Published : 01 Jan 2017 12:09 PM
Last Updated : 01 Jan 2017 12:09 PM

மகாதேவ தேசாய் 10

விடுதலைப் போராட்ட வீரரும் மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குரிய செயலாளருமான மகாதேவ தேசாய் (Mahadev Desai) பிறந்த தினம் இன்று (ஜனவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* குஜராத் மாநிலம் சூரத் அடுத்த சரஸ் என்ற கிராமத்தில் (1892) பிறந்தவர். தந்தை ஆசிரியர். இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராக விளங்கினார் மகாதேவ். 7 வயதில் தாயை இழந்தார்.

* தந்தைக்கு அவ்வளவாக வசதி யில்லை என்பதால், உதவித்தொகை பெற்றுப் படித்தார். 1910-ல் பம்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அசாதாரண நினைவாற்றல், அபார புத்திக்கூர்மை கொண்டிருந்தார். இவரது கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்.

* குஜராத் இலக்கியங்களை ஆர்வத்துடன் படித்தார். ராமாயணம், மகாபாரதம், கீதை, உபநிடதங்கள் கற்றார். 1913-ல் சட்டப் படிப்பில் பட்டம் பெற்று, சிறிதுகாலம் வழக்கறிஞர் தொழில் செய்தார். பின்னர் அரசு வங்கியில் பணியாற்றினார். அங்கு நடக்கும் முறைகேடுகளைப் பார்த்து வெறுத்துப்போய் அந்த வேலையை விட்டார்.

* மகாத்மா காந்தியை 1917-ல் சந்தித்தார். அவரது கொள்கைகளால் கவரப்பட்டார். அலகாபாத் சென்றவர் அங்கு மோதிலால் நேரு நடத்திய ‘இன்டிபென்டன்ட்’ இதழ் வெளியீட்டில் அவருக்கு உதவியாக இருந்தார். 1923-ல் மீண்டும் அகமதாபாத் வந்து, ‘நவஜீவன்’ பத்திரிகையைக் கொண்டுவர காந்திஜிக்கு உதவியாக இருந்தார்.

* சம்பாரண் சத்தியாக்கிரகம், பார்தோலி சத்தியாக்கிரகம், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். 1924 முதல் 1928 வரை காந்திஜி மேற்கொண்ட பாரத் யாத்ராவில் அவருடன் சென்றார். 1931-ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டுக்கும் அவருடன் சென்றார்.

* தினமும் மைல் கணக்கில் நடப்பார். ஆனாலும், படிப்பது, எழுதுவது, அன்றாடப் பணிகள் என எதையும் மிச்சம் வைக்கமாட்டார். கட்டுரைகளும் எழுதிவந்தார். காந்திஜியும் கஸ்தூரிபா காந்தியும் இவரைத் தங்கள் மகனாகவே கருதினர்.

* காந்திஜியின் தனிச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சேவை செய்தார். கூட்டுவது, துணி துவைப்பது, சமைப்பது, உணவு பரிமாறுவது, நோயாளிகளை கவனிப்பது, கற்றுக்கொடுப்பது என சகல பணிகளையும் முழு மகிழ்ச்சியுடன் செய்துவந்தார்.

* குஜராத்தி, சமஸ்கிருதம், வங்கமொழி, இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவர் பல ஆண்டுகாலமாக அன்றாடம் எழுதிவந்த நாட்குறிப்புகள் தொகுக்கப்பட்டு, ‘மகாதேவ் பாய் கீ டைரி’ என்ற பெயரில் 8 பகுதிகளாக வெளிவந்தன. இதில் காந்திஜியின் அன்றாட செயல்பாடுகள், வாழ்க்கைமுறை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்த நூல்கள் இவரது மறைவுக்குப் பின்னரே வெளியிடப்பட்டன.

* 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டதால், வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியடிகளின் நிழலாக, நம்பிக்கைக்குப் பாத்திரமான உற்ற துணையாக, செயலாளராக, அவரது வாழ்க்கைமுறை குறித்த அதிகாரப்பூர்வ எழுத்தாளராக 25 ஆண்டுகாலம் இருந்தார்.

* சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் எனப் போற்றப்பட்ட மகாதேவ தேசாய் சிறையிலேயே மாரடைப்பால் 50-வது வயதில் (1942) மறைந்தார். ‘இவர் ஒருவர் செய்யும் பணிகளை அரை டஜன் செயலாளர்களால்கூட செய்ய முடியாது. 100 வயது வாழ்ந்தவர் செய்யும் பணியை இவர் செய்திருக்கிறார், என்று காந்திஜி இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x