Last Updated : 24 Aug, 2016 03:34 PM

 

Published : 24 Aug 2016 03:34 PM
Last Updated : 24 Aug 2016 03:34 PM

சென்னையின் தூய்மைக்கு தூங்காது சேவைபுரியும் துவக்கம்!

"இந்தச் சமுதாயத்தில் ஏன் இத்தனை குறைகள் என கேட்டவர்கள், கேட்பவர்களே அதிகம். ஆனால் நாங்கள் இந்த சமுதாயத்தை நாம் ஏன் சீர்படுத்த முயற்சிக்கக்கூடாது என சுய கேள்வி கேட்டுக்கொண்டோம். இந்த கேள்வியால் உருவானதே துவக்கம்" என்கிறார் கிருஷ்ணகுமார்.

பொறியியல் பட்டதாரியான இவரையும் அபிராமி அருணாச்சலம், ராகவ், ஹரிகிரண், பனிந்திரா, குணசேகரன், கார்த்தி சிவா என்ற இளைஞர்களை கல்லூரியைத் தாண்டியும் இணைத்தது அவர்களது சமூக ஆர்வம்.

அந்தச் சமூக ஆர்வத்தால் உருவானது 'துவக்கம்' தன்னார்வ தொண்டு நிறுவனம். 2014 ஆகஸ்டில் இந்த அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டது.

துவக்கம் தொடர்பான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட கிருஷ்ணகுமார் கல்வி மேம்பாடு, சுற்றுச்சூழல் தூய்மை இவ்விரண்டு துறை சார்ந்த சேவைகளை சிறப்பாக செய்வதே தங்களது திட்டம் என்கிறார்.

அவருடனான நேர்காணலில் இருந்து..

சமூக சேவை என்ற பாதையை தீர்மானித்தபோது எங்களுக்கு சட்டென தோன்றிய பெயர்தான் துவக்கம். அந்தப் பெயரோடு எங்கள் செயல்பாட்டை துவங்கினோம். ஆரம்பத்தில் மரம் நடுதல், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு இவையே எங்கள் பணிகளாக இருந்தன. அப்போதுதான் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டம் எங்களுக்குள் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதன் நீட்சியாக 'க்ளீன்அப் ஆஃப்டர் டார்க் (Cleanup After Dark)' என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினோம். தூய்மையான சுற்றுச்சூழல் எங்கள் இலக்காக இருந்தாலும் நாங்கள் களம் காணும் போதெல்லாம் பலராலும் பலவிதமாக பரிகாசம் செய்யப்பட்டோம்.

க்ளீன்அப் ஆப்டர் டார்க் பணியின்போது..

ஏளனங்கள் எங்களை எந்த வகையிலும் தடுக்கவில்லை. எங்களை மாற்றி யோசிக்க வைத்தது. எங்களது இலக்கு தூய்மையை உறுதிப்படுத்துவதோடு மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்கூட.

டார்க் ஆப்டர் நைட் என்ற ஒரு கான்சப்டை உருவாக்கினோம். இதற்காக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கினோம். இரவு 11 மணிக்கு மேல் எங்கள் தூய்மைப் பணிகளைத் தொடங்கினோம். ஒரு பகுதியை தேர்வு செய்வோம். அப்பகுதியை இரவில் சுத்தம் செய்வோம். காலையில் அப்பகுதி வாசிகள் விழித்துப் பார்க்கும்போது அந்தப் பகுதி பளீர் என இருப்பதை உறுதி செய்வோம். பின்னர் அவர்களிடமே அந்தப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைப்போம். இது எங்கள் பகுதி. இதை நாங்கள் சுத்தமாக வைத்துக் கொள்வோம் எனக் கையொப்பம் வாங்கிக் கொள்வோம். இவ்வாறாக செய்வதன் மூலம் ஒவ்வொரு தனிநபருக்கும் சமூக பொறுப்பு உருவாகிறது.

ஆரம்பத்தில் நாங்கள் மேற்கொண்ட சேவைக்கு கிடைக்காத அங்கீகாரம் பொது மக்கள் பங்களிப்புடன் செய்யும் இந்த சேவைக்கு கிடைக்கிறது.

அண்மையில் திருவல்லிக்கேணியில் இதுபோன்றதொரு தூய்மைப் பணியை மேற்கொண்டோம். அவ்வாறாக செய்த ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பின்னர் அப்பகுதிவாசிகள் சிலரே எங்களுக்கு போன் செய்தனர். மறுபடியும் இப்பகுதி குப்பையாகிவிட்டது இந்த முறை நாங்களும் உங்களுக்கு உதவுகிறோம். இணைந்து சுத்தப்படுத்துவோம் என்றனர். இதுதான் எங்கள் சேவையின் இலக்கு.

இப்படி ஒவ்வொரு தனிநபருக்கும் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உருவாகும்போது தூய்மை வெகு தூரத்தில் இல்லை.

இதுபோல்தான் எல்லா விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மக்கள் மனதில் நிலைநிறுத்த புதுப்புது யுக்திகள் தேவைப்படுகின்றன. போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரச்சாரத் தாள்களை நாங்கள் நகரின் பல சிக்னல்களில் மக்களிடம் கொடுத்திருக்கிறோம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சிக்னல் க்ளியர் ஆவதற்குள் அதை தூக்கி எறிபவர்களே அதிகம். அப்போதுதான் மைம் உத்தி எங்களுக்கு தோன்றியது. கடந்த 4 மாதங்களாக மைம் மூலம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இப்போது மக்கள் சிறிது நேரம் கவனத்தைச் செலுத்தி நாங்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்கிறார்கள்.

கற்க கசடற என்ற பெயரில் சென்னை மாநகராட்சி அனுமதியுடன் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி பயிற்றுவிக்கிறோம். இப்படியாக எங்கள் சேவை தொடர்கிறது. சென்னையில் துவக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 200.

துவக்கம் ஆரம்பித்தபோது உடனிருந்த ஹரிகிரண் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் தனது நண்பர்களுடன் இணைந்து ’துவக்கம் ஹைதராபாத்தை’ இயக்கி வருகிறார். இதுபோல் மற்றுமொரு நண்பர் பனிந்திரா பெங்களூருவில் ’துவக்கம் பெங்களூரு’ என்ற பெயரில் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.

இது ஒரு சங்கிலித் தொடர்போல் நீண்டு கொண்டே செல்லும் என எதிர்பார்க்கிறோம். புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதற்காக சமூக சேவை செய்பவர்கள் அல்ல இளைஞர்கள் என்பதை நிரூபிக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு கிருஷ்ணகுமார் பேசினார்.

நீங்கள் காண விரும்பும் மாற்றத்தை உங்களிடம் இருந்து தொடங்குங்கள் என்பது மகாத்மா காந்தியின் பொன் மொழி. அப்படித்தான் இந்த இளைஞர்களும் தாங்கள் காண விரும்பும் மாற்றத்தை தாங்களே துவக்கியிருக்கின்றனர்.

துவக்கம் குறித்த மேலும் தகவல்களுக்கு, தொடர்புக்கு: >http://thuvakkam.org/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x