Published : 04 Jun 2016 11:23 AM
Last Updated : 04 Jun 2016 11:23 AM

ஏஞ்சலினா ஜோலி 10

ஹாலிவுட் நடிகை, சமூக ஆர்வலர்

அகதிகள் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்துவரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பிறந்தநாள் இன்று (ஜூன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1975) பிறந்தார். தந்தை ஜான் வாய்ட், தாய் மெர்க்கலின் பெர்ட்ராண்ட் இருவரும் பிரபல நடிகர்கள். ஏஞ்சலினாவுக்கு 2 வயதானபோது, பெற்றோர் பிரிந்தனர். தாய் தன் 2 குழந்தை களுடன் நியூயார்க் சென்றார்.

# சிறு வயதிலேயே நடிக்கும் ஆசை துளிர்விட்டது. 7 வயதில் ‘லுக்கிங் டு கெட் அவுட்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடும்பம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது. நடிப்பு பள்ளியில் சேர்ந்தார். பல்வேறு நாடகங்களில் நடித்தார். மாடலிங் செய்தார்.

# குறும்படங்கள், இசை ஆல்பங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே தவிர, சினிமா வாய்ப்பு வரவில்லை. டீன்ஏஜ் தடுமாற்றம், தவறான சேர்க்கை, போதைப் பழக்கம் என்று திசைமாறித் திரிந்தார். தூக்கமின்மை, மனநிலைப் பிறழ்வும் சேர்ந்துகொண்டதில் வாழ்க்கை வெறுத்தது.

# ஒருவழியாக 1993-ல் ‘சைபார்க்-2’ என்ற பட வாய்ப்பு கிடைத்தது. 1995-ல் ‘ஹாக்கர்ஸ்’ படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. இப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. 3 குறும்படங்களில் நடித்து ‘நல்ல நடிகை’ என்ற அந்தஸ்தை பெற்றார்.

# 2000-ல் இவர் நடித்த ‘கான் இன் 60 செகண்ட்ஸ்’ திரைப்படம் சூப்பர் ஹிட். அடுத்து ‘டாம்ப் ரைடர்’ படத்தில் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கிக் பாக்ஸிங், யோகா, பாலே நடனம் என ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டார். இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றிபெற்று இவரை திரையுலகின் அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியது. ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்தார்.

# ஒருமுறை, ஐ.நா. சபை குறித்த புத்தகத்தில் அகதி முகாம்களின் அவலநிலையைப் படித்தார். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வேதனை அடைந்தார். படப்பிடிப்புக்காக கம்போடியா சென்றிருந்தபோது, ஒரு அகதிகள் முகாமில் கண்ட அவலங்கள் இவரது இதயத்தை நொறுக்கின.

# பல நாடுகளுக்கும் சென்று அகதி முகாம்களைப் பார்வையிட்டார். அகதிகளின் நல்வாழ்வு, முன்னேற்றத்துக்காக பாடுபடுவது என தீர்மானித்தார். முதல்கட்டமாக ஒரு மில்லியன் டாலர் வழங்கினார்.

# அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் இவரை 2001-ல் நல்லெண்ணத் தூதராக நியமித்தது. முகாம்களுக்கு நிதி உதவி செய்வது, நிதி திரட்டுவது, அடிப்படை வசதிகள் செய்துதருவது போன்ற முனைப்புகளை மேற்கொண்டார்.

# திரையுலக வாழ்விலும் முன்னேற்றம் கண்டார். 2007-ல் தொடங்கி ஆவணப் படங்கள் உட்பட பல படங்களை இயக்கினார். 3 கோல் டன் குளோப் விருது, துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, ‘உலகின் சிறந்த குடிமகள்’ விருது, ‘உலகின் தலைசிறந்த மனிதாபிமானி’ பட்டம் என்பது உட்பட பல பட்டங்கள், விருதுகள் பெற்றுள்ளார்.

# தான் பெற்றெடுத்த 3 குழந்தைகளுடன், தத்தெடுத்த 3 குழந்தை களையும் ஒரே வீட்டில் வளர்த்து வருகிறார். இன்று 41 வயதில் அடியெடுத்து வைக்கும் ஏஞ்சலினா ஜோலி, தற்போதும் ஒரு முன்னணி நடிகையாக பிரகாசிப்பதோடு சமூக சேவைகளையும் தொடர்ந்து வருகிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x