Published : 18 May 2017 10:24 AM
Last Updated : 18 May 2017 10:24 AM
(கொட்டை எழுத்து தலைப்பு செய்திகள் மட்டும் நிஜம். உள் செய்தி எல்லாம் மிஸ்டர் உல்டாவின் மீம் சர்வீஸ்)
லாலு பிரசாத் மீதான வழக்குகளைத் தனித்தனியாக விசாரிக்க உத்தரவு - 9 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
இதைப் பற்றி கேட்க லாலு பிரசாத் வீட்டுக்கு போனபோது அவருக்கு மேக்கப் போடும் வேலை நடந்துகொண்டிருந்தது.
“என்ன இப்படி பண்ணிடுச்சு உச்சநீதிமன்றம்?” என்று உல்டா சோகத்துடன் கேட்டபோது “அவங்க நல்லதுதான் பண்ணி இருக்காங்க. எந்த பேப்பரும், டி.வி-யும் என்னை கண்டுக்கவே இல்லை. அரசியல்ல நான் ஒருத்தன் இருக் கேன்னு கொஞ்ச நாளா வெளியில தெரியாமலே இருந்திச்சு. நீதிமன்றம் சொன்ன தும் இப்போ எல்லா பேப்பர்லேயும், டி.வி-யிலேயும் நான்தான் தலைப்புச் செய்தி. நீ கூட என்னைப் பார்க்க ஓடிவந்திருக்கியே உல்டா!” என்றார் லாலு.
“சார் இது என்ன மேக்கப்?” என்று கேட்டபோது “இனிமே என்னை அடிக்கடி பேப்பர்காரர்களும் டி.விக்காரர்களும் கேமரா கொண்டுட்டு வந்து படம் எடுப்பாங்க. அதிலேல்லாம் நான் அழகாத் தெரிய வேணாமா? அதுக்குத்தான் இந்த மேக்கப்!’’ என்றவரிடம் வழக்கில் உங்களுக்கு தண்டனை தந்துட்டா?” என்று கேட்டபோது, ’’ மிஸ்டர் உல்டா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. என்கிட்டே தீவனம் வாங்கி சாப்பிட்ட 67 மாடுதான்… என் தரப்பு சாட்சி. அதுக்கிட்டே என் வக்கீல், அரசு வக்கீல், நீதிபதி எல்லாம் விசாரணை செய்யணும் இல்லே...!’’ என்றவர், ‘‘கோமாதா கோமாதா என் குலமாதா…’’ என்று கன்னத்தில் தப்பு போட்டுக்கொண்டார் லாலு!.
-------
“ஸ்டாலினை முதல்வராக்க ஓ.பி.எஸ். விரும்புகிறார்’’ - அமைச்சர் குற்றச்சாட்டு.
இது பற்றி முன்னாள் அமைச்சர் துரைமுருகனிடம் மிஸ்டர் உல்டா விசாரித்தபோது “உண்மைதான். எங்க கட்சி எவ் வளவோ முயற்சிசெய்தும் துணை முதல்வர், செயல் தலைவர் என்கிற அளவுதான் வர முடியுது. ‘முதல்வர் ஸ்டாலின்’ என்பது தளபதி குடும்பத்தின் லட்சியம்னே சொல்லலாம். இப்போ அந்த லட்சியம் நிறைவேற பன்னீர் சார் முழுமனசோட பாடுபடுறார்” என்ற துரைமுருகனிடம் “ஸ்டாலினிடம் பன்னீருக்கு இப்படி பாசம் வந்தது ஏன்?” என்று உல்டா கேட்டார்.
“சட்டப்பேரவையில் ஸ்டாலினை பன்னீர் பார்க்கும்போதெல் லாம் எழுந்து நின்று வணக்கம் சொன்னாரே… அதுக்குத்தான் இந்த நன்றிக் கடன்! ‘என் கட்சிக்காரர்களே என்னை முதல்வரா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எதிர்க் கட்சி தலைவரான நீங்கள் என்னை முதல்வரா மதிச்சு… வணக்கமெல்லாம் சொன்னீங்க. உங்களுக்கு நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா’ன்னு ஸ்டாலினிடம் பன்னீர் சொல்லியிருக்கார்’’ என்று சொன்ன துரைமுருகனே தொடர்ந்தார்.
“அதுமட்டுமில்லே... அப்போ பக்கத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலின் ‘‘அப்பாவை முதல்வராக்கி பார்க்க எங்களுக்கு ரொம்ப ஆசை! அப்பதான் நான் துணை முதல்வர் பதவிக்கு வர முடியும்”னு பன்னீரிடம் சொல்லியிருக்கார். அதுக்கு பன்னீர் ‘அவ்வளவுதானே! அதை நான் செஞ்சிடறேன்’ என்று உறுதிமொழி தந்திருக்கார். அதான் இப்போ அதற்கான பூர்வாங்க வேலையில் ஈடுப்பட்டுள்ளார். தளபதி முதல்வர், சின்ன தளபதி துணை முதல்வர், நான் பொதுப்பணித் துறை அமைச்சர்… எப்பூடி?!” என்ற துரைமுருகன் “சேகர் ரெட்டி செல்போன் நம்பர் இருக்கா?” என்று கேட்க…. வம்பே வேணாம்டா சாமி என்று மிஸ்டர் உல்டா எஸ்கேப்!
“சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்’’ - ராமதாஸ் மற்றும் முத்தரசன் வலியுறுத்தல்.
இதைப் பற்றி மிஸ்டர் உல்டாவிடம் முக்கிய தலைவர் சொன்னது சொன்னபடி:
“இவங்களுக்கு வயித்தெரிச்சல் சார்... இவங்களை நம்பி யாரும் பணம் தர மாட்டாங்க. இவங்களால் ஒண்ணும் பிரயோசனமே இல்ல; ஆதாயமும் இல்ல. அதனாலே இவங்க பேர் பட்டியலில் இல்ல. அதனால் சவுண்டுவிடறாய்ங்க…” என்றார்.
அவரிடம் உல்டா, “சரி! அந்த பட்டியலில் உங்க பெயர் இருந்து, அவங்க கோரிக்கையை ஏற்று பட்டியல் வெளியானால்… அதை நீங்க எப்படி சமாளிப்பீங்க” என்று கேட்டார். முக்கிய தலைவர், “அது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லே. ரெட்டி வீட்டுல எலி தொல்லை அதிகம். அதனாலே பணத்தை என்கிட்டே கொடுத்து, பத்திரமாக வெச்சிக்கச் சொன்னாரு. என் சர்வீஸ் சார்ஜ் போக மீதி பணம் இந்தாங்கன்னு சொல்லி உடனே வருமானவரித் துறை அதிகாரிகிட்டே தந்துடுவேன்” என்றார் அசால்ட்டாக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT