Published : 02 Jun 2016 10:16 AM
Last Updated : 02 Jun 2016 10:16 AM

மணிரத்னம் 10

பிரபல திரைப்பட இயக்குநர்

பிரபல இயக்குநரும் திரைப்படத் துறையில் ஒரு மாமேதையாக போற்றப்படுபவருமான மணிரத்னம் (Manirathnam) பிறந்த தினம் இன்று (ஜூன் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மதுரையில் பிறந்தவர் (1956). இவரது இயற்பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணி. தந்தை திரைப்படத் தயாரிப்பாளர். இவரது அண்ணன் விநியோகஸ்தர், தயாரிப்பாளர். எனவே திரைப்பட ஆர்வம் இவருக்கு இயல்பிலேயே இருந்தது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மும்பை ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார்.

# 1983-ல் திரையுலகில் பிரவேசித்தார். திரைப்படத்துக்காக மணிரத்னம் எனப் பெயர் சூட்டிக்கொண்டார். யாரிடமும் உதவி இயக்குநராக இவர் பணியாற்றியதில்லை. முதன் முதலில் ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னடத் திரைப்படத்தை இயக்கினார். இது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், கர்நாடக மாநிலத்தின் அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருதை வென்றது.

# அதன் பிறகு இரண்டு தமிழ்ப் படங்களையும் ஒரு மலையாளப் படத்தையும் இயக்கினார். இவையும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. 1986-ல் இவரது ‘மவுன ராகம்’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. வர்த்தக ரீதியிலும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாகத் திகழ்ந்தது.

# 1987-ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘நாயகன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக இவரை உயர்த்தியது. இதில் கதாநாயகனாக நடித்த கமல் ஹாசனுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. உலக அளவில் சிறந்த 100 படங்களில் ‘நாயகன்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

# தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் சுருக்கமான வசனங்கள், நேர்த்தியான தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பெயர்போனவை. வசனங்களை அதிகம் நம்பாமல் காட்சிகளால் கதை சொல்வது இவரது சிறப்பு.

# பகல் நிலவு, தளபதி, இந்திரா, அக்னி நட்சத்திரம், இதய கோவில், மவுன ராகம், நாயகன், அஞ்சலி, ரோஜா, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற இவரது படங்கள் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களாகப் பேசப்படுகின்றன.

# 1992-ல் வெளிவந்த இவரது ‘ரோஜா’ திரைப்படம் மென்மையான காதலோடு தீவிரவாதப் பிரச்சினையையும் கையாண்டது. தேசிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஏ.ஆர். ரஹ்மானைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்தது இவரது ரோஜா திரைப்படம்தான்.

# 1995-ல் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ என்னும் பெயரில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதே ஆண்டில் ‘பம்பாய்’ திரைப்படம் இவரது இயக்கத்தில் வெளிவந்து மகத்தான வெற்றிபெற்றது. இவரது அனைத்துத் திரைப்படங்களுமே இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்தன.

# பஸ்ஸில் பயணம் செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். இவரது அனைத்துப் படங்களிலும் பேருந்து காட்சி நிச்சயம் இடம் பெறும். சைவ உணவு பிரியர். வீட்டிலும் நண்பர்களிடமும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் கொண்டவர் என்றாலும் இவருடைய படங்களில் அதிகம் ஆங்கிலக் கலப்பு இருக்காது.

# தென்னிந்திய மற்றும் வட இந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளை 9 முறை பெற்றிருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களின் 12 விருதுகளை வென்றுள்ளார். பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவில் புதிய போக்குகளைக் கொண்டுவந்தவர் எனப் போற்றப்படும் மணிரத்னம், இன்று 61-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போதும் திரைப்படத் துறையில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x