Published : 09 Aug 2016 04:48 PM
Last Updated : 09 Aug 2016 04:48 PM
பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன. விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.
பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனை அழைக்கிறார். அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று திரும்ப உறங்குகிறான்.
சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல் துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும் தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான். இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே.. அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை. அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா? விடை காண படம் பாருங்கள்.
காணொளி இணைப்பு
கொடியை ஏற்றினால் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவற்றைத் தேடி அலைகிறான் அந்தச் சிறுவன். கொடியின் மூன்று வண்ணத் துணிகளையும் மூன்று மதங்களில் இருந்து மூன்று மனிதர்களைக் கொண்டு பெற வைத்தது நல்ல சிந்தனை.
அடிவாங்கும் சிறுவர்களை அருகில் வைத்துக்கொண்டே நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில்தான் இன்று பெரும்பாலானோர் இருக்கிறோம். அடிப்பதைத் தடுக்க முயற்சிக்கும் இளைஞனைத் தடுக்கும் இளம்பெண்ணும், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தரும் கையாலேயே அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் முரடனும் இன்றைய சம கால பாத்திரங்களாக நம்முடன் உலவுபவர்கள்.
மரங்களிடையே புலரும் சூரியன், சேவல் தனது இறக்கைகளை விரித்து நெட்டி முறிப்பது, ஊர்ந்தோடும் எறும்பு உள்ளிட்ட பல காட்சிகள் மனோ ராஜின் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கின்றன. வறுமையின் பிடியில் இருந்து மீளத் துடிக்கும் சிறுவனுக்கு இந்த சமுதாயம் தரும் பரிசை, 'அடிமை சுதந்திரம்' என்னும் குறும்படத்தின் வழியாக புடம்போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT