Published : 25 Oct 2014 10:10 AM
Last Updated : 25 Oct 2014 10:10 AM

பிகாசோ 10

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.

• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.

• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.

• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.

• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.

• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.

• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.

• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.

• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x