Last Updated : 28 Jul, 2016 09:44 AM

 

Published : 28 Jul 2016 09:44 AM
Last Updated : 28 Jul 2016 09:44 AM

தேநீர் கவிதை: ஓவியங்கள்!

பிசிறின்றி

நேர்த்தியாய்

வரையப்பட்ட ஓவியங்கள்,

அழகான சட்டமிடப்பட்டு

கண்காட்சிக்கென

எடுத்து வைக்கப்பட,

ஓவியக் கூடத்தில்

வரையும்போது

கீழே சிந்தப்பட்ட

வண்ணப் பிசிறுகள்

பார்வையை ஈர்க்கின்றன...

சட்டமிடப்பட்ட

ஓவியங்களை விடவும்

கூடுதல் அழகோடு.

*****

வரைந்து

முடித்த

ஓவியத்தில்

ஏதோவொன்று குறைவதான

நிறைவின்மையில்

ஆழ்ந்திருந்தான்

ஓவியன்.

உள்ளே ஓடி வந்த

குட்டி மகளின்

கால் பட்டு,

தெறித்து விழுந்த

வண்ணக்கிண்ணத்திலிருந்து

சிதறிய ஒரு துளி

வரையப்பட்டிருந்த

ஓவியத்தினூடே

பட்டுத் தெறித்தது.

அந்த முற்றுப்பெறா ஓவியத்திற்கான

முற்றுப்புள்ளியாய்.

*****

தொலைதூர

வானில் பறந்து கொண்டிருந்த

அந்த ஒற்றைப் புறாவை

வரையத் தொடங்கினான்

தூரிகைக்காரன்.

அவன் வரையத் தொடங்கிய

கணத்திலிருந்து

பறத்தலை மறந்த புறா

அதே இடத்திலேயே

நின்றபடி சிறகடிக்க,

பறப்பதற்கான விநாடிகளை

எதிர்பார்த்தபடியே

ஈரமாய் ஒட்டிக் கிடக்கிறது...

திரைச்சீலையில்

வரையப்பட்ட மற்றொரு புறா.

*****

ஓவியமென்பது

எதுவெனக் கேட்டால்,

‘பேசா கவிதை’ என்கிறான்

கவிஞன்.

கவிதையென்பது

யாதெனக் கேட்டால்,

‘பேசும் ஓவியம்’ என்கிறான்

ஓவியன்.

விமர்சனமென்பது

எதுவெனக் கேட்டேன்

ஆய்வாளன் ஒருவனிடம்.

‘பேசா கவிதையை

பேச வைப்பதும்,

பேசும் ஓவியத்தை

ஊமையாக்குவதும்...’ என்றான்.

பிறகு -

கவிஞன், ஓவியன், நான்...

மூவரும் பேசவே இல்லை

அவனிடம்.

*****

சுவரில்

காகிதத்தில்

பலகையில்

தரையில்

சாலையில்...

எங்கு வரைந்தபோதிலும்

வரையப்பட்ட ஓவியம்

எப்போதும் வேண்டி நிற்பது

ரசிகனின் பார்வை

தரிசனத்தையே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x