: 44. பிறகு எதற்காக நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்? 'ராகுல் மைண்ட்வாய்ஸ்'
வைஷாலி (@vaishalidbhatt): அவர் எப்போது வேலை செய்தார்? எப்போதுமே ராகுலுக்கு லீவ் தான். இந்த முறை அறிவித்துவிட்டார். உடனே ட்ரெண்ட் ஆக்கிடுவீங்களே.
பிஷேக் மிஸ்ரா (@MishraAbhishek): எங்கே போனார் ராகுல்? நான் சொல்கிறேன் கேளுங்கள். அவர் அனைத்து டிவி சேனல்களிலும் இருக்கிறார். சேனல்களுக்கு டி.ஆர்.பி. வழங்கிகொண்டிருக்கிறார்.
கவுரவ் சாவ்லா (@gauravchawla): உலகத்தின் எந்த மூலையில் ராகுல் இருந்தாலும், அவருக்கு தெரிவிந்துவிடும், நாம் அவரைத்தான் தேடுகிறோம் என்று. #WhereIsRahul உலக அளவில் ட்ரெண்டாக போகுதே.
சந்தீப் ஜெயின் (@sirsandeep): கவலையடைய வேண்டாம். பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் நிச்சயம் வருவார்.
தமிழில் பதிவான கலாய்ப்புக் கருத்துகள்:
கருத்து கந்தன் (@karuthujay): ராகுல்காந்தி சிலநாட்கள் ஓய்வு எடுப்பதில் தவறில்லை- ஈ.வி.கே.எஸ்இளங்கோவன் #விடுங்கண்ணே... நம்ம கட்சியே ஓய்வுலதான இருக்கு.. அவராச்சும் வேலை செய்யட்டுமே!
நையாண்டி நாரதர் (@NaiyaandiNarath): நாடாளுமன்றத்துக்கு வராமல் ராகுல் ஓய்வெடுக்க விரும்பினால் அதை ஏன் விமர்சிக்கிறீர்கள் - திக் விஜய் # எங்க தூங்குனா என்ன? வரச்சொல்லுங்கண்ணே..
இராமுருகன் (@eramurukan): Candy Crush Saga விளையாட இனி அழைப்பு வராது. எல்லோரும் ராகுல் காந்தியைக் கூப்பிடப் போயிட்டாங்களாமே!
ஷீபா (@sheeba): ராகுல் காந்தி லீவ்ல போயிட்டாராம். சரி மோடி என்ன வேலை பாக்குறார்? இந்திய கிரிக்கெட் அணியை என்கரேஜ் பண்ணி ட்வீட் போட்டு ஜெயிக்க வைக்கிறார்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT