Published : 30 Jul 2016 11:32 AM
Last Updated : 30 Jul 2016 11:32 AM
‘‘நுரையீரல் இல்லாத மனிதனை கற்பனை செய்வது எவ்வளவு கடினமோ அப்படி அமேசான் மழைக் காடுகள் இல்லாத பூமியை கற்பனை செய்ய முடியாது!’’
- வினிதா கின்ரா
இந்த உலகில் வாழ்கிற பல வகை யான தாவரங்களும், மிருகங்களும் மிகுந்து காணப்படுவது அமேசான் மழைக் காடுகளில்தான் என்பதை சிறுமியாக இருக்கும்போது பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். 2.5 மில்லியன் பூச்சி இனங்கள், 40 ஆயிரம் வகையான செடி கள், 2,200 விதவிதமான மீன்கள், 1,294 கண்கவர் பறவைகள், 427 பாலூட்டிகள், 423 நில நீர் வாழ்வினங்கள், 378 வகை ஊர்வன அமேசான் காடுகளில் வாழ்கின்றன என்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அமேசான் காடுகளில் வாழ்கிற மிகப் பெரிய அனகோண்டா பாம்புகள், ஜாக்குவார் (jaguar) என்கின்ற தென் அமெரிக்கச் சிறுத்தைகள் 400 - 500 வகையான பழங்குடி மக்கள், இவர்களில் 50 இனத்தவர்கள் வெளி உலகத்தையே பார்த்தறியாதவர்கள் போன்ற தகவல் களைப் படிக்கப் படிக்க… அமேசான் காடுகளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற என் அவா மிகுந்துகொண்டே சென்றது.
மொத்தம் 35மணி நேரப் பயணமாகச் சென்றால்தான் அமேசானை அடைய லாம் என்ற நிலை சிறிது யோசிக்க வைத்தது. சென்னையில்இருந்து லண் டனுக்குச் சென்று, அமெரிக்காவில் நுழைந்து மியாமியைத் தொட்டு, பிறகு பிரேசில் வழியாக மேனஸை(manaus)சென்று அடைந்தோம்.அமேசான் பகுதி களுக்கு தலைநகரமாகமேனஸ் திகழ் கிறது. வடக்கு பிரேசிலின் நெக்ரோ (negro) நதியின் கரையோரமாக அமைந் திருக்கும் இந்த இடத்தில்இருந்துதான் சுற்றியிருக்கும் அமேசான் மழைக் காடு களுக்குச் செல்ல முடியும்.அதுமட்டுமல் லாது மேனஸின் கிழக்குப் பகுதியில் நெக்ரோ நதி, பழுப்பு நிற சோலிமஸ் (solimoes) நதியோடு சேர்ந்து உலகின் மிகப் பெரிய நதிகளுள் ஒன்றான அமேசான் நதியை உருவாக்குகிறது.
விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், ஜன்னல் வழியாக என் கண்கள்கண்ட காட்சிகள் ஒருவிதமான பயம் கலந்த இன்ப அதிர்வுகளை என்னுள் எழும்பச் செய்தன. பார்வை பட்ட இடங்களில் எல்லாம் பச்சை கம்பளம் போர்த்தினாற் போன்று, மரங்கள் மிக அடர்த்தியாக வளர்ந்து நின்றிருந்தன. இவைகளின் நடுவே வெளிர் ஆரஞ்சு நிறத்தில் அமேசான் நதி நீண்டு, வளைந்து, நெளிந்து, படர்ந்து, அப்பப்பா எண்ணிக்கையில் அடங்கா வடிவமைப்புகளை உருவாக்கியபடி சென்றுக் கொண்டிருந்தது. 6,400 கி.மீ. நீளம் கொண்ட நதி என்றால் மலைப்பை ஏற்படுத்தாமலா இருக்கும்!?
அட, கடவுளே இந்த அத்துவான காட் டில், மருந்துக்குக் கூட ஒரு கட்டிடம் கண்களில் படவில்லையே எப்படி ஒரு வாரத்தை இங்கே கழிக்கப் போகிறோம் என்று சிறிது கலங்கினேன். ஆனால், நான் அமேசான் காட்டின் நட்ட நடுவில் தங்கியிருந்த நாட்களில் என் கண் முன்பே விரிந்த காட்சிளையும், கிடைத்த அனுபவங்களையும், உண்ட உணவுகளையும் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக இன்றளவும் என்னுள் பாதுகாத்து வருகிறேன்.
மேனசை நெருங்கியபோது பல கட்டிடங்கள் கண்ணில் புலப்பட்டன. ஆனாலும், சூழ்ந்திருந்த இயற்கையின் செழிப்பு அப்படியேதான் இருந்தது. அமே சான் காட்டில் தங்கிவிட்டு பிரேசிலுக்குத் திரும்பும் முன் மேனஸை சுற்றிப் பார்க்க முடிவு செய்திருந்தோம். மேனஸ் விமான நிலையத்தில் இருந்து நேராக நெக்ரோ நதி கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோட்டார் படகில் அமேசான் காட்டில் நாங்கள் தங்கப் போகும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அமேசான் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. பரப்பி வைக்கப்பட்ட கண்ணாடித் தகடுகள் போல தண்ணீரின் மேற்பரப்பு பளபளத்தது. படகின் முனை தண்ணீரைக் கிழித்துக்கொண்டு சென்றபோது, சிறிது விலகி மீண்டும் சேர்ந்து கண்ணாடியாக ஜொலித்த மாயத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.
அமேசான் காட்டின் நடுவே கட்டப் பட்டிருந்த விடுதியை அடைந்தோம். சாப்பாடு அறையை ஒட்டியிருந்த பகுதி யில் படகுசென்று நின்றது. படகில் இருந்து இறங்கினால் சாப்பிடும் ஹால், அதை கடந்து வரவேற்பு அறை, பிறகு வலது, இடதுபுறங்களில் தனித் தனி யாக குடில்கள். வரவேற்பு பானத்தை அருந்தினோம். பிறகு எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட குடிலுக்கு அழைத்துச் சென்றனர்.
நான் மெய் சிலிர்த்து நின்றேன். ‘அமே சான் காட்டில் நிற்கிறேன், என் கனவு நிறைவேறிவிட்டது’ என்று என்உள்ளம் கூக்குரலிட்டது. சுற்றிலும் வானுயர்ந்து நின்ற மரங்கள், பலவிதமான கொடிகள், செடிகள். அட, அவை என்ன? என் இதயம் ஒரு துடிப்பை இழந்தது. அமேசான் காட்டுக்கே உரித்தான ஸ்கார்லட் மகாஸ் (scarlet macaws)என்ற பஞ்சவர்ண கிளிகள் மரக்கிளைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று என் தலைக்கு நேராக இருந்த மரக்கிளையில் அமர்ந்து என்னை உற்றுப் பார்த்தது. ‘வாவ்’ என்று கூவினேன். என் குரலைக் கேட்டு அது சிறகுகளை விரித்துப் பறந்தது. கூண்டில் அடைபடாமல், இஷ்டத்துக்கு சாப்பிட்டு, சுதந்திரமாகப் பறந்து, உலகின் நுரையீரலாக திகழும் அமேசான் காட்டில் வாழ்வதால், மேனியின் நிறங் கள் மெருகு ஏறி பளபளத்த அந்தக் கிளிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தொலைந்து போகின்றன.
மதிய உணவு வேளையைத் தாண்டி நாங்கள் சென்றதால், டீ, பிஸ்கட்டு களோடு நாங்கள் திருப்தி அடைந்தோம். ’’சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சரியாக 4 மணிக்கு உங்களை வந்து அழைத்துப் போகிறேன்’’ என்றார் வழிகாட்டி.
‘‘எங்கே.. ?’’ என்றோம்.
‘‘அமேசான் நதியில் படகில் சென்று, மீன் பிடிக்கப் போகிறோம்’’ என்றார் .
‘‘ஹாய்’’ என்று துள்ளிக் குதித்த என் மகன் ‘‘என்ன மீனா..?” என்றான்.
‘‘ஆமாம் பிரானா (piranha) மீன்கள்! இந்த அமேசான் காட்டுக்கே உரித் தானவை. அளவில் சிறியவை ஆனால் ஒரு குதிரை தவறி அமேசான் ஆற்றில் விழுந்தாலும் போதும், 300 -500 பிரானா மீன்கள் ஒன்று சேர்ந்து அதை ஐந்து நிமி டங்களில் தின்று விடும்’’ என்றாரே பார்க்க ணும்! இன்று இரவு டின்னருக்கு அந்த மீன்கள்தான் என்று வேறு சொல்ல... வெலவெலத்துப் போனேன்.
- பயணிப்போம்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT