Published : 12 Nov 2013 10:42 PM
Last Updated : 12 Nov 2013 10:42 PM
இணையம் மூலம் சிறியதாகவும் ,பெரியதாகவும் எத்தனையோ அற்புதங்கள் சாத்தியமாகி வருகின்றன. முன் பின் அறிந்திறாதவர்களுக்கு உதவுவதற்காக அறிமுகம் இல்லாத நபர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் அணி திரண்டு நேசக்கரம் நீட்டிய நெகிழ்ச்சியான கதைகளும் இணையத்தில் உண்டு.
இந்த வரிசையில், இப்போது இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்வந்துள்ளனர். அறிமுகமில்லாதவர்களின் நல்லெண்ணத்தால் அந்த சிறுவனின் கனவு வரும் 15 ம் தேதி நிறைவேற உள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிப்போர்னியாவில் வசிக்கும் மைல்ஸ் எனும் அந்த சிறுவன் இரத்த புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறான். ஊக்கமும் உறுதியுடனும் நோயுடன் போராடும் அந்த சிறுவனுக்கு சாகச பாத்திரமான பேட்மேனை மிகவும் பிடிக்கும். தானும் பேட்மேன் போல் ஆக வேண்டும் என்பது அந்த சிறுவனின் விருப்பம். அதாவது பேட்கிட் ஆக வேண்டும் என்று சிறுவன் விரும்பியிருக்கிறான்.
இப்படி ஒரு ஆசை சிறுவன் மனதில் இருப்பது பெற்றோருக்கு கூட தெரியாது. கொடிய நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மேக் எ விஷ் அமைப்பு தொடர்பு கொண்ட போது தான் சிறுவன் மனதில் இந்த விருப்பம் இருப்பது தெரிய வந்தது.
நினைத்தது நடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நோயோடு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் விருப்பம் நிறைவேறும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது. விருப்பம் நிறைவேறிய திருப்தி நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான மன உறுதியை மேலும் வலுவாக்கும்.
இந்த நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மேக் எ விஷ் அமைப்பு சிறுவன் மைல்சின் விருப்பத்தையும் நிறைவேற்றித்தர தீர்மானித்தது. இதற்கான வேண்டுகோள் இந்த அமைப்பின் இணையதளத்தில் இடம்பெற வைக்கப்பட்டது. இந்த தளத்தில் இது போன்ற கோரிக்கைகள் விடுக்கப்படும் போது , பொது மக்களில் பலர் உதவ முன்வருவார்கள். இப்படி பல குழந்தைகளின் விருப்பங்கள் அறிமுகம் இல்லாதவர்களின் உதவியால் நிறைவேறியுள்ளது.
ஆனால் மைல்சின் விருப்பம் கொஞ்சம் வித்தியாசமாகவும் சிக்கலானதாகவும் இருக்கிறதே! பேட்கிட் ஆக வேண்டும் எனும் விருப்பம் நிஜமாக பொருளுதவி மட்டும் போதாதே. கதைகளிலும் திரைப்படங்களிலும் சாகசம் செய்து குழ்ந்தைகளை கவர்ந்த பேட்மேன் போல நிஜ வாழ்விலும் சாகசம் செய்ய வேண்டும் என்றால் எப்படி? ஆனால் மேக் எ விஷ் அமைப்பு இதற்கும் அழகாக திட்டமிட்டது.
சிறுவன் மைல்சை பேட்கிட்டாக மாற்றிக்காட்டும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதை போல அது அமைந்திருந்தது. சான்பிரான்சிஸ்கோ நகரின் காவல் துறை அதிகாரி பேட்கிட எங்கே இருக்கிறார் எனத்தெரியுமா என கேட்டு வருவார். நகரில் அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த அவர் பேட்கிட் உதவியை நாடுகிறார்.பின்னர் பேட்கிட் கண்டுபிடிகப்பட்டு பேட்மேனுடன் சேர்ந்து நகரில் பல சாகசங்களை செய்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறார்.
சிறுவன் மைல்ஸ் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக இப்படி அழகாக திட்டமிடப்பட்டது. இனி , இந்த நிகழ்வுகளை நிஜமானதாக்க வழியெங்கும் திரண்டு கைத்தட்டி ஆராவாரம் செய்வதற்காக தன்னார்வலர்கள் தேவை. எல்லோரும் சேர்ந்து உற்சாகம் செய்தால் தான் அந்த பிஞ்சு உள்ளம் மகிழும்.
இதற்கான கோரிக்கை வெளியானதும் பல நல்ல உள்ளங்கள் இதில் பங்கேற்க முன்வந்தனர். சில நூறு பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக 7,000 பேருக்கு மேல் சிறுவனின் சாகசத்தை கண்டு கைத்தட்ட முன்வந்துள்ளனர்.
இந்த அபிரிமிதமான ஆதரவு மேக் எ விஷ் அமைப்பே கூட எதிர்பாராதது. ஆக அறிமுகம் இல்லாதவர்களின் கருணையால் சிறுவனின் பேட்மேன் கனவு வரும் 15 ம் தேதி நிஜமாக உள்ளது.
அது மட்டும் அல்ல சிறுவன் மைல்சுக்கும் ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் தனிப்பக்கமும் துவங்கப்பட்டுள்ளது. பேட்கிட் போட்டோஸ் எனும் அந்த பக்கத்தில் பொதுமக்கள் பலரும் பேட்கிட்டை நாங்கள் நேசிக்கிறோம் எனும் புகைப்படத்தோடு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் மூலம் வெளியாகும் ஆன்பும் ஆதரவும் மேலும் பலரை இதில் பங்கேற்க வைத்துள்ளது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையாகவும் இருக்கிறது.
சிறுவனின் விருப்பத்திற்கான இணைய கோரிக்கை http://mashable.com/2013/11/11/batkid-make-a-wish/
பேஸ்புக் ஆதரவு பக்கம் https://www.facebook.com/BatkidPhotos?hc_location=stream
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment