Published : 23 Aug 2016 02:47 PM
Last Updated : 23 Aug 2016 02:47 PM
எந்த ஒரு தீர்க்கதரிசன செயல்பாட்டின் உலகளாவிய ஒரு பண்பு கிஹோத்தேயியம் அல்லது ஆங்கில வழிப்படி குயிக்சாட்டிசம் (Quixotism) என்று கருதப்படும். அப்படிப்பட்ட உலகளாவிய இலக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கியவர் ஸ்பானிய மேதை செர்வாண்டிஸ். கலகம், போராளிக் குணம் அல்லது சீர்த்திருத்த குணம் எப்போதும் குயிக்சாட்டிக் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றில் இத்தகைய தனிநபர்கள் மிகப்பெரிய சமூக மாற்ற - ஆன்மிக மாற்றங்களை உருவாக்கியவர்கள். செர்வாண்டிஸின் டான் கிஹோத்தே ஒரு பைத்திய நிலைக்குச் சென்ற கதாபாத்திரம். அனைத்தையும் சகித்துக் கொண்டோ தங்களது செயலின்மையை, தங்களை அடக்கியாளும், அநீதிக்குட்படுத்தும் சக்திகளைக் கொண்டாடுவதன் மூலமும், அவற்றை தன்மயப்படுத்தி நாயக வழிபாடு செய்தும் மறைத்துக் கொள்ளும் மக்கள் திரள் தங்களை மேம்படுத்திக் கொள்ள சிலபல தன்னிகரற்ற 'பைத்திய நிலை மனிதர்கள்' உலகில் தோன்றி வந்துள்ளனர். அனைத்து ஆதிக்கச் சக்திகளின் குயுக்திகளையும் தங்களுக்குள் அகவயப்படுத்திக் கொண்டு அதுதான் இயல்பு என்று நினைத்து அமிழ் மகிழ்ச்சியில், மகிழ்ச்சி அமிழ்வில் வாழும் மக்கள் திரளுக்கு எதிராக இந்த 'பித்த மனிதர்கள்' தங்களது ஓர்மை மற்றும் மனோபலம் அல்லது உறுதியை நம்பி செயலில் இறங்குவர். உண்மை அல்லது நீதியை நோக்கியே இவர்கள் செயல்பாடு இருக்கும். இவையெல்லாமும் தோல்வியிலும் அபத்தத்திலும் பலிகடா ஆக்கப்படுவதிலும்தான் போய் முடியும். நம் ஜோக்கரும் ஒரு பலிகடாதான்.
ஆம்! பண்டைய இலக்கியங்களில் உண்மை, நீதி ஆகியவற்றுக்கான குரல்கள் 'பித்தநிலை' கதாபாத்திரமாகவோ ஜோக்கர்களாகவோ, காமெடியன்களாகவோ சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, சமூகப் பார்வையில் இவர்கள் ஜோக்கர்கள், ஆனால் உண்மையில் ஓர் ஆன்மிக உணர்வு பலம் (Spiritual Strength) மிக்க மனிதர்கள். செர்வாண்டிஸ் முதல் தொடங்கி ஷேக்ஸ்பியர், ஆண்டன் செகாவ், டாஸ்டாவ்ஸ்கி, நிகலய் கோகல் உள்ளிட்ட கிளாசிக்கல் மேதைகளும், பிரான்ஸ் காஃப்காவின் தி ஹங்கர் ஆர்டிஸ்ட் என்ற தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டு காலவரையரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிரை விடும் கதாபாத்திரம், இன்னும் எண்ணற்ற படைப்பாளிகளுடன், சமீபமாக லத்தீன் அமெரிக்க மேதையான காப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (நூறாண்டுக் கால தனிமை நாவலில் வரும் கலோனல் ஆர்லியானோ புயெண்டியாவின் பித்த நிலை, அரசியல் செயல்பாட்டுத் தனிமை, கடைசியில் ஒர்க்ஷாப்பில் முடங்கிவிடும் தனிமை) வரை இத்தகைய கதாபாத்திரங்கள் பல்வேறு தரப்பட்ட வித்தியாசங்களுடன் வலம் வருவதை நாம் காணலாம்.
இவர்களின் தனிமை ஏகாந்தம் என்ற அமைதியும் சாந்தமும் கொண்ட சுயம் முடக்கும் தனிமையல்ல. மாறாக எந்நேரமும் ஏதோவொன்று அவர்களின் ஆன்மாவை அரித்துத் தின்று கொண்டிருப்பதிலிருந்து விடுபட செயல்பாட்டை, சமூக செயல்பாட்டை அல்லது அரசியல் செயல்பாட்டை கையில் எடுப்பதாகும். இந்த நினைவுகள் ஜோக்கர் படம் பார்த்தவுடன் என் மனக்கண்களில் தோன்றியது. ஆனால் மேற்கூறிய புனைவுகளில் அவைக்கான நுட்பங்களும், விரிவுகளும், ஆழங்களும், அதன் நடைபரிமாணங்களும் பிரம்மாண்டமானவை, வித்தியாசமானவை என்றாலும் அடிப்படை மனநிலை என்ற அளவில் ஒரு ஒப்புமை சாத்தியமே என்று தோன்றுகிறது. இலக்கிய விமர்சனத்தில் இதனை topos என்று அழைப்பார்கள். அதாவது திரும்பத் திரும்ப நிகழும் கதைக்கருக்கள், கதாபாத்திரங்கள்.
உலக சினிமாவில் இத்தகைய கதாபாத்திரங்கள் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயமில்லை, நான் பார்த்த உலக சினிமாக்கள் குறைவு. எனவே இலக்கிய வாசிப்பின் நினைவிலிருந்துதான் ஜோக்கர் என்ற ராஜுமுருகனின் திரைப்படத்தை நான் அணுகுகிறேன். மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றியும், விவரம் தெரிந்தவர்கள் தமிழ் சினிமா வரலாறு என்ற சூழலில் வைத்து இப்படத்தை அணுகுவது இன்னும் விரிவான ஆழமான புலத்தில் அணுகுவதாக அமையும்.
தமிழ் இலக்கியத்தில் சில கதாபாத்திரங்கள் ஜோக்கரின் தன்மையோடு பொருத்திப் பார்க்கக் கூடியது என்றாலும் ஜோக்கரின் அரசியலோ, துன்பியலோ, அவலச்சுவையோ (Tragedy and Absurdity) அதில் இல்லை; அதன் சூழல் வேறு பின்னணி வேறு. உதாரணமாக காசியபனின் அசடு என்ற நாவலில் வரும் கணேசனைக் குறிப்பிடலாம். கணேசன் பாத்திரம் வேறொரு அடிப்படையான வாழ்க்கையின் துயரக் கதையாகும். ஷோபாசக்தியின் கொரில்லா நாவலின் முக்கியக் கதாபாத்திரமான ரொக்கி ராஜ் லேசாக இத்தகைய நினைவை எழுப்புகிறது. குருசோமசுந்தரம் தனது நடிப்பின் அகத்தில் ஒரு டி.ஆர்.ராமச்சந்திரனையும், புறவயமான (எள்ளல்) மிடுக்கில் ஒரு ஜாவர் சீதாராமனையும் (ஏழைபடும் பாடு, அந்தநாள்) நினைவூட்டுகிறார். சாப்ளின் நினைவும் வருகிறது. அதாவது சாப்ளினின் நடிப்புப் படைப்பின் ஆன்மாவைத் தூக்கி வெளியே வீசிவிட்டு அவரது சிந்தனை, மனம், உடல் இயைபுடன் கூடிய விமர்சன உணர்வை அங்கலாவண்யமாக்கும், படைப்பூக்க நடிப்பை வெற்று அங்க சேஷ்டைகளாக நகலாக்கும் சாப்ளின் செல்லப்பாக்களையும், நகலஹாசனையும் நாம் இப்போதைக்குத் தள்ளி வைத்து விட்டு யோசிப்போம். சாப்ளின் நடிப்பு என்ற பரந்துபட்ட ஆன்மாவின் ஒரு தெறிப்புதான் இந்தப் படத்தில் ராஜுமுருகனின் கைவண்ணத்தில் குருசோமசுந்தரம்.
"தருமபுரி அருகே உள்ள கிராமங்களில் கட்டி கட்டி பாதியில் விடப் பட்ட கழிவறைகளைப் பார்க்கலாம். முழு பணத்தையும் வாங்கிக் கொண்டு, பாதி கட்டிவிட்டு போய் விடுவார்கள்" என்ற உண்மை நிலவரமே இந்தப் படம் எடுப்பதற்கான தூண்டுகோல் என்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். மையக் கதாபாத்திரமான குரு சோமசுந்தரம் வகித்த மன்னர் மன்னன் 'ஜனாதிபதி' பாத்திரத்தின் செயல்கள், அவற்றின் காட்சியாக்கம் ஆகியவை ரியாலிட்டியா அல்லது ஃபாண்டசியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திய வண்ணமே இருந்தது. அதுவும் அவர் கண்ணாடி முன் தன்னைப் பார்த்துக் கொள்வது தலையை கையால் அமுக்கி வழித்து விட்டுக் கொள்வது, குடையுடன் கூடிய அந்த டிவிஎஸ் வண்டி... சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கும் அடிப்படையான பிரச்சனைகளுக்கு எதிராக அவரது நூதனமும், விசித்திரமும் கலந்த போராட்டங்கள்... மணல் கொள்ளை, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து சாகும் அவலம், இயற்கையைச் சுரண்டுதல், சிறுசிறு அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்வதில் கூட அரசியல்வாதிகளின், ஆட்சியதிகாரத்தின் ஊழல், ஊதாரித்தனம் இவற்றுக்கு எதிராக சாத்தியமில்லாத போராட்டத்தை அதன் சாத்தியமற்ற அபத்த வடிவங்களிலேயே, நூதன வடிவங்களிலேயே கொண்டு செல்வது, இதுதான் ஜோக்கரின் செயல்பாடு.
அவர் ஏன் இப்படி ஆனார்? என்ற கேள்வியை எழுப்பாமலேயே, இதற்குப் பின்னால் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது, இருந்தேயாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை சற்றே ஒரம்கட்ட வைக்கும் காட்சியாக்கங்கள், கதை நகர்த்தல்களுடன் செல்கிறது. இவர் திடீரென வலது புறம் திரும்பி 'பட்டு இன்னிக்கி அந்த கேஸ் இருக்கு, பாட்டு போடட்டுமா?' என்று கேட்கும்போது வெளியில் அவர் நமக்குக் காட்டும் பித்த முகம் சற்றே அடங்கி யாரிடம் பேசுகிறார், அங்கு யார் இருக்கிறார்? என்ற கேள்வியை கண நேரம் ஏற்படுத்தி விட்டு கதை தன் போக்கில் நகர்கிறது.
எந்நேரமும் இத்தகையோருடன் சமூகம் இணைந்து செயல்படுவதில்லை, வேடிக்கை பார்க்க மட்டுமே கூடும் கும்பல், ஒரு நாடகம் நடத்தப்படுகிறது என்ற மனநிலையில் இவரது விசித்திர, நூதன போராட்டங்களை பார்த்து ரசித்து விட்டு போலீஸ் அவரை அடித்து உதைத்து அழைத்துச் செல்லும் போது ஒரு வழக்கமான 'த்சொ, த்சோ' கூட கொட்டாமல் நகர்ந்து செல்லும் மக்கள் திரள். ஊடகங்களும் இந்த நிகழ்வுகளை நாடகமயமாக்கி, காட்சிப் பொருளாக்கி வணிக நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் போராட்டத்தின் பின்னணியில் உள்ள வலி, அதன் துயரம் எதுவும் தெரிவதில்லை. இந்தக் கதாபாத்திரத்தை அவர் அனுபவிக்கும் வலியுடனும் பாதிக்கப்பட்டோரின் வலியுடனும் சேர்த்துக் காண்பித்துள்ளார் ராஜுமுருகன். இவருடன் வரும் பொன்னூஞ்சல் (மு.ராமசாமி) கதாபாத்திரம் ஜெயகாந்தனின் உருவத்தோற்றத்தை நினைவூட்டுகிறது. பொன்னூஞ்சல் உண்மையில் சட்டம், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருப்பவர், ஒன்றும் காரியமாகாவிட்டாலும் தொடர்ந்து அதிகாரத்திற்கு ஒரு தொந்தரவாக இருக்கிறார், உண்மையில் பொன்னூஞ்சலும், ஜோக்கரும் ஒருவர் மற்றொருவரின் பிரதிபிம்பமே.
ஜோக்கர் பிரசிடெண்ட் அநீதியைத் தட்டிக் கேட்கும் படத்தின் ஆரம்பக் கட்ட காட்சிகளில் இந்தியன், அன்னியன், ரமணா, கத்தி போன்ற வீர சாகச நாயகத்தன்மையை பரிகாசம் செய்வது போல் பகடி (Parody) செய்வது போல் தெரிகிறது. அதாவது வீர சாகச நாயகத்துவத்தின் சாத்தியமின்மையை விளம்புவது போல் உள்ளது. பகடி என்பது mock-heroic என்ற அம்சத்தில். சினிமா நாயகர்களையும், வரலாற்று நாயகர்களையும் கேலிச்சித்திரப்படுத்துவதில் பார்வையாளர்களுக்கு, வாசகர்களுக்கு ஏற்படும் ஒரு நகைச்சுவை பூரிப்பெழுச்சி ஜோக்கரில் ஏற்படாது காரணம் இந்த பகடி அதனடியில் ஒளிந்திருக்கும் துயரத்தையும், துன்பத்தையும் தெரிவிப்பதாகும். இவர்கள் சமூகத்தினால் எள்ளி நகையாடப்படுபவர்கள். ஜோக்கர் எள்ளி நகையாடப்படுபவர்களின் பிரதிநிதி, அவர்களின் தேடலுக்கான படிவம் (type)
ஜோக்கருக்கு என்ன ஆனது? அவர் ஏன் இப்படி ஆனார் என்ற பின்னணியை காண்பிக்கத் தொடங்கியவுடன், அவர் பி.ஏ.வரலாறுப் படிப்பை கைவிட்டு, மினரல் வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தது குறிப்பிடப்படுகிறது. ஆள் சேர்க்க பிரியாணி, மதுபான வகையறா ஆள் சேர்ப்பு உத்தி மைய நீரோட்ட அரசியல் கூட்டங்களுக்குச் செல்லும் போது குரு சோமசுந்தரத்தின் நிராகரிக்கப்பட்ட காதல், திருமண முயற்சி புத்துயிர் பெறுகிறது, அரசியல் கூட்டங்களின் அபத்தத்துடன் கூடவே இந்தக் காதல் காட்சியும், குரு சோமசுந்தரத்துக்கு உள்ள ஆத்மார்த்த நண்பர் (செக்யூரிட்டி) பேசும் அரசியலும் காண்பிக்கப்படுகிறது, அதாவது அவர்தான் 'ஜனாதிபதி' உருவாகக் காரணமாக இருக்கிறார். வீட்டில் கழிப்பறை இருந்தால்தான் திருமணம் என்று காதலி கூற கழிப்பறை கட்டும் முயற்சியில்தான் அவரது வாழ்க்கை உற்சாகத்திற்குச் செல்கிறது. கழிப்பறை அரசியல் தொடங்குகிறது, அரசியல் நாடகம், அவலம் தொடங்குகிறது. ஜோக்கர் உருவான அந்த துயரத்தின் பின்னால் உள்ள அரசியல் அசிங்கங்கள் சினிமா மொழியில் காண்பிக்கப்படுகிறது. இவரது உறுதுணையான அந்த செக்யூரிட்டி நபர் இறந்து விடுகிறார்.
தூய்மை இந்தியா அரசியல் விளம்பர நாடகத்துக்காக இவரது கைவிடப்பட்ட கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும் முயற்சியில் அபத்த அரசியல் விளையாட பாதி எழுப்பப்பட்ட நிலையில் கைவிடப்படுகிறது, குருசோமசுந்தரத்தின் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் ஒரு கடும் இடியுடன் கூடிய மழை இரவில் இடிந்து விழும் அந்தக் கழிப்பறையில் சிக்கி சின்னாபின்னமாகிறாள். கர்ப்பம் கலைவதோடு, மனைவி கோமா நிலைக்குச் செல்கிறார். மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்ல முடியாது அதிகாரம் தடுக்கும் அவலம் பற்றிய காட்சியை கழிவறைத் திறப்பு விழாவுக்கு வரும் உண்மையான ஜனாதிபதி பேசும் வெற்றி வாகைப் பேச்சுக்களும் அடுத்தடுத்து வெட்டி வெட்டி காண்பிக்கப்படுகின்றன.
வாழ்க்கையை தங்களுக்கு கிடைக்கும், கிடைக்க வேண்டிய நியாயமான வசதிகளுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நியாயமான ஆசையிலும், தலையிலும் 'கற்கள்' விழும் விதமாக தூய்மை இந்தியா கழிப்பறை அரசியல் அந்த சிறிய கிராமத்தின் வாழ்வுக்குள் புகுந்து விடுகிறது. அல்லலுறுபவர்களின் வலி (plight of the underdog) என்பதே ஜோக்கரின் பிரதான மையக்கரு. பிரான்ஸ் காப்காவின் அமெரிக்கா என்ற அதிகம் அறியப்படாத நாவலில் தெரெசே என்ற பெண்ணின் தாய் மீது கட்டிடச் செங்கல் குவியல் ஒன்று சரமாரியாக விழுந்து பலியாகும் பயங்கரத் தருணத்தை நினைவு படுத்துகிறது, குருசோமசுந்தரத்தின் மனைவி வெறும் மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் உடலாக வீழ்ந்து விடும் காட்சி.
மனைவியின் கருணைக்கொலையை நாடும் ஜோக்கர் வழக்கு தொடர்கிறார். உச்ச நீதிமன்ற அந்த தீர்ப்புக் காட்சியில் அவர் நிற்கும் விதமும், கவனிக்கும் விதமும் காஃப்காவின் விசாரணை நாவல் காட்சிகளை நினைவூட்டுகின்றன. என்ன காஃப்காவின் கோர்ட் அழுக்கும், குப்பையும், ஊழலும் மலிந்த இடமாக இருக்கும், இது உச்ச நீதிமன்றம்; இருண்ட பல தீர்ப்புகளை வழங்கும் பளபளப்பான கட்டிடம் என்ற முரணுடன் இருக்கிறது. தேசத்தின் மனசாட்சி என்ற பெயரில் நிரூபணம் இல்லாமலேயே பல மரண தண்டனை தீர்ப்புகளை வழங்கும் அந்தக் கட்டிடம், குரு சோமசுந்தரத்தின் மனைவியின் படுத்த படுக்கையான கோமா வாழ்வை பேணிகாப்பதின் புனிதத்தையும், ஒரு உயிரை அழிக்க நமக்கு உரிமையில்லை என்பதையும் வலியுறுத்தும் அபத்தம் தீர்ப்பாக வழங்கப்படுகிறது. அப்போது நீதிபதிகளிடம் பேசும்போதும் ஜோக்கர் தன்னை தீர்மானகரமாக ஒரு (எள்ளல்) ஜனாதிபதியாகவே நினைத்து நீதிபதிகளிடம் பேசுகிறார், நான் ஜனாதிபதி கூறுகிறேன், என் மனைவியை நானே கருணைக் கொலை செய்து கொள்கிறேன் என்கிறார், It is my will and desire என்று டான் கிஹோத்தே ஒரு இடத்தில் கூறுவது நினைவுக்கு வருகிறது, விளைவு மனநலக்காப்பகம், சித்ரவதை!
மீண்டு ஊர் திரும்புகையிலும் பல்வேறு மாநிலங்களைக் கடந்து வருகையில் சாலையோர மனித அவலங்கள் காட்சியாக நம்மைக் கடந்து செல்கிறது. எந்த வித சோகமோ, துயரமோ அற்ற (அதாவது பித்தநிலையின் உறுதியிலும் நினைத்துப் பார்க்க முடியாத துயரம் வாழ்க்கையில் ஏற்பட்ட பின்பு துயரத்தை வெளிப்படுத்துவதும் அபத்தம்தனோ?) நம் எள்ளல்-ஹீரோவின் முகத்தில் முன்னெப்போதும் இருந்ததை விடவும் ஒரு கூடுதல் உறுதி. தன் குடை பொருத்திய டிவிஎஸ்-ஐ எடுத்துக் கொண்டு படத்தின் தொடக்கத்தில் காண்பிக்கப்படும் அதே மிடுக்கு, உறுதியுடன் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கிறது என்ற வேகத்துடன் வரும் போது, மணல் மாஃபியா தன் கோரப்பற்களைக் காட்டி காவு வாங்குகிறது.
இவரது உதவியாளர்/பெண் போராளி தோழர், பொன்னூஞ்சல் வந்து பிணக்கிடங்கில் பார்க்கும் பொழுது கண்கள் திறந்திருக்க அதே உறுதியுடன் கிடக்கிறது ஜோக்கரின் சவம். வெளியில் வரும் பொன்னூஞ்சலை ஏசுகிறது போலீஸ். பொன்னூஞ்சல் அதன் பிறகு பேசுவது அரசியல் பிரச்சாரம் என்பதை விட அரசியல் செயல்பாடு, சமூக செயல்பாடு, நன்மையை நோக்கிய அடியெடுப்பு அனைத்துமே அதிகாரத்தினால் அழித்தொழிக்கப்படுவது பற்றிய ஆதங்கமாகவே தெரிகிறது கோபமாக அல்ல.
நம் ஜோக்கரின் மரணம், காஃப்காவின் கதை மாந்தர்களில் சிலர் கேள்வி கேட்பாரற்று சமூகத்தின் குப்பை போல் பெருக்கித் தள்ளப்படுவதை நினைவூட்டுகிறது. காப்காவின் உருமாற்றம் நாவலில் வரும் கிரிகரி சாம்சா, விசாரணையில் வரும் ஜோசப் கே, தி ஹங்கர் ஆர்டிஸ்ட் கதையில் வரும் அந்தக் உண்ணா நோன்புக் கூண்டுக் கலைஞன், பீனல் காலனியில் கவனிப்பாரற்று கிடக்கும் சித்ரவதை எந்திரத்தில் தானே கடைசியில் போய் படுத்துக் கொள்ளும் பாத்திரம் ஆகியவற்றுடன் நம் நினைவைப் பிணைக்கிறது. ஜோக்கர் ஒரு துயரத்தின் கதையே. மனைவி உயிருக்கு போராடும் அதே கோமா நிலையிலேயே தொடர்வது நோ மேன்ஸ் லேண்ட் என்ற படத்தில் கண்ணிவெடியின் மீது காப்பாற்ற வழியில்லாமல் படுத்துக் கிடக்கும் போராளியின் வாழ்க்கையை சூசகமாகக் கூறும் குறியீடுதான். அல்லது ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா போன்ற மோடி ரக விளம்பர அரசியல் திட்டங்களின் இடிந்து விழும் கக்கூஸ்களின் இந்தியா என்பதன் குறியீடாகவும் வரிந்து கொள்ளலாம்.
ஒட்டுமொத்த மக்கள்தொகையும் தங்களது பொம்மை-பொய்மை அரசியல் தலைவர்களின் போலிப்பிரச்சாரங்களைத் மென்று விழுங்கி, காசுவாங்கி வாக்களித்து, மீண்டும் மென்று, விழுங்கி காசுவாங்கி, வாக்களித்து... இப்படியே அபத்த மீள்நிகழ்வாக நடந்து கொண்டிருக்கும் அபத்த நாடகம் தொடர்கிறது. அதற்கு எதிரான அபத்த போராட்ட வாழ்க்கையும் தொடர்கிறது. ஆனால் மாற்றம் எப்போது என்ற மார்க்சின் கேள்வியும், மீள வழியில்லை (No exit) என்ற சார்த்தரின் பதிலும் நம்மிடையே ஒருங்கேயிருப்பதன் அபத்தமும் நமக்குப் புரிகிறது. ஜோக்கர் சாத்தியமில்லாததன் அரசியலைப் பேசுகிறான். அசாத்தியத்தால் விளையும் அபத்தமே அவனது மரணம்.
ஜோக்கர் படத்தின் அரசியல் நோக்கம், அதன் வாயிலாக அது முன்வைக்கும் போராட்ட அரசியல் இவையெல்லாம் படத்தின் அங்கமாக இருப்பினும், இவையல்லாமலேயே ஜோக்கர் என்ற ஒரு அபத்த நாயகனின் வாழ்க்கை அல்லது எள்ளல் நாயகனின் அபத்த வாழ்க்கை, படத்தின் தெளிந்த அரசியல் என்ற நீரோடையின் அடியில் நகரும் இருண்ட வடிவமாக, நிழல் வடிவமாக, படிமமாக நம் மனதில் ஒரு துன்பியலாக, அவலச்சுவையாகப் பதிகிறது.
ஜோக்கர் ஆவதற்கு முன்பான குருசோமசுந்தரத்தின் வாழ்வுச் சித்தரிப்பை story of innocence (unfallen) என்றால் தூய்மை இந்தியா என்ற அரசியல் கிராமத்திற்குள் நுழைந்து மனைவிக்கு ஏற்பட்ட மீளமுடியாத் துயரத்திற்குப் பிறகான பித்தநிலை செயல்பாட்டை story of experience (fallen) என்று வகைப்படுத்தலாம்.
ரஷ்ய கிளாசிக்கின் சுவடுகளையும், போஸ்ட் மாடர்ன் லத்தீன் அமெரிகக் கணங்களையும் ஒருங்கே கொண்ட திரைப்படம் ஜோக்கர். இந்தியனின் கமல்ஹாசன் சுபாஷ் சந்திரபோஸ் உடையை அணிந்து கொள்வதையும், கபாலியில் ரஜினி கோட் அணிந்து கொள்ளும் தருணத்தையும், ஜோக்கர் தனது கோட் சூட்டை எடுத்துக்கொள்ளும் தருணம் பகடி செய்கிறது. ஜோக்கர் கோட் அணிவது அநியாயங்களுக்கு எதிராக போராடுவதற்காக, இந்தியனும், கபாலியும் கோட் அணிவது கொன்றழிப்பதற்காக.
ஆனாலும் ஒன்றை இங்கு நாம் முத்தாய்ப்பாக கூறிவிடுவது நல்லது. வெகுமக்களின் அரசியலை நீக்கம் செய்யும், வெகுமக்களையே அரசியல் நீக்கம் செய்யும் அதிகாரத்தின் நுண்ணிய செயல்பாடுகளின் சிக்கல் முடிச்சுகள் நிறைந்த உலகமயமாதல், தாராளமயமாதல் காலக்கட்டத்தில், போலி ஜனநாயகம் என்ற போலி முழுமையில் இழுத்து அடைக்கப்படும் (இதைத்தான் inclusivity என்று அதன் அர்த்தம் புரியாமல் சிலர் கொண்டாடி வருகின்றனர்) அரசியல் வடிவங்களான ஆர்டிஐ ஆக்டிவிசம், மனித உரிமைகள் போராட்டம், பொதுநல வழக்குகள் ஆகியவை கேலிக்கூத்துகளாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஏதோ உண்மையும் நீதியும் இருப்பதான ராஜுமுருகனின் நம்பிக்கையுடன் நம்மால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒருவகையில் போலி ஜனநாயகம் அளிக்கும் வரம்புக்குட்பட்ட போராட்ட சலுகைகளே இத்தகைய அரசியல் வடிவங்கள். ஆனாலும் இதுவும் அதன் எல்லை கடந்து தீவிரம் கொள்ளும்போது அதிகாரம் சுவடில்லாமல் அழித்தொழிக்கும் என்பதே கண்கூடு. எனவே சட்டத்திற்குள் உண்மையோ, நீதியோ இல்லை, சட்டத்திற்கு வெளியேதான் உண்மையும் நீதியும் உள்ளன. Justice beyond law, சட்டத்திற்கு அப்பால் தர்மம், நீதி என்றே பின்நவீனத்துவம் கூறுகிறது. சாக்ரடீசின் good beyond being- இருப்பிற்கு அப்பால் நன்மை என்பதன் ஒரு மறுவடிவமாகவே சட்டத்திற்கு அப்பால் நீதி, தர்மம், உண்மை என்பதை அடையாளம் காண வேண்டியுள்ளது. இந்த நீதி, தர்மத்தின் வலுவில்தான் அதிகாரத்துக்கு எதிராக உண்மைகளை பேச வேண்டியுள்ளது.
லட்சம் தலைகள் கோடி ஆயுதங்களுடன் நம் கடவுளர்களின் உருவம் போல் இருக்கும் அதிகாரத்தின் முன் தீவிர அரசியல் செயல்பாடே சுய அழிவுக்கான செயல்பாடோ என்று ஐயம் கொள்ள வைக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
எனவே, ஜோக்கர் என்ற கதாபாத்திரம் வாழும் வாழ்க்கையினூடாகவும் அவரது மரணமும் அவன் மனைவி வெறும் மூச்சு மட்டுமே உள்ள உடலாக ஆக்கப்பட்டதும் உணர்த்தும் உள்ளார்ந்த அரசியல் நம்மிடையே ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியம். ஜோக்கரின், பொன்னூஞ்சலின் அக்கறைகள், கரிசனைகள் முக்கியமே தவிர இந்தப் படம் பேசும் அரசியலிலும், போராட்ட வடிவங்களிலும் உண்மையான அரசியலைக் காண்பது அபத்தமே.
ஆர்.முத்துக்குமார் - தொடர்புக்கு Muthukumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT