Published : 27 Mar 2017 09:58 AM
Last Updated : 27 Mar 2017 09:58 AM
நோபல் பெற்ற ஜெர்மனி வேதியியலாளர்
வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியலாளர் ஓட்டோ வாலெக் (Otto Wallach) பிறந்த தினம் இன்று (மார்ச் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரஷ்யாவின் (இன்றைய ரஷ்யா வின் ஒரு பகுதி) கோனிஸ்பர்க் நகரில் யூதக் குடும்பத்தில் (1847) பிறந்தார். தந்தை, அரசு ஊழியர். போட்ஸ்டான் என்ற இடத்தில் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார்.
* அப்போது பள்ளிகளில் இலக்கியம், கலை வரலாறுதான் பொதுவாக கற்றுத்தரப்படும். இவை இரண்டி லும் வாலெக் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வீட்டில் தனிப்பட்ட முறையில் வேதியியல் பயின்றார். சுய ஆர்வத்தோடு வீட்டில் சில வேதியியல் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.
* கோட்டிங்கன், பெர்லின் பல்கலைக்கழகங்களில் வேதியியல் பயின்றார். பின்னர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ‘டொலுயீன் ஐசோமெர்’ பற்றி ஆராய்ந்து 22-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.
* அரசு அழைப்பின்பேரில் ஃபிராங்கோ - பிரஷ்யன் போரில் கலந்து கொண்டார். போர் முடிந்த பிறகு, பெர்லினில் தங்க முடிவு செய்து, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றத் தொடங்கினார். உடல்நிலை ஒத்துழைக்காததால், பான் நகருக்குச் சென்றார்.
* முதலில் பான் பல்கலைக்கழகத்தின் கரிமப் பரிசோதனைக் கூடத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். பிறகு அங்கு விரிவுரையாளர், பேராசிரியராகவும் பணியாற்றினார். இங்கு சுமார் 19 ஆண்டுகள் பணியாற்றினார். முதலில் மருந்தியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அத்துறையில் தன்னை மெருகேற்றிக்கொள்வதற்காக, பல நூல்களைப் பயின்றார், பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
* அமில அமைடுகளில் பாஸ்பரஸ் பென்டாகுளோரைடின் செயல்பாடு கள் மூலம் இமினோகுளோரைட்களை கண்டறிந்தார். கல்லூரியில் இவரது வழிகாட்டியாக இருந்த அறிவியலாளர் கூறியதன்பேரில், எண்ணெய்களில் உள்ள டர்பீன்ஸ் குறித்து ஆய்வு செய்தார். இவற்றின் மூலக்கூறு கட்டமைப்பு குறித்து ஆராய்ந்தார். உருகுநிலை ஒப்பீடு, கலவைகளின் அளவீடு உள்ளிட்ட பல முறைகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டார்.
* டர்பீன்களின் எதிர்வினைகளை ஆராய்ந்தார். தன் ஆய்வுகள் குறித்து 600 பக்கங்கள் கொண்ட ‘டர்பீன் அண்ட் கேம்பர்’ என்ற நூலை எழுதினார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். ரசாயனக் கோட்பாட்டு ஆராய்ச்சிகளிலும் முக்கியப் பங்காற்றினார்.
* கோட்டிங்கன் வேதியியல் நிறுவன இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். வாலெக் விதி, வாலெக் சிதைவு, லுகார்ட்-வாலெக் வினை, வாலெக் மறுசீரமைப்பு ஆகியவை இவரது பெயரால் குறிக்கப்படுகின்றன. கொழுப்புவட்ட கலவை எனப்படும் அலிசைக்ளிக் கூட்டுப்பொருள் ஆராய்ச்சிகளுக்காகவும் கரிமவேதியியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1910-ல் இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* அலிசைக்ளிக் துறையின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார். வேதியியல் தொழில் வளர்ச்சிக்கும் காரணமாகத் திகழ்ந்தார். டர்பன்டைன் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி வாசனைப் பொருட்கள், உணவு தயாரிக்கும் ரசாயன தொழில் துறை இதன் மூலம் பலனடைந்தது.
* ஜெர்மன் வேதியியல் கழகத்தில் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார், மான்செஸ்டர், லீப்சிக் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். ஜெர்மனியின் குறிப்பிடத்தக்க வேதியியல் அறிஞர்களில் ஒருவரான ஓட்டோ வாலெக் 84-வது வயதில் (1931) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT