Published : 29 Jun 2016 02:39 PM
Last Updated : 29 Jun 2016 02:39 PM
அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இரண்டாவது நடை மேடையில் சுவாதியுடன் ஒருவேளை நாமும் நின்றிருந்தால் என்ன செய்திருக்கலாம்? என்ன செய்திருக்க முடியும்? இதைத் தான் இந்த வீடியோ அலசுகிறது. | வீடியோ இணைப்பு கீழே |
சுவாதி கொலை சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டன. கொலையாளியை போலீஸ் நெருங்கிக்கொண்டே இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் சுவாதியை சுற்றி பின்னப்பட்ட விவாதங்களும் விமர்சனங்களும் யோசனைகளும் சர்ச்சைகளும் என பட்டியலை நீட்டிக்கொண்டே சொல்லும் அளவுக்கு கருத்துகள் குவிந்து வருகின்றன.
அவற்றில் ஒரு முக்கியமான விவாதப் பொருளாக இருப்பது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையான போது நின்றிருந்த 30-க்கும் மேற்பட்டோர் மீதானது. அந்த 30-க்கும் மேற்பட்டோர் கொலையாளிக்கு சமமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி சுவாதி கொலை பற்றிய பல்வேறு வாதவிவாதங்களுக்கு இடையே யூடியூபில் வெளியாகியிருக்கிறது ஒரு வீடியோ.
அன்றைய தினம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி அருகில் ஒருவேளை நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருக்கலாம். சட்டப்படி என்ன செய்திருக்கலாம், சக மனிதனுக்கு கண்ணெதிரில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்க உணர்வுபூர்வமாக எப்படி செயல்பட்டிருக்கலாம், கண நேரத்தில் நிகழ்ந்துவிடும் கொடூரத்தின்போது சமயோஜித புத்தியோடு எப்படி செயல்பட்டிருக்க முடியும் என்றெல்லாம் விவரித்துள்ளார் ஓர் இளைஞர்.
ஒரு காகம் இறந்து கிடந்தால்கூட தனியாக விட்டுவிடாமல் காக்கைகள் கூடுகின்றன. ஆனால் என் மகள் கொலை செய்யப்படும்போது அங்கிருந்த பயணிகள் வாய்மூடி அமைதியாக இருந்துவிட்டனர். உங்களது தாய் அல்லது சகோதரிக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? மக்களின் மனநிலை மாற வேண்டும் என சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சமூகத்தின் முன் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியத்தை இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன், நம் இளைய தலைமுறையினருக்கு ஏட்டுக் கல்வியைத் தாண்டியும் தேவைப்படும் கல்வி பற்றி பேசியிருக்கிறார்.
சமூகத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து கொண்டு கொலையாளியை காவல்துறை இன்னும் பிடிக்காத சூழலில் சர்ச்சைக் கருத்தை தெரிவித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனை உள்ளடக்கிய அதே சமூகத்திலிருந்து இளைஞர் ஒருவர் யதார்த்தத்தை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் வீடியோ உங்கள் பார்வைக்காக..
இந்த வீடியோவை பார்த்த பிறகாவாது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அன்றைய தினம் நின்றிருந்த பயணிகள் யாரேனும் அவர்கள் வசம் ஏதாவது சாட்சியம் இருந்தால் அதை போலீஸில் ஒப்படைக்கட்டும்.
இனியாவது பொது இடங்களில் சுவாதியோ, சங்கரோ படுகொலை செய்யப்படாமல் தடுக்க தன்னால் என்ன முடியுமோ அதை செய்யட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT